மும்பை – இந்திய வணிக நிறுவனங்களில் 150 மில்லியன் அமெரிக்க டாலருக்கும் மேற்பட்ட சந்தை மதிப்பைக் கொண்ட முதல் நிறுவனமாக உருவெடுத்திருக்கிறது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ். இதன் உரிமையாளர் யார் என்பதை விளக்கவும் தேவையில்லை.
ஆசியாவிலேயே மிகப்பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானியின் நிறுவனம்தான் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட். இதன் துணை நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தில் தொடர்ந்து பல அனைத்துலக முதலீட்டாளர்கள் முதலீடு செய்து வருகின்றனர்.
இதன் காரணமாக பங்குச் சந்தையில் ரிலையன்ஸ் பங்குகளின் விலைகள் உயர்ந்து வருகின்றன.
இதைத் தொடர்ந்து இதுவரையில் எந்த இந்திய நிறுவனமும் அடையாத சாதனையை ரிலையன்ஸ் அடைந்துள்ளது. 150 மில்லியன் அமெரிக்க டாலருக்கும் மேற்பட்ட சந்தை மதிப்பை அந்நிறுவனம் கொண்டிருக்கிறது.
அனைத்துலக முதலீட்டாளர்கள் வரிசையாக முதலீடு செய்கின்றனர்
உலகின் மிகப் பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான அமெரிக்காவின் பேஸ்புக் ரிலையன்ஸ் நிறுவனத்தில் 10 விழுக்காடு பங்குகளை வாங்கியிருக்கிறது. இதற்காக 5.7 பில்லியன் டாலர்களை பேஸ்புக் முதலீடு செய்திருக்கிறது.
ரிலையன்ஸ் பங்குகளின் கொள்முதலைத் தொடர்ந்து தற்போது ரிலையன்ஸ் நிறுவனத்தின் சிறுபான்மை பங்குதாரர்களில் மிகப் பெரிய பங்குடமையாளராக பேஸ்புக் திகழ்கிறது.
இதைத் தொடர்ந்து சில்வர் லேக் என்ற முதலீட்டு நிறுவனம் 753 மில்லியன் டாலர்களை அதே நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளது.
அடுத்ததாக, 1.2 பில்லியன் டாலர்களை அபுதாபி அரசாங்கத்தின் முபாடாலா இன்வெஸ்ட்மெண்ட் கம்பெனி என்ற நிறுவனம் ஜியோ நிறுவனத்தில் முதலீடு செய்திருக்கிறது.
விஸ்தா இக்குவிட்டி பார்ட்னர்ஸ் (Vista Equity Partners) என்ற முதலீட்டு நிறுவனம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஜியோ நிறுவனங்களில் 1.5 பில்லியன் டாலர்கள் முதலீடு செய்துள்ளது. இதன் மூலம் 2.3 விழுக்காட்டுப் பங்குகளை ஜியோ நிறுவனங்களில் விஸ்தா பெற்றிருக்கிறது.
இன்றைக்கு உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களாக கூகுள், டென்சென்ட், அமேசோன், அலிபாபா போன்றவை கருதப்படுகின்றன.
இவற்றுக்கு நிகரானதொரு நிறுவனமான ரிலையன்சை உருவாக்குவதற்கே முகேஷ் அம்பானி முயற்சிகள் எடுக்கிறார்.
கிடைக்கின்ற முதலீடுகளைக் கொண்டு ரிலையன்சை விரிவாக்குவது அம்பானியின் நோக்கமாகும். நிறுவனக் கடன்களையும் குறைப்பது அம்பானியின் திட்டமாகும். மார்ச் 2020 வரை ரிலையன்சின் கடன் 44 பில்லியன் டாலராகும்.
மார்ச் 2021 காலவரையறைக்குள் கடன்களில்லாத நிறுவனமாக ரிலையன்சை உருவாக்குவதே அம்பானியின் குறிக்கோளாகும்.
உலகம் முழுவதும் பொருளாதார வீக்கம் காணப்பட்டு வரும் வேளையில் ஆசியாவிலேயே மிகப் பெரிய பணக்காரராக உருவெடுத்திருக்கிறார் முகேஷ் அம்பானி.
இவர் மீதும், இவரது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் அவரது தொலைத் தொடர்பு தொழில்நுட்ப நிறுவனமான ஜியோ மீதும் தொடர்ந்து நம்பிக்கை வைத்து பெரிய அளவில் முதலீடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
புதிய முதலீடுகளைத் தொடர்ந்து ஜியோ நிறுவனங்களின் மொத்த மதிப்பு 65 பில்லியன் டாலர்களாக மதிப்பிடப்படுகிறது.
நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்ட தொலைத் தொடர்பு மற்றும் செல்பேசி சேவைகள் நிறுவனமான ஜியோ சுமார் 388 மில்லியன் பயனர்களைக் கொண்டிருக்கிறது.
கடன்களற்ற நிறுவனமாக ரிலையன்ஸ் – முகேஷ் அறிவித்தார்
இதற்கிடையில் கடந்த வெள்ளிக்கிழமை (ஜூன் 19) வெளியிட்ட அறிக்கை ஒன்றின் வழி ரிலையன்ஸ் தற்போது தனது கடன்களை முழுவதுமாக அடைத்து விட்டதாக முகேஷ் அம்பானி பெருமிதத்துடன் தெரிவித்தார்.
தனது நிறுவனப் பங்குதாரர்களுக்கு தான் வழங்கிய வாக்குறுதியை இதன்மூலம் நிறைவேற்றியிருப்பதாகவும் முகேஷ் தெரிவித்தார்.
முன்னதாக எதிர்வரும் மார்ச் 2021-க்குள் ரிலையன்ஸ் நிறுவனத்தை கடன்களற்ற நிறுவனமாக உருமாற்றிக் காட்டுவேன், இதுவே என் இலக்கு, என பங்குதாரர்களிடம் அவர் அறிவித்திருந்தார்.
கடந்த 2 மாதங்களில் பேஸ்புக் உள்ளிட்ட பல அனைத்துலக முதலீட்டு நிறுவனங்களிடமிருந்து பில்லியன் கணக்கான டாலர்களை ரிலையன்ஸ் நிறுவனத்திற்காக அவர் பெற்றார்.