கோலாலம்பூர் – வெளிநாட்டு மாணவர்கள் தங்கள் உயர்கல்வியைத் தொடர்வதற்கான நாடாக மலேசியா திகழ்கிறது எனக் கல்வி அமைச்சர் மஸ்லீ மாலிக் கூறியிருக்கும் நிலையில், மலேசியாவில் இயங்கி வரும் தனியார் மற்றும் பொதுப் பல்கலைக் கழகங்கள் சிறந்த பல்கலைக் கழகங்களுக்கான உலகத் தர வரிசையில் இடம் பெற்று வருகின்றன.
நாட்டின் முன்னணி பல்கலைக் கழகமான மலாயாப் பல்கலைக் கழகம் 2019-ஆம் ஆண்டுக்கான ஆசியாவுக்கான உலகத் தர வரிசையில் 19-வது இடத்தைப் பிடித்தது. ஆனால், 2020-ஆம் ஆண்டில் மேலும் சில இடங்கள் முன்னேறி 13-வது இடத்தைப் பிடித்திருக்கிறது மலாயாப் பல்கலைக் கழகம்.
செர்டாங்கில் இயங்கி வரும் புத்ரா பல்கலைக் கழகம் ஆசியாவுக்கான உலகத் தர வரிசையில் 2019-ஆம் ஆண்டில் 34-வது இடத்தைப் பிடித்து தற்போது 2020-க்கான தர வரிசையில் ஓரிடம் முன்னேறி 33-வது இடத்தைப் பிடித்திருக்கிறது.
2020-ஆம் ஆண்டுக்கான ஆசிய உலகத் தர வரிசையில் பினாங்கு அறிவியல் பல்கலைக் கழகம் 37-வது இடத்தையும், பாங்கியில் இருக்கும் தேசியப் பல்கலைக் கழகம் 39-வது இடத்தையும் ஸ்கூடாயில் இருக்கும் தொழில்நுட்பப் பல்கலைக் கழகம் 46-வது இடத்தையும், பெட்ரோனாஸ் பல்கலைக் கழகம் 82-வது இடத்தையும் பிடித்திருக்கின்றன.
இதன் மூலம் உலகின் மிகச்சிறந்த 100 பல்கலைக் கழகங்களின் தர வரிசையில் மலேசியாவில் மட்டும் 6 பல்கலைக் கழகங்கள் இடம் பெற்றிருக்கின்றன.
இவை தவிர, மேலும் நான்கு பல்கலைக் கழகங்கள் 109 முதல் 122-ஆம் வரையிலான இடங்களை ஆசிய உலகத் தர வரிசையில் பெற்றிருக்கின்றன.