Home One Line P2 ஆப்பிள் “சிலிக்கோன்” அறிமுகம் – புதிய சகாப்தத்தில் ஆப்பிள் மெக் கணினிகள்

ஆப்பிள் “சிலிக்கோன்” அறிமுகம் – புதிய சகாப்தத்தில் ஆப்பிள் மெக் கணினிகள்

749
0
SHARE
Ad

கூப்பர்டினோ (கலிபோர்னியா) – ஆண்டுதோறும் நடைபெறும் ஆப்பிள் நிறுவனத்தின் தொழில்நுட்ப மேம்பாட்டாளர்களின் மாநாடு என்பது கணினி மென்பொருள் உருவாக்குநர்கள், செல்பேசி பயனர்கள், மின்னிலக்கத் துறை ஆர்வலர்கள் என பலதரப்பட்ட மக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்க்கும் மாநாடாகும்.

ஒவ்வொரு ஆண்டும் ஆப்பிள் தலைமையகம் அமைந்துள்ள கலிபோர்னியாவின் சிலிக்கோன் பள்ளத்தாக்கில் ஜூன் மாதத்தில் நடைபெறும் இந்த மாநாடு இந்த முறை இயங்கலைவழி நடத்தப்படுகிறது.

அமெரிக்க நேரப்படி திங்கட்கிழமை (ஜூன் 22) தொடங்கியது ஆப்பிள் மேம்பாட்டாளர்கள் மாநாடு.

இனி ஆப்பிள் ‘சிலிக்கோன்’ – புதிய கணினி சில்லுகள்

#TamilSchoolmychoice

தமது மெக் கணினிகளில் பெரும் மாற்றத்தைக் கொண்டு வருகிறது ஆப்பிள். இதுநாள் வரையில் இண்டெல் (Intel Corp) நிறுவனம் தயாரித்தளித்த கணினிச் சில்லுகளை (சிப்ஸ்- chips) மெக் கணினிகளின் மையச் செயலாக்கத்திற்காக  பயன்படுத்தி வந்தது ஆப்பிள். தற்போது இண்டெல்லுடனான 15 ஆண்டுகால ஒப்பந்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்து சொந்த சில்லுகளை இனிப் பயன்படுத்தப் போவதாக ஆப்பிள் மேம்பாட்டாளர் மாநாட்டின் தொடக்க உரையில் டிம் கூக் அறிவித்தார்.

டிம் கூக் ஆப்பிள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாவார்.

இந்த ஆண்டிலேயே இந்த மாற்றம் நிகழும் என்ற டிம் கூக் இது வரலாற்றுபூர்வ தொடக்கமாகும் என்றும் அறிவித்தார்.

ஆப்பிள் தயாரிக்கும் அதன் ஐபோன் மற்றும் ஐபேட் கருவிகளில் ஏற்கனவே அந்நிறுவனம் அவற்றிற்காகவே தயாரிக்கும் சில்லுகள் பொருத்தப்படுகின்றன. தற்போது ஆப்பிள் கணினிகளுக்கும் இது நீடிக்கப்படுகிறது.

மெக் கணினிகளை ஆப்பிளின் சொந்தச் சில்லுகளைக் கொண்டு உருமாற்றம் செய்யும் திட்டம் முழுமையடைய இரண்டு ஆண்டுகாலம் பிடிக்கும் எனவும் டிம் கூக் தெரிவித்தார்.

இண்டெல் சில்லுகளைக் கொண்டு இன்னும் ஆப்பிள் கணினிகள் தயாரிப்பில் இருப்பதாகவும், அந்தக் கணினிகளுக்கான தொழில்நுட்ப ஆதரவை ஆப்பிள் தொடர்ந்து பல ஆண்டுகளுக்கு வழங்கும் என்றும் டிம் கூக் தனது உரையில் குறிப்பிட்டார்.

“ஆப்பிள் சிலிக்கோன்” எனப்படும் இந்த மாற்றத்தினால் மற்றொரு மாபெரும் பயனும் விளையவிருக்கிறது. இதுநாள் வரையில் ஐபோன், ஐபேட் கருவிகளில் இயங்குவதற்காக மூன்றாம் தரப்பு மேம்பாட்டாளர்களால் உருவாக்கப்பட்ட குறுஞ்செயலிகள் (apps) இனி மெக் கணினிகளிலும் இயங்கும். தற்போது இயக்கத்தில் இருக்கும் பெரும்பான்மையான குறுஞ்செயலிகள் எந்தவித திருத்தங்களும் இன்றி நேரடியாக மெக் கணினிகளில் இயங்கும் என்றும்  அறிவிக்கப்பட்டது.

இண்டெல் சில்லுகளைக் கொண்டு இயங்கும் கணினிகளுக்கான செயலிகள்  ஆப்பிள் சிலிக்கோன் கணினிகளிலும் உடனடி மாற்றங்களோடு நேரடியாக இயங்கும் தொழில்நுட்பத்தையும் ஆப்பிள் அறிமுகம் செய்கிறது.

ஆப்பிள் சிலிக்கோன் உருவாக்கம் என்பது தங்கள் நிறுவனத்தின் பத்தாண்டு காலப் பயணம் என்றும் டிம் கூக் தெரிவித்தார்.

ஐஓஎஸ் 14 அறிமுகம்

ஆப்பிள் மேம்பாட்டாளர் மாநாட்டின் மற்றொரு சிறப்பம்சம் மேம்படுத்தப்பட்ட புதிய மென்பொருள் அறிமுகப்படுத்தப்படுவதாகும்.

அந்த வகையில் ஐஓஎஸ் 14 இயங்குதள மென்பொருளையும் ஆப்பிள் அறிமுகப்படுத்தியிருக்கிறது.

இந்தப் புதிய இயங்குதள மென்பொருள் மூலம் ஆப்பிள் ஐபோன்கள், ஐபேட்களின் முகப்புத் திரை (Home Screen pages) பெரும் மாற்றங்களை அழகான முறையில் மாற்றியமைக்கப்படுகிறது.

ஐஓஎஸ் 14 மென்பொருளின் மற்றொரு கூடுதல் சிறப்பம்சம் “டிரான்ஸ்லேட்” எனப்படும் மொழிமாற்ற குறுஞ்செயலியாகும். இதன் மூலம் ஆங்கிலம், மேண்டரின், ஜப்பானிய, கொரிய, ஸ்பானிஷ், ஜெர்மன் பிரெஞ்சு, இத்தாலியன், இரஷியன், பிரேசிலியன் போர்ச்சுகீசிய, அரபு மொழிகளுக்கிடையிலான மொழிமாற்றங்கள் இலகுவாக மேற்கொள்ள முடியும்.