Home One Line P2 அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்தில் இண்டெல் 253 மில்லியன் டாலர்கள் முதலீடு

அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்தில் இண்டெல் 253 மில்லியன் டாலர்கள் முதலீடு

736
0
SHARE
Ad

மும்பை : முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் மின்னிலக்கத் (டிஜிடல்) துணை நிறுவனமான ஜியோ பிளாட்போர்ம் நிறுவனத்தில் அமெரிக்காவின் இண்டெல் நிறுவனம் 253.55 மில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீட்டைச் செய்திருக்கிறது.

இதன் மூலம் ஜியோ பிளாட்போர்ம் நிறுவனத்தில் 0.39 விழுக்காடு பங்குரிமையை இண்டெல் பெறும்.

கணினிகளில் பயன்படுத்தப்படும் சில்லுகளைத் தயாரிக்கும் நிறுவனம் இண்டெல். ஆப்பிள் போன்ற பெரும் நிறுவனங்களுக்கு நீண்ட காலமாக கணினிச் சில்லுகளைத் தயாரித்தளித்து வருகிறது.

#TamilSchoolmychoice

உலக அளவில் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமாக ரிலையன்ஸ் – ஜியோ நிறுவனங்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் முகேஷ் அம்பானிக்கு உலகம் முழுவதும் இருந்து பல முதலீட்டாளர்கள் ஆதரவுக் கரம் நீட்டி வருகின்றனர்.

அந்த வரிசையில் கடந்த இரண்டு மாதங்களில் ரிலையன்சுக்குக் கிடைத்திருக்கும் 12-வது பெரிய முதலீடாக இண்டெல் நிறுவனத்தின் முதலீடு திகழ்கிறது.

இதைத் தொடர்ந்து 150 பில்லியன் டாலருக்கும் கூடுதலான சந்தை மதிப்பைக் கொண்ட முதல் இந்திய நிறுவனமாக ரிலையன்ஸ் உருவெடுத்துள்ளது. இதன் தொலைத் தொடர்பு வணிகங்களுக்கான துணை நிறுவனமாக ஜியோ பிளாட்போர்ம் திகழ்கிறது.

ஆசியாவிலேயே மிகப்பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானி தற்போது திகழ்கிறார். ரிலையன்ஸ் நிறுவனத்தின் 42 விழுக்காடு பங்குகளை கொண்டிருக்கிறார் 63 வயதான முகேஷ் அம்பானி.

தனது சொத்து மதிப்பால் உலகின் முதல் 10 பணக்காரர்களில் ஒருவராக உயர்ந்திருக்கிறார். அவரை 9-வது மிகப் பெரிய பணக்காரராக புளும்பெர்க் வணிக ஊடகம் பட்டியலிட்டிருக்கிறது.

தொழில்நுட்ப நவீனத்தில் முன்னணி வகிக்கும் இண்டெல்

தொழில்நுட்பத்திலும் நவீன புத்தாக்கத்திலும் முன்னணி வகிக்கும் நிறுவனம் இண்டெல். கிளவுட் (cloud computing) தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு (artificial intelligence), 5 ஜி தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் நவீன புத்தாக்கங்களை முன்னெடுத்து வருகிறது.

இண்டெல் போன்றே பல்வேறு நிறுவனங்கள் ஏற்கனவே ரிலையன்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்திருக்கின்றன.

உலகின் மிகப் பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான அமெரிக்காவின் பேஸ்புக், ரிலையன்ஸ் நிறுவனத்தில் 10 விழுக்காடு பங்குகளை வாங்கியிருக்கிறது. இதற்காக 5.7 பில்லியன் டாலர்களை பேஸ்புக் முதலீடு செய்திருக்கிறது.

தற்போது ரிலையன்ஸ் நிறுவனத்தின் சிறுபான்மை பங்குதாரர்களில் மிகப் பெரிய பங்குடமையாளராக பேஸ்புக் திகழ்கிறது.

இதைத் தொடர்ந்து சில்வர் லேக் என்ற முதலீட்டு நிறுவனம் 753 மில்லியன் டாலர்களை முதலீடு செய்துள்ளது.

அடுத்ததாக, 1.2 பில்லியன் டாலர்களை அபுதாபி அரசாங்கத்தின் முபாடாலா இன்வெஸ்ட்மெண்ட் கம்பெனி என்ற நிறுவனம் ஜியோ நிறுவனத்தில் முதலீடு செய்திருக்கிறது.

விஸ்தா இக்குவிட்டி பார்ட்னர்ஸ் (Vista Equity Partners) என்ற முதலீட்டு நிறுவனம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஜியோ நிறுவனங்களில் 1.5 பில்லியன் டாலர்கள் முதலீடு செய்துள்ளது. இதன் மூலம் 2.3 விழுக்காட்டுப் பங்குகளை ஜியோ நிறுவனங்களில் விஸ்தா பெற்றிருக்கிறது.

இரண்டு மாதங்களில் 15 பில்லியன் டாலர்கள் முதலீடு

கடந்த இரண்டே மாதங்களில் சுமார் 15 பில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடாகப் பெற்றுள்ளது அவரது ரிலையன்ஸ் நிறுவனம்.

கிடைக்கின்ற முதலீடுகளைக் கொண்டு ரிலையன்சை விரிவாக்குவதும்,  நிறுவனக் கடன்களைக் குறைப்பதும் அம்பானியின் திட்டமாகும். மார்ச் 2021 காலவரையறைக்குள் கடன்களில்லாத நிறுவனமாக ரிலையன்சை உருவாக்குவதே தனது நோக்கம் என முகேஷ் அம்பானி அறிவித்திருந்தார்.

இதற்கிடையில் கடந்த ஜூன் 19 வெளியிட்ட அறிக்கை ஒன்றின் வழி ரிலையன்ஸ் தற்போது தனது கடன்களை முழுவதுமாக அடைத்து விட்டதாக முகேஷ் அம்பானி பெருமிதத்துடன் தெரிவித்தார்.

தனது நிறுவனப் பங்குதாரர்களுக்கு தான் வழங்கிய வாக்குறுதியை இதன்மூலம் நிறைவேற்றியிருப்பதாகவும் முகேஷ் தெரிவித்தார்.

நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்ட தொலைத் தொடர்பு மற்றும் செல்பேசி சேவைகள் நிறுவனமான ஜியோ சுமார் 400 மில்லியன் பயனர்களைக் கொண்டிருக்கிறது.

எதிர்வரும் 2025-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் கைப்பேசி சந்தாதாரர்கள் சந்தையில் 48 விழுக்காட்டை அம்பானியின் நிறுவனம் கைப்பற்றும் என மதிப்பிடப்பட்டிருக்கிறது.