நியூயார்க் – வழக்கமாக அரசியல் பிரச்சனைகளில் கருத்து சொல்லாத மைக்ரோசோப்ட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சத்யா நடெல்லா (படம்) இந்தியா கொண்டுவந்திருக்கும் புதிய இந்தியக் குடியுரிமைச் சட்டம் நல்லதல்ல எனக் கண்டனம் தெரிவித்துள்ளார்.
“இப்போது நடந்து கொண்டிருப்பதைப் பார்க்கும்போது அங்கு பிறந்து வளர்ந்தவன் என்ற முறையில் நான் கவலையுறுகிறேன். இது பாதகமானது” என நியூயார்க்கில் இன்று திங்கட்கிழமை (ஜனவரி 14) நடைபெற்ற மைக்ரோசோப்ட் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் ஊடகம் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் சத்யா இவ்வாறு கூறினார்.
ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்காளதேசம் ஆகிய மூன்று நாடுகளில் இருந்து 2015-க்கு முன்பாக இந்தியா வந்த சிறுபான்மை மதத்தினருக்கு குடியுரிமை வழங்க முன்வந்திருக்கும் இந்தியா, அந்தப் பட்டியலில் இருந்து முஸ்லீம்களை தவிர்த்திருக்கிறது.
இந்த சர்ச்சை பல்வேறு போராட்டங்களுக்கும் ஆர்ப்பாட்டங்களுக்கும் வழிவகுத்திருக்கிறது. இந்தப் போராட்டங்களில் இதுவரை 22 பேர்கள் உயிரிழந்துள்ளனர்.
ஆந்திராவின் ஹைதராபாத் நகரில் பிறந்து வளர்ந்தவரான சத்யா “எனினும், இதில் உள்ள நல்ல செய்தி என்னவென்றால் குழப்பமான இந்திய ஜனநாயகத்தில் மக்கள் பகிரங்கமாக விவாதித்து வருகிறார்கள். இதை யாரும் மூடி மறைக்கவில்லை. தீவிரமாக பொதுவெளிகளில் இந்த விவகாரம் விவாதிக்கப்படுகிறது. ஆனால், எங்களின் நிலைப்பாடு என்ன என்பதிலும் எதற்காக நான் நிற்பேன் என்பதிலும் நான் தெளிவாக இருக்கிறேன்” என்றும் கூறியுள்ளார்.