Home One Line P2 ஜியோ நிறுவனத்திற்கு மேலும் 1.2 பில்லியன் டாலர்களைத் திரட்டிய முகேஷ் அம்பானி

ஜியோ நிறுவனத்திற்கு மேலும் 1.2 பில்லியன் டாலர்களைத் திரட்டிய முகேஷ் அம்பானி

832
0
SHARE
Ad

மும்பை – உலகின் அடுத்த மாபெரும் தொழில்நுட்ப நிறுவனத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார் முகேஷ் அம்பானி. இன்றைய தேதியில் ஆசியாவிலேயே மிகப் பெரிய பணக்காரராக உருவெடுத்திருப்பவர்.

அவரது ஜியோ நிறுவனத்திற்கு உலகம் முழுவதிலுமிருந்து முதலீட்டாளர்கள் பணத்தை வாரி வழங்கியிருக்கின்றனர்.

ஆகக் கடைசியான முதலீடு அபுதாபி அரசாங்க முதலீட்டு நிதியிலிருந்து பெறப்பட்டிருக்கிறது.

#TamilSchoolmychoice

1.2 பில்லியன் டாலர்களை அபுதாபி அரசாங்கத்தின் முபாடாலா இன்வெஸ்ட்மெண்ட் கம்பெனி என்ற நிறுவனம் ஜியோ நிறுவனத்தில் முதலீடு செய்யவிருக்கிறது. உலகம் முழுவதும் பல நிறுவனங்களில் 229 பில்லியன் டாலர்களை முதலீடு செய்திருக்கிறது முபாடாலா.

இதைத் தொடர்ந்து இதுவரையில் முகேஷ் அம்பானி ஜியோ நிறுவனத்திற்காகத் திரட்டியிருக்கும் தொகையின் மொத்த அளவு 11.6 பில்லியன் டாலராகும்.

கடந்த இரண்டு மாதங்களில் ஜியோ பெற்றிருக்கும் 6-வது பெரிய முதலீடு அபுதாபியின் முதலீடாகும்.

இன்று வெள்ளிக்கிழமை முகேஷ் அம்பானி புதிய முதலீட்டுக்கான அறிவிப்பை வெளியிட்டார்.

முகேஷ் அம்பானியின் தலையாய நிறுவனமாக செயல்படுவது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனமாகும். இதன் ஓர் அங்கம்தான் ரிலையன்ஸ் ஜியோ தொலைத் தொடர்பு நிறுவனமாகும்.

388 மில்லியன் வாடிக்கையாளர்களைக் கொண்டிருக்கிறது ஜியோ. இந்தியாவின் மிகப் பெரிய தொலைத் தொடர்பு நிறுவனமாகவும் திகழ்கிறது.

பேஸ்புக் நிறுவனமும் 5.7 பில்லியன் டாலர்களை ஜியோவில் முதலீடு செய்திருக்கிறது. இந்த முதலீட்டினால் ஜியோவின் சுமார் 10 விழுக்காட்டுப் பங்குகளை பேஸ்புக் கொள்முதல் செய்திருக்கிறது.

இந்த முதலீடுகளைத் தொடர்ந்து ஜியோவின் சந்தை மதிப்பு 65 பில்லியன் டாலர்களாக இருக்கும் எனக் கணிக்கப்படுகிறது.

இன்றைக்கு உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களாக கூகுள், டென்சென்ட், அமேசோன், அலிபாபா போன்றவை கருதப்படுகின்றன.

இவற்றுக்கு நிகரானதொரு நிறுவனமான ரிலையன்சை உருவாக்குவதற்கே முகேஷ் அம்பானி முயற்சிகள் எடுக்கிறார்.

கிடைக்கின்ற முதலீடுகளைக் கொண்டு ரிலையன்சை விரிவாக்குவது அம்பானியின் நோக்கமாகும். நிறுவனக் கடன்களையும் குறைப்பது அம்பானியின் திட்டமாகும். மார்ச் 2020 வரை ரிலையன்சின் கடன் 44 பில்லியன் டாலராகும்.

மார்ச் 2021 காலவரையறைக்குள் கடன்களில்லாத நிறுவனமாக ரிலையன்சை உருவாக்குவதே அம்பானியின் குறிக்கோளாகும்.