பாங்காக், ஜன, 27- தாய்லாந்து நாட்டின் பிரதமர் இங்க்லக் ஷினவத்ராவைப் பதவி விலகக் கோரி கடந்த நவம்பர் மாதம் துவங்கிய போராட்டம் நாளுக்குநாள் தீவிரமடைந்து வருகின்றது. நாடாளுமன்றத்தைக் கலைத்து வரும் 2ஆம் தேதி பொதுத் தேர்தலை அறிவித்த நிலையிலும் காபந்து பிரதமராக உள்ள இங்க்லக்கை நீக்க எதிர் தரப்பினர் போராடி வருகின்றனர்.
பொதுத் தேர்தலைத் தள்ளி வைக்கலாம் என்று அரசியலமைப்பு நீதிமன்றம் தெரிவித்த நிலையிலும் குறிப்பிட்ட தேதியில் தேர்தலை நடத்துவதில் இங்க்லக் முனைப்பு காட்டி வருகின்றார். இதனை முன்னிட்டு நேற்று அந்நாட்டின் 76 மாகாணங்களில் உள்ள 50 வாக்களிப்பு மையங்களில் ஆரம்ப வாக்குப்பதிவு நடத்த திட்டமிடப்பட்டது.
ஆனால், எதிர்த்தரப்பினர் நடத்திய முற்றுகைப் போராட்டத்தால் 45க்கும் மேற்பட்ட வாக்களிப்பு மையங்கள் மூடப்பட்டன. அரசுத்தரப்பினருக்கும், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே அப்போது ஏற்பட்ட மோதல்கள் வன்முறையாக மாறத் தொடங்கியபோது காவல்துறையினர் தலையிட்டு துப்பாக்கி சூடு நடத்தியதில் ஒருவர் பலியானார்.
ஐந்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பலியானவர் போராட்டத் தலைவர்களுள் ஒருவரான சுதின் தரடின் என்று பின்னர் காவல்துறையால் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை தேசிய காவல்துறையின் செய்தித் தொடர்பாளர் பியா உடாயோ தெரிவித்தார். இந்த போராட்டத்தால் 11 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.
கடந்த புதன்கிழமை அன்று தாய்லாந்தில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. அதன்பின் நேற்று நடைபெற்றுள்ள இந்த வன்முறை இந்த மாதத்தில் நடந்த மிகப் பெரிய கலவரமாகக் கருதப்படுகின்றது.
கடந்த எட்டு ஆண்டுகளாக அந்நாட்டில் தென்பட்டு வரும் அரசியல் இறுக்கத்தில் சமீபகாலமாக வன்முறைக் கலவரங்கள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன.இது தென்கிழக்கு ஆசியாவின் இரண்டாவது பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட அந்நாட்டின் வளர்ச்சியையும், முதலீட்டாளர்களின் நம்பிக்கையையும் பாதிப்பதாகவே அமைந்துள்ளது