Home One Line P2 லடாக் எல்லைப்புற இராணுவ முகாமுக்கு நரேந்திர மோடி திடீர் வருகை

லடாக் எல்லைப்புற இராணுவ முகாமுக்கு நரேந்திர மோடி திடீர் வருகை

1060
0
SHARE
Ad

லடாக் – இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று வெள்ளிக்கிழமை காலை திடீரென சர்ச்சைக்குரிய லடாக் பகுதியிலுள்ள இராணுவ முகாம் ஒன்றுக்கு வருகை தந்தார்.

இந்துஸ் நதிக்கரையோரத்தில் சுமார் 11 ஆயிரம் அடி உயரத்தில் அமைந்திருக்கிறது இந்த இராணுவ முகாம்.

இராணுவ வீரர்களுடன் கலந்துரையாடி அவர்களை உற்சாகப்படுத்திய மோடி, அவர்களிடையே உரையாற்றினார்.

#TamilSchoolmychoice

பின்னர் காயங்களுடன் சிகிச்சை பெற்று வரும் இராணுவ வீரர்களைச் சந்தித்தும் ஆறுதல் கூறினார் மோடி.

ஜூன் 15-ஆம் தேதி நடைபெற்ற சீனாவுடனான எல்லைப்புற மோதல்களைத் தொடர்ந்து நரேந்திர மோடி லடாக் பகுதிக்கு மேற்கொள்ளும் முதல் வருகை இதுவாகும். அந்த மோதல்களில் 20 இந்திய இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். சீனாவின் தரப்பில் உயிரிழந்த, காயமடைந்த இராணுவ வீரர்களின் எண்ணிக்கை அறிவிக்கப்படவில்லை.

“பலவீனமானவர்களால் அமைதியை அடைய முடியாது. வீரர்களாலேயே முடியும். நாடுகளை ஆக்கிரமிக்கும் காலகட்டம் முடிந்து விட்டது. இப்போது மேம்பாடுகளுக்கான காலகட்டமாகும். ஆக்கிரமிப்பில் ஈடுபட்டவர்கள் தோல்வியடைந்தார்கள். அல்லது திரும்பிச் செல்லும் நிலைமைக்கு தள்ளப்பட்டார்கள். இதுவே வரலாறு நமக்கு உணர்த்தும் போராட்டம்” என இராணுவ வீரர்களிடையே உரையாற்றும்போது மோடி கூறினார்.

“லடாக் என்பது இந்தியாவின் கிரீடமாகும். நெஞ்சுரம் வாய்ந்த பல வீரர்களை இந்தப் பகுதி இந்தியாவுக்குத் தந்துள்ளது. நமது எதிரிகளுக்கு உங்களின் கோபத்தையும், தீப்பிழம்பு போன்ற வீரத்தையும் எடுத்துக் காட்டியிருக்கிறீர்கள்” என்றும் மோடி இராணுவ வீரர்களைப் பாராட்டினார்.

எல்லைப் புற மோதல்களைத் தொடர்ந்து இந்தியா சீனாவுக்கு எதிரான வணிகப் போரைத் தொடங்கியுள்ளது.

சீனாவைத் தளமாகக் கொண்டு இயங்கும் 59 குறுஞ்செயலிகளையும் இந்தியா தடை செய்துள்ளது.