கொளும்பு, ஜன 2- திடீர் பதற்றத்துக்குக் காரணமாகிவிட்டார் பத்திரிகையாளர் மகா.தமிழ்ப் பிரபாகரன். அண்மையில் அவர் இலங்கை சென்று இருந்தார். ‘இராணுவ முகாமைப் படம் பிடித்தார் என்பதால் அவரைக் கைது செய்துவிட்டார்கள் என்று செய்தி பரவியது.
சுற்றுலா விசாவில் வந்தவர், அதற்கான விதிமுறைகளை மீறிவிட்டார். அவரை பயங்கவாத தடுப்பு இராணுவம் விசாரணை நடத்துகிறது என்று தகவல் வந்தது.
இந்த நிலையில் இரண்டு நாட்கள் இடைவெளியில் மகா.தமிழ்ப் பிரபாகரனை விடுவித்து விட்டது இலங்கை அரசு.
மகா.தமிழ்ப் பிரபாகரன் இலங்கையில் சந்தித்த திகில் பின்வருமாறு :
டிசம்பர் 21-ம் தேதி இலங்கைக்கு அங்குள்ள மக்களின் இன்றைய நிலைமையை அறிவதற்காக சென்றேன். தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் வாகனத்தில் கிளிநொச்சி கிராமங்களுக்குச் சென்றேன்.
ஓர் இடத்தில் சிறீதரன் பங்கேற்ற கூட்டம் நடந்தது. நான் அதில் கலந்து கொள்ளவில்லை. அந்த வழியாகச் சென்ற இராணுவத்தைப் படமெடுத்தேன். நான் படம் எடுத்தது அவர்களுக்குத் தெரியும். என்னை அவர்கள் பார்த்துக் கொண்டே அமைதியாகச் சென்றனர்.
பின்னர் நாங்கள் வலைப்பாடு என்ற கடற்கரைப் பகுதிக்குச் சென்றோம். அங்கு பாதிரியார் ஒருவரை சிறீதரன் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தார். நான் பிரதேச உறுப்பினரான பசுபதிப்பிள்ளை என்பவரோடு கடற்கரை ஓரத்துக்குச் சென்று படம் எடுத்தேன்.
பிறகு, நாங்கள் வந்த வாகனத்தை நோக்கி நடந்தேன். அப்போது ஒரு வாகனத்தில் இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த பத்துக்கும் மேற்பட்டோர் வந்து என்னைச் சுற்றி வளைத்தனர். கையில் வைத்திருந்த கமராவையும் பறித்துக்கொண்டனர்.
துப்பாக்கி முனையில் எனது இரண்டு கைகளையும் முறுக்கி இறுகப் பிடித்துக்கொண்டனர். இராணுவத் தளபதி அங்கே வந்த பின்னர் என்னை காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.
நாச்சிக்குடா காவல் நிலையத்தில் சீறிதரனையும் என்னையும் விசாரித்தனர். கமராவில் இருந்த எல்லா படங்களையும் இராணுவத்தினர் பிரதி செய்துகொண்டனர்.
இராணுவம் சொல்வதை மட்டும்தான் காவல்துறையினர் கேட்டனர்.
இரவு 10.30 மணிக்கு கிளிநொச்சி காவல் நிலையத்துக்குக் கொண்டு சென்றனர். அங்கே நள்ளிரவு 2 மணி வரை என்னை விசாரித்து வாக்குமூலம் வாங்கினார்கள்.
நான் சொன்னது எதையும் அவர்கள் எழுதியதாகத் தெரியவில்லை. “நீ சொல்றதைச் சொல்லு. நாங்க எழுதிக்குவோம். நாங்க ஒண்ணும் இந்தியன் போலீஸ் கிடையாது. இது எங்க நாடு. அதை மனசுல வெச்சு நடந்துக்கோ” என்று சொல்லி, என்னிடம் கையெழுத்து வாங்கினார்கள்.
அடுத்த நாள் பயங்கரவாத புலனாய்வு துறையிடம் (டி.ஐ.டி) ஒப்படைக்கப்பட்டேன்.
அப்போது டி.ஐ.டி. அதிகாரி ஒருவர், “இதுதான் நீ இலங்கைக்கு வருவது கடைசி முறை. இந்த ஊரோட அழகை போற வழியில பார்த்துக்கோ” என்று சொல்லி, என்னை வெள்ளை வேனில் ஏற்றினார்கள்.
அந்த வேனின் உள் அமைப்பைப் பார்த்தபோதுதான் எனக்குப் பதற்றம் தொற்றியது. அங்கிருந்து என்னை கொழும்பு கொண்டு சென்றனர்.
டி.ஐ.டி. அலுவலகத்தின் ஆறாம் மாடிக்கு அழைத்துச் செல்லப்பட்டேன். நான்கு நாட்கள் தொடர்ந்து கிட்டத்தட்ட 30 அதிகாரிகள் என்னை விசாரித்தனர்.
பிரபாகரன் நாய்க்குட்டி மாதிரி எங்ககிட்டதான் செத்தான் தெரியுமா? என சொல்லிவிட்டு என் முகத்தைப் பார்த்தனர்.
நான் அமைதியாக இருந்தேன். “நீ ஜெனீவா போயிருக்கியா? போகும் திட்டம் ஏதும் இருக்கிறதா?” என்று கேட்டனர். அதற்கும் நான் அமைதியாகவே இருந்தேன்.
73 மணி நேரத்துக்குப் பிறகு என்னை குடிவரவு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அவர்கள் என்னை நாடு திருப்பினார்கள் என்று திகிலுடன் விவரித்தார்.
பத்திரிகையாளர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவதில் இலங்கை நான்காவது இடத்தில் இருக்கிறது. அதை மீண்டும் ஒரு முறை உறுதிப்படுத்தியிருக்கிறது இந்தச் சம்பவம்.