Home நாடு “பழனிவேல் பற்றி சொல்வது உண்மையில்லை என்றால் வேள்பாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” –...

“பழனிவேல் பற்றி சொல்வது உண்மையில்லை என்றால் வேள்பாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” – டத்தோ ஹென்ரி

537
0
SHARE
Ad

henryபிப்ரவரி 5 – கடந்த 13வது பொதுத் தேர்தலில் பினாங்கு மாநிலத்தில் இரண்டு சட்டமன்றங்களில் ம.இ.கா. வேட்பாளர்களை நிறுத்துவது தொடர்பில் ம.இ.கா தேசியத்தலைவர் பழனிவேல், பினாங்கு ஜசெக பற்றியும் அதன் தலைவர்கள் பற்றியும் கூறியதாக வேள்பாரி கூறிவரும் குற்றச்சாட்டை கட்சி கடுமையாகக் கருத வேண்டும் என்றும் அப்படி வேள்பாரி கூறுவது உண்மையில்லையென்றால் அவர்மீது மத்திய செயலவை பாரபட்சமின்றி கடுமையான ஒழுங்கு நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றும் ம.இ.கா பாகான் தொகுதி தலைவரும், ம.இ.கா பினாங்கு மாநில தொடர்புக் குழு பொருளாளருமான டத்தோ ஹென்ரி பெனடிக்ட் ஆசீர்வாதம் (படம்) வலியுறுத்தியுள்ளார்.

#TamilSchoolmychoice

இந்த விவகாரத்தில் தனது பெயரும் அடிக்கடி பயன்படுத்தப்பட்டு வருவதால் இனியும் பொறுமை காப்பது சரியல்ல என்ற முடிவோடு தனது மௌனத்தைக் கலைத்து அறிக்கை விடுக்க முடிவு செய்திருப்பதாகவும் டத்தோ ஹென்ரி மேலும் தெரிவித்தார்.

பினாங்கு மாநிலத்தின் இரண்டு சட்டமன்றங்களுக்கு பிறை தொகுதிக்கு ஜெ.தினகரனையும், பாகான் டாலாம் சட்டமன்றத்திற்கு டத்தோ ஹென்ரியையும் வேட்பாளர்களாக நிறுத்தினால் ம.இ.காவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும் என பழனிவேலுவிடம் தான் வலியுறுத்தியதாக வேள்பாரி கூறியிருந்தார்.

ஆனால், பழனிவேலுவோ, லிம் குவான் சிறப்பாக பணியாற்றுவதால் ஜசெகவே தொடர்ந்து பினாங்கில் ஆட்சி செய்ய வேண்டும் என்றும் துணை முதல்வர் ராமசாமி தனது நண்பர் என்பதால் அவருக்கு எதிராக வலுவான வேட்பாளரை நிறுத்தக் கூடாது என்றும்  கூறியதாகவும் மேலும் வேள்பாரி குற்றம் சாட்டியிருந்தார்.

இந்த விவகாரம் குறித்து விடுத்த அறிக்கையில் டத்தோ ஹென்ரி மேலும் பின்வருமாறு கூறியிருக்கின்றார்:-

 “நடந்து முடிந்த 13வது பொதுத் தேர்தலில் ம.இ.காவுக்கு ஒதுக்கப்பட்ட இரண்டு சட்டமன்றத் தொகுதிகளையும் மீண்டும் தக்க வைத்துக் கொள்ள பினாங்கு ம.இ.காவினர் கடுமையாகப் பாடுபட்டோம். குறிப்பாக பாகான் டாலாம் சட்டமன்றத் தொகுதியை மீண்டும் ம.இ.கா வென்றெடுக்க வேண்டுமானால், ம.இ.கா பாகான் தொகுதியின் தலைவர் என்ற முறையிலும் அந்த சட்டமன்ற தொகுதியில் பல அரசியல், சமூகப் பணிகளை மேற்கொண்டு அந்த வட்டார மக்களின் ஆதரவைப் பெற்றவன் என்ற முறையிலும் நான் அந்த சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று பல தரப்பிலும் கோரிக்கை வைக்கப்பட்டது. சகோதரர் டத்தோஸ்ரீ வேள்பாரியும் அவ்வாறே தேசியத் தலைவரிடத்தில் கோரிக்கை வைத்திருக்கின்றார் என்பதும் அவரது அறிக்கையின் மூலம் புலப்படுகின்றது”

