Home One Line P1 “நாடாளுமன்ற அவைத் தலைவரை நீக்கும் தீர்மானம் கிடைத்தது” – முகமட் அரிப் உறுதிப்படுத்தினார்

“நாடாளுமன்ற அவைத் தலைவரை நீக்கும் தீர்மானம் கிடைத்தது” – முகமட் அரிப் உறுதிப்படுத்தினார்

737
0
SHARE
Ad

கோலாலம்பூர் – நடப்பு நாடாளுமன்ற அவைத் தலைவர் முகமட் அரிப் முகமட் யூசோப் (படம்) , அவையின் துணைத் தலைவர் இங்கா கோர் மிங் ஆகிய இருவரையும் அவர்களின் பதவிகளில் இருந்து நீக்கும் தீர்மானத்தை மொகிதின் சமர்ப்பித்திருக்கிறார் என வெளியாகியிருக்கும் செய்தியை முகமட் அரிப் உறுதிப்படுத்தியிருக்கிறார்.

இந்தச் செய்தியை ஏற்கனவே அவையின் துணைத் தலைவர் இங்கா கோர் மிங் உறுதிப்படுத்தியிருக்கிறார்.

தன்னையும் அவையின் துணைத் தலைவரையும் நீக்கும் இரண்டு தீர்மானங்களையும் நாடாளுமன்றத்தின் சட்டதிட்டங்களுக்கு ஏற்ப தாங்கள் ஏற்றுக் கொண்டிருப்பதாகவும் முகமட் அரிப் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

“இதில் எனக்குத் தனிப்பட்ட பிரச்சனை எதுவுமில்லை. நாட்டின் அரசியலமைப்பு சட்டத்திற்கு ஏற்ப முடிவெடுக்க வேண்டியது மக்களவையின் பொறுப்பாகும். ஜனநாயக மரபுகளும், அரசியலமைப்பு சட்டங்களும் முறையாகப் பின்பற்றப்பட்டால் அதில் எனக்குப் பிரச்சனைகள் ஏதுமில்லை” என்றும் முன்னாள் மேல்முறையீட்டு நீதிபதியான முகமட் அரிப் தெரிவித்தார்.

கடந்த வெள்ளிக்கிழமை (ஜூன் 26) இந்த இரண்டு தீர்மானங்களும் சமர்ப்பிக்கப்பட்டன. ஜூலை 13 தொடங்கவிருக்கும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் விவாதிப்பதற்கான தீர்மானங்களைச் சமர்ப்பிப்பதற்கான இறுதி நாளில் அதற்கான நேரம் முடிய 10 நிமிடங்களே இருக்கும்போது இந்த இரண்டு தீர்மானங்களும் சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றன.

மொகிதினின் புதிய வியூகம் வெற்றியடையுமா?

ஏற்கனவே, நாடாளுமன்றக் கூட்டத் தொடரை முறையாக நடத்தாததற்கு கண்டனங்களை எதிர்நோக்கி வருகிறார் பிரதமர் மொகிதின் யாசின்.

இந்நிலையில் தனது அடுத்த கட்ட வியூகமாக நடப்பு நாடாளுமன்ற அவைத் தலைவர் முகமட் அரிப் முகமட் யூசோப் (படம்) , அவையின் துணைத் தலைவர் இங்கா கோர் மிங் ஆகிய இருவரையும் நீக்கும் தீர்மானத்தை மொகிதின் சமர்ப்பித்திருக்கிறார்.

இது குறித்துக் கருத்துரைத்த முன்னாள் சட்ட அமைச்சர் லியூ வுய் கியோங் (படம்), தனக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை முறியடிக்கவே மொகிதின் இந்த நகர்வை மேற்கொண்டிருப்பதாகக் குற்றம் சாட்டினார்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுத்த அறிக்கையில் மொகிதினின் முடிவை லியூ சாடினார். “தவறான உள்நோக்கத்தோடும், தனது சொந்த நலன்களை முன்னிறுத்தியும் மொகிதின் இந்த முடிவை எடுத்திருக்கிறார்” என்று லியூ கூறியிருக்கிறார்.

