பிப்ரவரி 5 – மைக்ரோசோஃப்ட் நிறுவனத்தில் பணி புரியும் தொழில் நுட்ப ஊழியர்களில் கணிசமானவர்கள் இந்தியர்கள் என்பது அனைவரும் அறிந்ததுதான். ஆனால், தற்போது முதல் முறையாக அந்த நிறுவனத்தின் வரலாற்றில், சத்யா நாதெல்லா (படம்) என்ற இந்தியர் ஒருவர் அதன் தலைமை நிர்வாக அதிகாரியாக (CEO) நியமிக்கப்பட்டிருக்கின்றார்.
நடப்பு தலைமை நிர்வாக அதிகாரி ஸ்டீவ் பால்மர் பதவி விலகிச் செல்வதை முன்னிட்டு, அந்த நிறுவனம் கடந்த சில மாதங்களாக தனது அடுத்த புதிய முதல் நிலை அதிகாரியைத் தேடி வந்தது.
சத்யா நாதெல்லா மைக்ரோஃப்ட் நிறுவனத்திற்குப் புதியவரல்ல. அதன்‘கிலௌட் மற்றும் எண்டர்பிரைஸ்’ பிரிவின் தலைவராக இதுவரை பணியாற்றி வந்தார். இப்போது அந்த நிறுவனத்தின் இயக்குநர் வாரியத்தில் தலைமை நிர்வாக அதிகாரி என்ற முறையில் இடம் பெறுகின்றார்.
“இன்றைய சூழ்நிலையில், மைக்ரோசோஃப்ட் நிறுவனத்தை வழிநடத்த சத்யாவை விட சிறந்த நபரை எங்களால் அடையாளம் காண முடியவில்லை” என மைப்ரோசோஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் சத்யாவுக்குப் புகழாரம் சூட்டியுள்ளார்.
தொழில் நுட்ப ஆலோசகராக மீண்டும் பில் கேட்ஸ்…
தற்போது தலைவராக இருக்கும் பில் கேட்ஸ் தனது பதவியிலிருந்து விலகிக் கொண்டு அதற்குப் பதிலாக சத்யாவின் கரங்களை வலுப்படுத்தும் வண்ணம் மைக்ரோசோஃப்டின் தொழில் நுட்ப ஆலோசகராகவும், நிறுவனர் என்ற முறையிலும் தொடர்ந்து இயக்குநர் வாரியத்தில் இடம் பெற்றிருப்பார்.
இதன் காரணமாக, தொழில் நுட்ப உலகில் பலத்த போட்டித் தன்மை ஏற்பட்டுள்ள இந்த காலகட்டத்தில் பில் கேட்ஸ் மீண்டும் தனது நிறுவனத்தில் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்குவதிலும், புதிய தொழில் நுட்பங்களை வடிவமைப்பதிலும் தீவிரமாக ஆர்வம் காட்டுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
“மைக்ரோசோஃப்ட் “புத்தாக்க சாதனங்களை உருவாக்கவும், வளர்ச்சியைக் காணவும்” தனது அடுத்த கட்ட பயணத்தை நோக்கி நகரும் இந்த வேளையில் நிரூபிக்கப்பட்ட தலைமைத்துவ ஆற்றலையும், பொறியியல் திறன்களையும், வணிக தூர நோக்கையும், ஊழியர்களை ஒன்றிணைக்கும் திறனும் கொண்ட சத்யா, பொருத்தமானவராக இருப்பார். தொழில் நுட்பம் இந்த நவீன யுகத்தில் எவ்வாறு பயன்படுத்தப்பட வேண்டும், அனுபவிக்கப்பட வேண்டும் என்பதில் தெளிவான தூர நோக்கு சிந்தனை கொண்ட சத்யா போன்றவர்தான், மைக்ரோசோப்ட் தனது அடுத்த கட்டத்தை நோக்கிச் செல்லும் இந்த வேளையில் எங்களுக்குத் தேவையானவராக கருதப்படுகின்றார்” என்றும் பில் கேட்ஸ் சத்யா குறித்து பெருமையாகக் குறிப்பிட்டுள்ளார்.
20 ஆண்டுகளுக்கும் மேலாக மைக்ரோசோஃப்டில்…
1992ஆம் ஆண்டு முதல் மைக்ரோசோஃப்ட் நிறுவனத்தில் சத்யா பணியாற்றி வருகின்றார்.
தனது நியமனம் பற்றி குறிப்பிட்ட சத்யா “இந்த உலகை தனது தொழில்நுட்ப புரட்சியின் மூலம் மாற்றியமைத்த அபூர்வமான நிறுவனங்களுள் ஒன்றான மைக்ரோசோஃப்ட் நிறுவனத்தை வழிநடத்த வாய்ப்பு கிடைத்ததை ஒரு பெரிய கௌரவமாகக் கருதுகின்றேன். மைக்ரோசோப்ட் முன்னால் விரிந்து கிடக்கும் வாய்ப்புகள் அளவுக்கதிகமாகும். ஆனால் அவற்றை அடைய, நாம் நமது தெளிவான இலக்கை நோக்கி கவனத்தைக் குவிக்க வேண்டும், துரிதமாக செயல்பட வேண்டும், உருமாற்றங்களை உருவாக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.