“ஆனால், எனக்கு அந்த சட்டமன்றத் தொகுதி வழங்கப்படவில்லை என்றாலும் கட்சிக் கட்டுப்பாடு கருதி நான் தேசியத் தலைவரின் முடிவை ஏற்றுக்கொண்டதோடு, பாகான் டாலாம் சட்டமன்றத் தொகுதியில் ம.இ.கா வேட்பாளரின் வெற்றிக்காக நானும் எனது குழுவினரும் கடுமையாகப் பாடுபட்டோம்.

“இப்போது, அந்த சம்பவங்களைத் தொடர்ந்து தேசியத் தலைவர் பழனிவேல் பினாங்கு ஜசெக பற்றியும், பினாங்கு மாநில ஜசெக தலைவர்கள் பற்றியும் கூறியதாக வேள்பாரி முன்வைத்துள்ள கருத்துகள் கடுமையானதாகக் கருதப்பட வேண்டும். காரணம், இதனால் கட்சியின் தோற்றமும், மதிப்பும், குறிப்பாக பழனிவேலுவின் தலைமைத்துவத்தின் மீதான மரியாதையும் மோசமாக சீர்குலைந்துவிட்டது”

“எனவே, இது குறித்து நாளை நடைபெறும் ம.இ.கா மத்திய செயலவைக் கூட்டத்தில் ஆழமாகப் பரிசீலிக்க வேண்டும். தீவிரமாக விவாதிக்க வேண்டும். வேள்பாரி மீது ஒழுங்கு நடவடிக்கைக் குழு முறையான விசாரணை நடத்த மத்திய செயலவை உத்தரவிட வேண்டும். அப்படி வேள்பாரி கூறுவது உண்மையா என மத்திய செயலவையோ, ஒழுங்கு நடவடிக்கைக் குழுவோ முறையாக விசாரிக்க வேண்டும். அவ்வாறு வேள்பாரி கூறுவது உண்மையில்லையென்றால், அவர் மீது தயங்காமல், நடவடிக்கை எடுக்கவேண்டும். முன்னாள் தேசியத் தலைவரின் மகன் என பாரபட்சம் காட்டாமல், ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவேண்டும். சட்டத்தின் முன் எப்படி அனைவரும் சமமாகப் பார்க்கப்பட வேண்டுமோ, அதே போன்று கட்சிகளின் சட்டவிதிகளைப் பொறுத்தவரை அனைத்து உறுப்பினர்களும் சரிசமமாகக் கருதப்பட வேண்டும். இதையேதான் நாளை நடைபெறப்போகும் மத்திய செயலவைக் கூட்டத்தில் நானும் வலியுறுத்தப் போகின்றேன்” என்றும் டத்தோ ஹென்ரி ஆணித்தரமாகக் கூறினார்.

“தலைமைத்துவத்தை யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் விமர்சிக்கலாம் அதற்காக அவர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாது என்பது கட்சியின் நிலையாகப் போய்விட்டால் இதனால் கட்சியில் கட்டுப்பாடும், ஒழங்கும் சீர்குலைந்து போய்விடும்” என்றும் டத்தோ ஹென்ரி நினைவுபடுத்தினார்.

நாளை நடைபெறும் ம.இ.கா மத்திய செயலவைக் கூட்டத்தில் தனது மற்ற சக மத்திய செயலவை உறுப்பினர்களும் இதனையே வலியுறுத்துவார்கள் என்றும் தான் எதிர்பார்ப்பதாகவும் ஹென்ரி மேலும் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.