கோலாலம்பூர், ஜனவரி 9 – மலேசிய அமைச்சர் ஒருவரின் சிறப்பு அதிகாரியும் மேலும் இருவரும் ஊழல் வழக்கொன்று தொடர்பாக விசாரணைக்காக கைது செய்து தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருப்பதாக ஊழல் தடுப்பு ஆணையம் அறிவித்துள்ளது.
அவர்களில் ஒருவர் டத்தோ பட்ட அந்தஸ்து கொண்ட வணிகப் பிரமுகர் என்றும் அறியப்படுகின்றது.
அமைச்சு ஒன்றின் சுத்திகரிப்பு ஒப்பந்தம் தொடர்பான ஊழல் வழக்கு தொடர்பில் இந்த மூவரும் விசாரிக்கப்படுவதாகக் குறிப்பிட்ட ஊழல் தடுப்பு ஆணையம் அவர்களின் பெயர்களை வெளியிடவில்லை.
அமைச்சரின் சிறப்பு அதிகாரி சிலாங்கூரிலுள்ள ஒரு உணவு விடுதியில் தங்களின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாகவும் ஊழல் தடுப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.
இன்று காலை புத்ரா ஜெயா கீழ்நிலை (மாஜிஸ்ட்ரேட்) நீதிமன்றத்தில் அவர்கள் முன்னிலைப்படுத்தப்பட்டனர். அவர்கள் 30க்கும் 40க்கும் இடைப்பட்ட வயதினர் ஆவர்.
மூன்று முதல் நான்கு நாட்களுக்கு அவர்களைத் தடுத்து வைக்கும் உத்தரவை மாஜிஸ்ட்ரேட் நூர் டாலியா அஸ்மி இன்று பிறப்பித்தார்.
அந்த மூவரில் இருவர் ஆண்கள், மற்றொருவர் பெண்ணாவார்.
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையச் சட்டத்தின் கீழ் இந்த ஊழல் வழக்கு விசாரிக்கப்பட்டு வருகின்றது.