Home One Line P2 கூகுள் : 10 பில்லியன் டாலரை இந்தியாவில் முதலீடு செய்கிறது

கூகுள் : 10 பில்லியன் டாலரை இந்தியாவில் முதலீடு செய்கிறது

732
0
SHARE
Ad

புதுடில்லி – கூகுள் நிறுவனம் அடுத்து வரும் ஆண்டுகளில் 10 பில்லியன் டாலர்களை இந்தியாவில் முதலீடு செய்கிறது. அந்நாட்டின் 1 பில்லியன் மக்களுக்கு இணையத்தை மலிவாகவும் பயனுள்ள வகையிலும் கொண்டு சேர்க்க இந்த முதலீடுகள் பயன்படுத்தப்படும்.

கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை (படம்) இன்று திங்கட்கிழமை இந்த அறிவிப்பை வெளியிட்டார். இந்தியாவுக்கென கூகுள் நிறுவனம் நடத்திய சிறப்பு இயங்கலை வழியான நிகழ்ச்சியில் உரையாற்றும்போது சுந்தர் பிச்சை இதனைத் தெரிவித்தார்.

“இந்தியாவின் எதிர்காலத்திலும் அதன் மின்னிலக்கத் துறையிலும் (டிஜிடல்) நாங்கள் வைத்திருக்கும் நம்பிக்கையின் வெளிப்பாடு இது. இந்தியாவின் மின்னிலக்கப் பயணம் கடக்க வேண்டிய தூரம் இன்னும் அதிகமாகும். இந்தியாவின் ஒரு பில்லியன் மக்களுக்கு மலிவு விலையிலும் பயனுள்ள வகையிலும் இணையத் தொடர்பை கொண்டு சென்று சேர்க்க வேண்டும். குரல்வழி உள்ளடக்கம் மேம்பாடு காண வேண்டும். அனைத்து இந்திய மொழிகளிலும் கணினிமயம் துரிதப்படுத்தப்பட வேண்டும். புதிய தலைமுறை வணிக முனைவர்களுக்கு ஆதரவளித்து அவர்களுக்கு உந்துசக்தியாக விளங்க வேண்டும்” என சுந்தர் பிச்சை தனது அறிக்கையில் குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice

இந்தியாவின் தமிழ் நாட்டில் பிறந்து வளர்ந்தவரான சுந்தர் பிச்சை தனது கல்வியைத் தொடர அமெரிக்கா சென்றதோடு அங்கேயே தொழில்நுட்ப நிறுவனங்களில் பணிபுரிந்து வந்தார். இன்று உலகிலேயே மிகப் பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான கூகுளின் தலைமைச் செயல் அதிகாரியாக உயர்ந்திருக்கிறார்.

உலகிலேயே அதிக சம்பளம் வாங்கும் தலைமைச் செயல் அதிகாரிகளில் ஒருவராகவும் அவர் கருதப்படுகிறார்.

கூகுளின் முதலீடுகள் அடுத்த 5 முதல் 7 ஆண்டுகளில் இந்தியாவில் மேற்கொள்ளப்படும். இந்தியாவின் தொழில்நுட்பத் துறையில் பங்கு முதலீடுகள், கூட்டு வணிக பங்களிப்புகள், கட்டமைப்பில் மேம்பாடுகள் எனக் கலவையான வகையில் இந்த முதலீடுகளை கூகுள் மேற்கொள்ளும்.

இந்தியாவில் கணினிமயமாகுதல் என்னும்போது ஒவ்வொரு மொழியிலும் அந்தத் தொழில்நுட்ப மேம்பாடுகள் கொண்டுவரப்பட வேண்டும். இந்தியாவில் 22 மொழிகள் அதிகாரத்துவ மொழிகளாகப் பயன்படுத்தப்படுகின்றன.

எனவே, கூகுளின் முதலீடுகள் ஒவ்வொரு இந்தியனும் அவனுடைய தாய்மொழியில் புதிய உருவாக்கங்கள், சேவைகளைப் பெறும் வண்ணம், இந்தியாவுக்கே உரிய தேவைகளுக்கேற்ப மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

வணிகங்கள் மின்னிலக்க உருமாற்றங்களுக்கு மாற உதவுவது, சமூக நலன்களுக்காக தொழில் நுட்பத்தையும், செயற்கை நுண்ணறிவு போன்றவற்றையும் பயன்படுத்துவது ஆகிய இலக்குகளையும் கூகுளின் முதலீடுகள் கொண்டிருக்கும்.

சுகாதாரம், கல்வி, விவசாயம் ஆகிய துறைகளின் மேம்பாடுகளிலும் கூகுள் கவனம் செலுத்தும்.

தங்களின் திட்டங்களை மேற்கொள்ள இந்திய அரசாங்கத்துடனும் பிரதமர் நரேந்திர மோடியுடனும் இணைந்து பாடுபடவிருப்பதாகவும் சுந்தர் பிச்சை கூறினார்.

இந்தியா, உலகின் அதிவேகமாக வளர்ந்து வரும் இணையச் சந்தையாகும். தற்போது சுமார் 700 மில்லியன் இணையப் பயனர்களை கொண்டிருக்கிறது இந்தியா. எதிர்வரும் ஆண்டுகளில் இதே எண்ணிக்கையிலான புதிய பயனர்கள் சந்தைக்குள் வருவர் என கணிக்கப்படுகிறது.

உலகின் முன்னணி நிறுவனங்கள் கடந்த ஆண்டுகளில் பில்லியன் கணக்கான முதலீடுகளை இந்தியாவில் செய்திருக்கின்றன.

கடந்த இரண்டு மாதங்களில் சுமார் 15 பில்லியன் அமெரிக்க டாலர்களை உலகமெங்கிலும் உள்ள முதலீட்டாளர்களிடம் இருந்து முகேஷ் அம்பானியின் நிறுவனங்கள் பெற்றிருக்கின்றன.

இந்த முதலீடுகளில் பெரும்பான்மையானவை அம்பானியின் மின்னிலக்க நிறுவனமான ஜியோ பிளாட்போர்ம் நிறுவனத்தை முன்னிறுத்திப் பெறப்பட்ட முதலீடுகளாகும்.