மும்பை – உலகின் பணக்காரர்களின் பட்டியலை ஆய்வு செய்து வெளியிடும் போர்ப்ஸ் ஊடகத்தின் புதிய பட்டியலின்படி இந்தியாவிலேயே மிகப் பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானி, உலகின் மிகப் பெரிய பணக்காரர்கள் பட்டியலில் 9-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
இந்தியாவின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பெரும்பான்மை பங்குதாரரான முகேஷ் அம்பானி, 2019-ஆம் ஆண்டில் உலகின் 13-வது பணக்காரராகப் பட்டியலிடப்பட்டார்.
தற்போது நான்கு இடங்கள் முன்னேறி, 9-வது இடத்தை அடைந்திருக்கும் முகேஷ் இதன் மூலம் உலகின் முதல் 10 பணக்காரர்களில் ஒருவராகத் திகழ்கிறார்.
கடந்த வியாழக்கிழமை (நவம்பர் 28) கணக்கெடுப்பின்படி 60.8 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்துடமையைக் கொண்டிருக்கிறார் முகேஷ் அம்பானி.
இந்தப் பட்டியலின்படி உலகின் முதலாவது பணக்காரராகத் திகழ்பவர் அமேசோன் நிறுவனத்தின் தோற்றுநரும், தலைமைச் செயல் அதிகாரியுமான ஜெப் பெசோஸ் ஆவார். இவரது சொத்து 113 பில்லியன் அமெரிக்க டாலர்களாக மதிப்பிடப்பட்டிருக்கிறது. அதாவது முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பை விட இரண்டு மடங்கு மதிப்புடைய சொத்துகளைக் கொண்டிருக்கிறார் பெசோஸ்.
107.4 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்துகளுடன் இரண்டாவது பணக்காரராகத் திகழ்பவர் மைக்ரோசோப்ட் நிறுவனத்தின் பில் கேட்ஸ் ஆவார்.
முதல் 10 இடங்களைப் பிடித்திருக்கும் பணக்காரர்களின் வரிசையில் முதலீட்டாளர் வாரன் பஃபெட், பேஸ்புக் நிறுவன உரிமையாளர் மார்க் சக்கர்பெர்க், ஒராக்கல் நிறுனத்தில் லேரி எல்லிசன், கூகுள் நிறுவனத்தின் லேரி பேஜ், மெக்சிகோவின் கார்லோஸ் ஸ்லிம் ஆகியோர் இடம் பெற்றிருக்கின்றனர்.