தனது தீர்மானம் குறித்து மொகிதின் பகிரங்கமாக பொதுமக்களுக்கு விளக்க வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார். ஆளும் அரசாங்கம் மற்றும்  நாடாளுமன்றம் இரண்டுக்கும் இடையிலான அதிகாரங்கள் தனித்தனியாக இயங்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும் லியூ வலியுறுத்தினார்.

மொகிதினின் தீர்மானம் அதிர்ச்சியளிக்கிறது, நாட்டின் அரசியலமைப்பு சட்டத்திற்கு முரணான ஒன்று என்றும் லியூ கண்டனம் தெரிவித்தார்.

அவைத் தலைவர் முகமட் அரிப் துன் மகாதீர் பிரதமராகப் பதவியேற்ற பின்னர் நம்பிக்கைக்கூட்டணியின் சார்பில் அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டார். பிகேஆர் கட்சியில் இயங்கி வந்த முன்னாள் மேல்முறையீட்டு நீதிபதியான அவர், அந்தப் பதவியை ஏற்றதும் தனது கட்சி உறுப்பினர் பதவியிலிருந்து விலகினார்.

தனது நடுநிலைத் தன்மையை வெளிப்படுத்துவதற்காக அவர் அவ்வாறு செய்தார். நாடாளுமன்ற அவைத் தலைவராக இருப்பவர் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கத் தேவையில்லை. எனவே, அவர் எந்தக் கட்சியிலும் இணையாமல் நாடாளுமன்ற உறுப்பினராக இல்லாமல் அவைத் தலைவர் பொறுப்பை வகித்து வந்தார்.

நாடாளுமன்ற அவையின் துணைத் தலைவர் இங்கா கோர் மிங் ஜசெகவின் முக்கியத் தலைவர்களில் ஒருவராவார். 14-வது பொதுத் தேர்தலில் தெலுக் இந்தான் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

எதிர்வரும் ஜூலை 13-ஆம் தேதி நாடாளுமன்றக் கூட்டம் தொடங்குகிறது.

அந்தக் கூட்டத்திற்கான நிகழ்ச்சி நிரலில் நாடாளுமன்ற அவைத் தலைவர், துணைத் தலைவர் இருவரையும் நீக்கும் மொகிதின் யாசினின் தீர்மானமும் இடம் பெற்றுள்ளது.

நாடாளுமன்ற அவையின் துணைத் தலைவர்களாக இருவர் செயல்படுகின்றனர். இரண்டாமவர் முகமட் ரஷிட் ஹஸ்னோன் ஆளும் தேசியக் கூட்டணிக்கு ஆதரவாகச் செயல்படுகிறார். மொகிதினின் தீர்மானத்தில் இவரை நீக்கும் கோரிக்கை இல்லை.

கடந்த மே 18-ஆம் தேதி நடைபெற்ற நாடாளுமன்றக் கூட்டத்திற்கு முன்பாக துன் மகாதீர் மொகிதின் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை சமர்ப்பித்தார். அதனை அவைத் தலைவர் முகமட் அரிப் ஏற்றுக் கொண்டார். இதுவே அவரை விலக்குவதற்கு மொகிதின் எடுத்திருக்கும் காரணமாகக் கருதப்படுகிறது.

மொகிதினின் தீர்மானம் வெற்றியடைய அந்தத் தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டு 111 வாக்குகளுக்கும் கூடுதலாக அவரது தரப்பு பெற வேண்டும்.

அவ்வாறு பெற முடியவில்லை என்றால் முகமட் அரிப், கோர் மிங் தொடர்ந்து தங்கள் பதவிகளில் நீடிப்பர்.

தீர்மானம் தோல்வியடைந்தால் நாடாளுமன்றத்தில் மொகிதினுக்குப் பெரும்பான்மை இல்லை என்பதை உறுதிப்படுத்துவதாக அது அமையும்.

தீர்மானம் வெற்றி பெற்றால் தேசியக் கூட்டணியின் சார்பில் புதிய அவைத் தலைவராக ஒருவரும், அவைக்கான துணைத் தலைவர் ஒருவரும் தேர்வு செய்யப்படுவர்.