மும்பை – அண்மையில் பேஸ்புக் நிறுவனத்தின் பெரிய அளவிலான முதலீடுகளைப் பெற்றதன் மூலம் கணிசமான உயர்வு கண்டன முகேஷ் அம்பானியின் (படம்) ரிலையன் இண்டஸ்ட்ரீஸ் பங்கு விலைகள். 5.7 பில்லியன் அமெரிக்க டாலர்களை ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான ஜியோ நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளது பேஸ்புக் நிறுவனம்.
இதைத் தொடர்ந்து ஆசியாவிலேயே மிகப் பெரிய பணக்காரராக அந்தஸ்து பெற்றார் முகேஷ் அம்பானி.
தற்போது மற்றொரு அமெரிக்க முதலீட்டு நிறுவனமும் ஜியோ நிறுவனங்களில் முதலீடுகளைச் செய்ய முன்வந்துள்ளது. சில்வர் லேக் (Silver Lake) என்ற அந்த நிறுவனம் கடந்த காலங்களில் எதிர்கால வளர்ச்சி பெறத் தகுதி கொண்ட சரியான தொழில்நுட்ப நிறுவனங்களை அடையாளங்கண்டு அவற்றில் முதலீடு செய்திருக்கிறது. அதன் மூலம் பெரும் இலாபங்களையும் கண்டிருக்கிறது அந்த நிறுவனம்.
748.5 மில்லியன் அமெரிக்க டாலர்களை ஜியோவில் சில்வர் லேக் முதலீடு செய்யவிருக்கிறது. இந்திய மதிப்பில் இது 56.6 பில்லியன் ரூபாய்களாகும்.
தங்களின் மின்னிலக்கச் சேவைகளை (டிஜிடல்) நவீனமயமாக்கவும் விரிவாக்கவும் இந்த முதலீடுகள் உதவும் என ரிலையன் அறிவித்திருக்கிறது.
சுமார் 10 விழுக்காடு பங்குகளைப் பெறுவதற்கு 5.7 பில்லியன் டாலர்கள் முதலீடு செய்துள்ளது பேஸ்புக். அதைத் தொடர்ந்து அடுத்த இரண்டே வாரங்களில் சில்வர் லேக் நிறுவனமும் முதலீடு செய்ய முன்வந்துள்ளது முகேஷ் அம்பானி மீதும் அவரது நிறுவனங்கள் மீதும் அனைத்துல வணிக முதலீட்டாளர்கள் கொண்டிருக்கும் நம்பகத் தன்மையைக் காட்டுவதாக அமைந்திருக்கிறது.
புதிய முதலீடுகளைத் தொடர்ந்து ஜியோ நிறுவனங்களின் மொத்த மதிப்பு 65 பில்லியன் டாலர்களாக மதிப்பிடப்படுகிறது.
நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்ட தொலைத் தொடர்பு மற்றும் செல்பேசி சேவைகள் நிறுவனமான ஜியோ சுமார் 388 மில்லியன் பயனர்களைக் கொண்டிருக்கிறது.