நியூயார்க் – உண்மையிலேயே அவர்கள் ஓர் அனைத்துலக நிறுவனத்தை நிர்வகிக்கும் சிறந்த நிர்வாகத் திறன் கொண்டவர்களா?
அல்லது இந்தியாவின் தொழில்நுட்ப வணிகத்தைக் குறிவைத்து அவர்கள் முதன்மைச் செயல் அதிகாரிகளாக அனைத்துலக நிறுவனங்களில் நியமிக்கப்படுகிறார்களா?
அல்லது ஓர் இந்தியரை முதன்மைச் செயல் அதிகாரியாக நியமிப்பது வணிக நிறுவனங்களிடையே ஒரு பாரம்பரியமாகப் பின்பற்றப்படுகிறதா?
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் இவை!
காரணம், நாளுக்கு நாள் ஒவ்வொரு முன்னணி அனைத்துலக நிறுவனமும், குறிப்பாக தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் தங்களின் முதன்மைச் செயல் அதிகாரிகளாக இந்தியர்களைத்தான் நியமிக்கின்றன.
கணினிகள் தயாரிப்பு நிறுவனமான ஐபிஎம் (IBM) தனது அடுத்த தலைமைச் செயல் அதிகாரியாக அரவிந்த் கிருஷ்ணா (படம்) என்பவரை நியமிப்பதாக கடந்த வாரம் அறிவித்தது. அதைத் தொடர்ந்து “வி வோர்க்” (WeWork) என்ற நிறுவனம் சந்தீப் மத்ரானி என்பவரை தலைமைச் செயல் அதிகாரியாக அறிவித்தது.
இந்த அறிவிப்புகளைத் தொடர்ந்து கீழ்க்காணும் 13 முன்னணி அனைத்துலக நிறுவனங்கள் இந்தியர்கள் தலைமைச் செயல் அதிகாரிகளாகக் கொண்டுள்ளன.
- சாந்தனு நாராயணன் – அடோபி (Adobe)
- சுந்தர் பிச்சை – அல்பாபெட், கூகுள் நிறுவனம்
- சத்யா நாராயண நடெல்லா – மைக்ரோசோப்ட்
- ராஜீவ் சூரி, நோக்கியா
- புனித் ரஞ்சன், டிலோய்ட் (Deloitte)
- வசந்த் வாஸ் நரசிம்மன் – நோவார்ட்டிஸ் (Novartis)
- அஜய்பால் அஜய் சிங் பங்கா – மாஸ்டர் கார்ட் (Mastercard)
- ஐவான் மேனுவல் மெனிசெஸ் – டியாஜியோ (Diageo)
- நிராஜ் எஸ்.ஷா – வே ஃபேர் (Wayfair)
- சஞ்சய் மெஹ்ரோத்ரா – மைக்ரோன் (Micron)
- ஜியோர்ஜ் குரியான் – நெட்எப் (NetApp)
- நிகேஷ் அரோரா – பாலோ அல்டோ நெட்வோர்க்ஸ் (Palo Alto Networks)
- டினேஷ் சி.பலிவால் – ஹர்மான் இண்டர்நேஷனல் இண்டஸ்ட்ரீஸ் (Harman International Industries)
இந்தப் பட்டியல் இன்னும் நீளும் என்பதோடு, இந்தப் பட்டியலில் பெயர் குறிப்பிடப்படாத மேலும் பல தலைமைச் செயல் அதிகாரிகளும் இருக்கக் கூடும்.
இவர்களில் பெரும்பாலோர் இந்தியாவிலிருந்து இளம் வயதில் வெளிநாடுகளுக்குச் சென்று அங்கு கடுமையாக உழைத்து, தங்களின் கல்வித் தகுதிகளையும் வளர்த்துக் கொண்டதாலேயே இத்தகைய உயர் பதவிகளை அடைந்திருக்கிறார்கள் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
மேற்குறிப்பிட்டவர்களைத் தவிர, பல அனைத்துலக நிறுவனங்களில் பல்வேறு முக்கியப் பதவிகளையும் இந்தியர்கள் அலங்கரிக்கின்றனர்.
கூகுள், மைக்ரோசோப்ட் போன்ற நிறுவனங்களிலும் நாசா போன்ற அமெரிக்க மையங்களிலும் பணியாற்றுபவர்களில் பெரும்பாலோர் இந்தியர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.