Home One Line P2 பேஸ்புக்- ரிலையன்ஸ் வணிக இணைப்பு – ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரரானார் முகேஷ் அம்பானி

பேஸ்புக்- ரிலையன்ஸ் வணிக இணைப்பு – ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரரானார் முகேஷ் அம்பானி

631
0
SHARE
Ad

மும்பை – கடந்த புதன்கிழமை (ஏப்ரல் 22) ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தில் மார்க் சக்கர்பெர்க்கின் பேஸ்புக் நிறுவனம் 10 விழுக்காட்டுப் பங்குகளைக் கொள்முதல் படுத்தியதைத் தொடர்ந்து ரிலையன்ஸ் பங்குகளின் விலைகள் சுமார் 10 விழுக்காடு வரையில் உயர்ந்தன.

இதனைத் தொடர்ந்து ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரராக முகேஷ் அம்பானி உயர்ந்திருக்கிறார். தற்போது இந்த அந்தஸ்தை அலிபாபா நிறுவனத்தின் ஜேக் மா வகித்து வந்தார்.

பேஸ்புக் பங்குக் கொள்முதலைத் தொடர்ந்து ரிலையன்ஸ் பங்குகளின் விலையேற்றத்தினால் அம்பானியின் சொத்து மதிப்பு 4.69 பில்லியன் டாலர்கள் உயர்ந்து தற்போது 49.2 பில்லியன் டாலர்களாக மதிப்பிடப்படுகிறது.

#TamilSchoolmychoice

ஜேக் மா’வின் சொத்து மதிப்பு தற்போது 46 பில்லியன் டாலர்களாகும்.

எண்ணெய் வணிகத்திலும் ஈடுபட்டு வரும் அம்பானியின் சொத்துகளின் மதிப்பு எண்ணெய் வணிகத்தினால் பெரும் சரிவை அண்மையில் சந்தித்தது. கடந்த 29 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்ததால் அம்பானியின் சொத்துகளுக்கும் பின்னடைவைக் கண்டது.

இதைத் தொடர்ந்து ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரராக ஜேக் மா அம்பானியை முந்தினார்.

அம்பானியின் மின்னிலக்க (டிஜிடல்) சொத்துகளில் பேஸ்புக் நிறுவனம் 5.7 பில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்யவிருக்கிறது.

2014-இல் வாட்ஸ்எப் செயலியைக் கையகப்படுத்தியதுதான் பேஸ்புக் நிறுவனத்தின் மிகப் பெரிய வணிக ஒப்பந்தமாகக் கருதப்பட்டது. அதற்கு அடுத்து பேஸ்புக் மேற்கொள்ளும் மிகப் பெரிய பங்கு முதலீடு அம்பானியின் நிறுவனத்தில் அது மேற்கொள்ளும் முதலீடாகும்.