கோலாலம்பூர்: தேசியச் சின்னம் சீர்குலைப்பு தொடர்பாக புத்தகத்தின் வெளியீட்டாளர் மன்னிப்பு கேட்டுள்ளார். அந்த ஓவியம் புத்தகத்தின் அட்டைப்பக்கத்தில் இடம்பெற்றுள்ளது.
கெராக்புடாயா பதிப்பக நிறுவனத்தின் இயக்குநரும் நிறுவனருமான சோங் டன் சின் இன்று காலை மலேசியாகினியிடம் தேசிய சின்னத்தை அவமதிக்கும் எண்ணம் இல்லை என்று கூறினார்.
“நாங்கள் உண்மையில் அவமதிப்பதற்கான எண்ணத்தில் இல்லை.
“நாங்கள் தற்செயலாக இருந்திருக்கலாம் என்றாலும், அது யாருக்கும் அசௌகரியத்தை ஏற்படுத்தியிருந்தால், புண்படுத்தியிருந்தால், நான் மன்னிப்பு கேட்கிறேன்.
“எதிர்காலத்தில் நாங்கள் இதில் அதிக கவனம் செலுத்துவோம்.” என்று அவர் கூறினார்.
‘ரிபெர்த்: ரிபோர்மாசி, ரெசிஸ்தன்ஸ் அண்ட் ஹொப் இன் நியூ மலேசியா’ என்ற புத்தகத்தில் , தேசிய சின்னத்தை அவமதித்ததாகக் கூறப்படும் படங்களைப் பயன்படுத்தியது குறித்து சமீபத்திய நாட்களில் கவனத்தை ஈர்த்து வருகின்றன.
மஇகா, மசீச, அம்னோ மற்றும் பாஸ் கட்சியினர் இது தொடர்பாக காவல் துறையில் புகார் அளித்துள்ளனர்.
இந்த விவகாரம் குறித்து உடனடியாக விசாரணை நடத்துமாறு காவல்துறைக்கு தனது அமைச்சகம் உத்தரவிட்டதாக உள்துறை அமைச்சர் ஹம்சா சைனுடின் நேற்று தெரிவித்தார்.
பாக் சோங் என்றும் அழைக்கப்படும் சோங், புத்தகத்தின் அட்டைப்படத்தில் உள்ள படம் பல ஆண்டுகளுக்கு முன்பு நாட்டில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த ஓவியத்திலிருந்து வந்தது என்றும், அட்டைப்படத்தில் அதன் பயன்பாடு ஓவியர் மற்றும் புத்தகத்தின் ஆசிரியர் இடையே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் கூறினார்.
இருப்பினும், புத்தகத்தின் ஆசிரியர் அக்கலைஞரைத் தொடர்பு கொண்டாரா, அல்லது மாறாக, புத்தகத்தின் அட்டைப்படத்திற்கு ஒரு வரைபடத்தைப் பெற்றாரா என்பது அவருக்குத் தெரியவில்லை.
“புத்தகத்தின் அட்டைப்படம் பல ஆண்டுகளுக்கு முன்பு காட்சிக்கு வைக்கப்பட்ட ஓவியம். சரவாக்கில் ஒரு கண்காட்சியில் அந்த ஓவியம் விற்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.
அவரை சந்திக்க நேற்று பிற்பகல் பெட்டாலிங் ஜெயாவில் உள்ள அவரது அலுவலகத்திற்கு காவல் துறையினர் சென்றிருந்ததாகவும், ஆனால், அவர் அப்போது அங்கில்லை என்றும் சோங் கூறினார்.
இன்று காவல் துறை மீண்டும் வருவார்கள் என்று அவர் நம்புவதாகவும், அவர்களுக்கு ஒத்துழைக்க தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.