Home One Line P2 டிக் டாக், வீ சேட் உள்ளிட்ட 59 சீன நாட்டு குறுஞ்செயலிகளுக்கு இந்தியா தடை

டிக் டாக், வீ சேட் உள்ளிட்ட 59 சீன நாட்டு குறுஞ்செயலிகளுக்கு இந்தியா தடை

830
0
SHARE
Ad

புதுடில்லி – செல்பேசி பயனர்களிடையே பிரபலமாகியிருக்கும் டிக் டாக் உள்ளிட்ட 59 சீன நாட்டு குறுஞ்செயலிகளை (எப்ஸ்) தடை செய்யும் முடிவை இந்திய அரசாங்கம் நேற்று திங்கட்கிழமை (ஜூன் 29) அறிவித்தது.

வீ சேட் (Wechat) என்ற மற்றொரு பிரபல செயலியும் தடை செய்யப்பட்டிருக்கும் 59 குறுஞ்செயலிகளில் ஒன்றாகும்.

லடாக் எல்லை மோதல்கள், அதனால் ஏற்பட்ட உயிரிழப்புகளைத் தொடர்ந்து சீனாவுக்கு எதிராகப் பலமுனைகளிலும் கடுமையானப் போக்கை இந்தியா கடைப்பிடித்து வருகிறது.

#TamilSchoolmychoice

எல்லையில் தனது தரப்பு பகுதிகளை வலிமையாக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறது இந்தியா. படைவீரர்கள் குவிக்கப்பட்டு வருகின்றனர். இராணுவத் தளவாடங்களும் பதற்றம் நிறைந்த பகுதிக்கு நகர்த்தப்படுகின்றன.

அதே வேளையில் சீனப்பொருட்களைப் புறக்கணிக்கும் போராட்டம் ஒன்றையும் இந்திய வணிகர்களும், பொதுமக்களும், இயக்கங்களும் தொடங்கியிருக்கின்றனர்.

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் கடுமையான பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படுவதால், இந்தியத் துறைமுகங்களில் தேங்கிக் கிடக்கின்றன.

இந்த சூழலில்தான் அடுத்த கட்ட நடவடிக்கையாக 59 குறுஞ்செயலிகளை தடை செய்திருக்கிறது இந்தியா.

இந்தியாவின் இறையாண்மைக்கும், நேர்மைக்கும், தற்காப்புக்கும் ஊறு விளைவிக்கும் நடவடிக்கைகளை இந்த குறுஞ்செயலிகள் மேற்கொள்கின்றன என இந்தியா தனது அறிக்கையில் தெரிவித்தது.

பொதுமக்களிடம் இருந்து கிடைத்த புகார்கள், சில குறுஞ்செயலிகளைப் பயன்படுத்தும்போது ஏற்படும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக இந்தியாவின் அறிக்கை குறிப்பிட்டது.

இந்த நடவடிக்கையால் இந்தியாவில் இருக்கும் கோடிக்கணக்கான செல்பேசி பயனர்கள், இணையப் பயனர்கள் ஆகியோரின் நலன்கள் பாதுகாக்கப்படுகின்றன என்றும் இந்திய இணையவெளியின் பாதுகாப்பும் உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் இந்தியா மேலும் தெரிவித்தது.

டிக் டாக் – இந்தியாவின் பிரபலமான குறுஞ்செயலி

அண்மையக் காலங்களில் இந்தியாவில் பலவிதமான சர்ச்சைகளை ஏற்படுத்தி, அதே வேளையில் கோடிக்கணக்கான பயனர்களையும் ஈர்த்திருப்பது டிக் டாக்.

குறுகிய நேர காணொளிப் படங்களைப் பதிவேற்றுவதுதான் டிக் டாக் செயலி. மே 5-ஆம் தேதி இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் காலகட்டத்திற்கு முன்னர் இந்த செயலி இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்பட்டது.

ஆப்பிள் தளத்தில் மிக அதிகமாகப் பயன்படுத்தப்படும் 5-வது செயலியாக டிக் டாக் திகழ்ந்தது.

ஆனால், எல்லை மோதல்களுக்குப் பின்னர் ஒரு மாதத்தில் இந்த செயலி ஆப்பிள் தளத்தில் 10 இடத்திற்கு வீழ்ச்சியடைந்தது. இந்திய பயனர்கள் இந்த செயலி மீது எதிர்ப்பும் காட்டமும் காட்டியதன் விளைவுதான் இது.

அண்ட்ரோய்டு குறுஞ்செயலி தளத்தில் பயனர்களிடையே மூன்றாவது இடத்தைப் பிடித்திருந்தது டிக் டாக். நாளடைவில் 5 இடத்தை நோக்கி இறங்கியது.

எனினும் இரண்டு தளங்களிலும் இன்னும் முதல் பத்து செயலிகளில் ஒன்றாக டிக் டாக் திகழ்ந்து வருகிறது.

இளைஞர்களிடையே பிரபலமாகியிருக்கும் டிக் டாக், சீனா, அமெரிக்காவுக்கு அடுத்து இந்தியாவில் அதிகமான பயனர்களைக் கொண்டிருக்கிறது.

தற்போது 2 பில்லியன் பயனர்களைக் கொண்டிருக்கிறது டிக் டாக். 2020-ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 1.5 பில்லியனாக மட்டுமே இந்தக் குறுஞ்செயலி பயனர்களின் எண்ணிக்கை இருந்தது.

கொவிட்-19 தாக்கத்தால் இல்லங்களில் முடங்கிக் கிடந்த மக்கள் பொழுதுபோக்கிற்காகவும் சுவாரசியத்திற்காகவும் டிக் டாக் பயன்படுத்தத் தொடங்க அதன் பயன்பாடும் கிடுகிடுவென உயர்ந்தது.

இந்தியாவில் மட்டும் 611 மில்லியன் பேர் இந்த குறுஞ்செயலியைப் பதிவிறக்கம் செய்திருக்கின்றனர் என மதிப்பிடப்படுகிறது.

மற்ற நாடுகளிலும் தடை

சீன குறுஞ்செயலிகளுக்கு இந்தியா விதிக்கும் தடை எல்லப் பதற்றங்களினால் மட்டும் வருவதல்ல! பாதுகாப்புக்கு எதிரான அம்சங்களும் ஒரு காரணம்!

ஏற்கனவே “ஸூம்” (zoom) என்ற குறுஞ்செயலியில் காணொளி வழி நடத்தப்படும் பல நபர் கலந்துரையாடல்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்களாக இருக்கின்றன என்ற புகார்கள் எழுந்தன.

ஜெர்மனி இந்த குறுஞ்செயலிக்குத் தடை விதித்திருக்கிறது.

தைவானும் சில சீன குறுஞ்செயலிகளுக்குத் தடை விதித்திருக்கிறது.

அமெரிக்காவும் பல முறை சீனக் குறுஞ்செயலிகளுக்கு எதிரான எச்சரிக்கையை விடுத்திருக்கிறது.

எல்லா சீன குறுஞ்செயலிகளும் சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கைகளையும் அதன் உலகளாவிய அரசியல் நோக்கங்களையும் முன்னெடுப்பதற்கும், பரப்புவதற்கும் பயன்படுத்தப்படுகின்றன என அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ரோபர்ட் ஓ’பிரியன் ஏற்கனவே குற்றம் சாட்டியிருந்தார்.