பெட்டாலிங் ஜெயா: மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நாடாளுமன்ற அமர்வுக்கு முன்னதாக மக்களவை சபாநாயகர் டான்ஸ்ரீ முகமட் அரிப் முகமட் யூசோப்பை மாற்றுவதற்கு பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் அல்லாதவர்கள் பரிசீலிக்கப்படுகிறார்கள்.
தேர்தல் ஆணையத் தலைவர் டத்தோ அசார் அசிசான் ஹாருண் அந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளார்.
டான்ஸ்ரீ மொகிதின் யாசினின் தலைமைக்கு எதிராக லங்காவி நாடாளுமன்ற உறுப்பினர் துன் மகாதீர் முகமட் சமர்ப்பித்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டால், தேசியக் கூட்டணியின் ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினர்களும் அவையில் இருக்க வேண்டும் என்பதால், இந்த பதவிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் அல்லாதவரின் தேர்வு நடைபெறலாம் என்று கூறப்படுகிறது.
“மொகிதினுக்கு மக்களவையில் இருக்கும் ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவும் தேவை. எனவே சபாநாயகர் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் அல்லாதவராக இருக்க வேண்டும்.” என்று அந்த வட்டாரம் தெரிவித்துள்ளது.
முன்னாள் மக்களவை சபாநாயகர் டான்ஸ்ரீ பாண்டிகர் அமீன் முலியா மற்றும் மற்றொரு முன்னாள் நீதிபதி ஆகியோரும் இந்த பதவிக்குப் பரிசீலிக்கப்படுகிறார்கள் என்ற அந்த வட்டாரம் நீதிபதியின் பெயரைத் தெரிவிக்கவில்லை.
சபாநாயகர் பதவியின் வேட்புமனு இதுவரை இரகசியமாகப் பாதுகாக்கப்பட்டு உள்ளது, பிரதமர் கடைசி நிமிடத்தில் ஓர் ஆச்சரியத்தை ஏற்படுத்தக்கூடும் என்று அந்த வட்டாரம் தெரிவித்துள்ளது.
ஜூலை 13-ஆம் தேதி நாடாளுமன்றம் தொடங்கியதும், தற்போதைய தேசிய கூட்டணி நிர்வாகம் சபாநாயகர் முகமட் அரிப் முகமட் யூசோப் மற்றும் நம்பிக்கைக் கூட்டணி நிர்வாகத்தின் கீழ் நியமிக்கப்பட்ட துணை சபாநாயகர் எங் கோர் மிங் ஆகியோரை நீக்குவதற்கான முயற்சிகளைக் காணலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
அவர்களை அகற்றுவதற்காக நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள இரண்டு தீர்மானங்களும் வெள்ளிக்கிழமை (ஜூன் 26) மாலை பிரதமரால் சமர்ப்பிக்கப்பட்டன.
மூத்த அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ அசலினா ஓத்மான் சைட், எங்கிற்கு பதிலாக துணை சபாநாயகராக நியமிக்கப்படுவார் என்ற ஊகங்கள் எழுந்துள்ளன.
முகமட் அரிப் மற்றும் எங்கை மாற்றுவதற்கான நடவடிக்கை மத்திய அரசியலமைப்பின் 57- வது பிரிவின்படி செய்யப்பட்டது என்றும் அந்த வட்டாரம் குறிப்பிட்டது.
கூட்டரசு அரசியலமைப்பின் பிரிவு 57 (2) மற்றும் (2ஏ)- இன் கீழ், சபாநாயகரும், துணை சபாநாயகரும் எந்த நேரத்திலும் ஒரு பொதுத் தேர்தலுக்குப் பிறகு சபை முதன்முதலில் கூடும் போது, அவர்கள் பதவியில் இருந்து எழுத்துப்பூர்வமாக விலகலாம் என்று கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையில், சமீபத்தில் செனட்டர்களாக நியமிக்கப்பட்ட டான்ஸ்ரீ ராயிஸ் யாத்திம் மற்றும் டான்ஸ்ரீ ராட்சி ஷேக் அகமட் ஆகியோர், முறையே மேலவைத் தலைவராகவும், துணைத் தலைவராகவும் நியமிக்கப்படுவார்கள்.
இதற்கிடையில், நடப்பு நாடாளுமன்ற அவைத் தலைவர் முகமட் அரிப் முகமட் யூசோப், அவையின் துணைத் தலைவர் இங்கா கோர் மிங் ஆகிய இருவரையும் அவர்களின் பதவிகளில் இருந்து நீக்கும் தீர்மானத்தை மொகிதின் சமர்ப்பித்திருக்கிறார் என வெளியாகியிருக்கும் செய்தியை முகமட் அரிப் உறுதிப்படுத்தினார் .
இந்தச் செய்தியை ஏற்கனவே அவையின் துணைத் தலைவர் எங் கோர் மிங் உறுதிப்படுத்தியிருந்தார்.
தன்னையும் அவையின் துணைத் தலைவரையும் நீக்கும் இரண்டு தீர்மானங்களையும் நாடாளுமன்றத்தின் சட்டதிட்டங்களுக்கு ஏற்ப தாங்கள் ஏற்றுக் கொண்டிருப்பதாகவும் முகமட் அரிப் தெரிவித்தார்.
“இதில் எனக்குத் தனிப்பட்ட பிரச்சனை எதுவுமில்லை. நாட்டின் அரசியலமைப்பு சட்டத்திற்கு ஏற்ப முடிவெடுக்க வேண்டியது மக்களவையின் பொறுப்பாகும். ஜனநாயக மரபுகளும், அரசியலமைப்பு சட்டங்களும் முறையாகப் பின்பற்றப்பட்டால் அதில் எனக்குப் பிரச்சனைகள் ஏதுமில்லை” என்றும் முன்னாள் மேல்முறையீட்டு நீதிபதியான முகமட் அரிப் தெரிவித்திருந்தார்.