Home One Line P1 “ஒற்றுமையைச் சீர்குலைப்பவர்களுக்கு எதிராக மலேசியர்கள் ஒன்றிணைய வேண்டும்” இராமகிருஷ்ணன் அறைகூவல்

“ஒற்றுமையைச் சீர்குலைப்பவர்களுக்கு எதிராக மலேசியர்கள் ஒன்றிணைய வேண்டும்” இராமகிருஷ்ணன் அறைகூவல்

126
0
SHARE

ஜோகூர் பாரு – “பூச்சோங்கைச் சேர்ந்த ஒரு பள்ளியில், சீனப் புத்தாண்டு அலங்காரங்கள் அனைத்தையும் அகற்ற வேண்டும் என்ற அறிக்கையைக் காவல் துறையிடம் தாக்கல் செய்தச் சில இனவெறி விமர்சகர்களுக்கு எதிராகக் குரல் கொடுத்த அனைவரையும் நான் பாராட்டுகிறேன். அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் பொது மக்கள் என அனைத்துத் தரப்பினரும் ஒருசேர தங்களின் ஆதரவை இப்பள்ளிக்கு அளித்துள்ளனர். இனவெறியாளர்களின் கண்டனத்திற்கு ஆளான இப்பள்ளிக்கு அனைத்து சாராரிடமிருந்தும் கிடைத்தப் பெரும் ஆதரவு இவர்களின் எதிர்ப்பை முற்றிலுமாக மூழ்கடித்துவிட்டது என்றே கூறலாம்” என ஜோகூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் எஸ்.இராமகிருஷ்ணன் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

“நம் நாட்டின் ஒற்றுமையைச் சீர்குலைக்கத் திட்டமிடுவோருக்கு எதிராக மலேசியர்கள் ஒன்றிணைந்து எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை இந்நிகழ்வு உணர்த்துகின்றது. பல இன நம்பிக்கைகளைக் கொண்ட மலேசியர்கள் அனைவரும் மலேசியாவின் இரண்டாவது பெரிய இனக்குழு கொண்டாடும் ஒரு கொண்டாட்டத்தை ஆதரிப்பதுடன் ஒரு பள்ளிக்காக ஒன்று சேர்ந்து குரல் கொடுக்கின்றனர் என்பதைப் புரிந்துக் கொள்ள இனவெறியாளர்கள் சற்றே சிரமப்படுகிறார்கள் என்பது எங்களுக்குத் தெரிகிறது” என்றும் பெக்கோக் சட்டமன்ற உறுப்பினருமான இராமகிருஷ்ணன் தனது அறிக்கையில் மேலும் தெரிவித்தார்.

“கடந்தக் காலங்களில் இதுபோன்ற பிரச்சினைகள் எழுப்பப்பட்டபோது, அரசாங்கத்தைச் சேர்ந்த பெரும்பாலான அரசியல் தலைவர்கள் முதலில் சம்பந்தப்பட்டப் பள்ளியைக் கண்டிப்பதில்தான் தங்களின் முழு கவனத்தையும் செலுத்துவார்கள். முந்தைய அரசாங்கத்தால் இவ்வாறான அப்பட்டமான இனவெறி செயல்கள் நம் நாட்டில் இயல்பாக்கப்பட்டது மட்டுமின்றி அதற்கான பிரச்சாரங்களும் செய்யப்பட்டு வந்தன. இதுபோன்ற காரியங்களைச் செய்தவர்கள் தற்போதைய ஆட்சியில் தங்களின் இடங்களை இழந்தப் பின்னும் இவர்களின் இனவெறிச் செயல்கள் இன்னும் குறைந்தபாடு இல்லை” என்றும் இராமகிருஷ்ணன் கூறினார்.

“தங்களின் அரசியல் நிலைத்தன்மையை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக மத மற்றும் இன உணர்வுகளைத் தூண்டிவிட்டு அதனை எப்போதும் ஊக்குவிக்கும் அரசியல்வாதிகள் சுயநலவாதிகள் ஆவர். இவர்கள் நாட்டின் மீது உண்மையான அக்கறை இல்லாதவர்கள். இதற்கு முன்பு உள்ள அரசாங்கம் இதுபோன்ற பிரச்சனைகளில் அமைதி காத்து வந்தது, மக்களிடையே அதிருப்தியை வரவழைத்தது. தற்போது, ஐ.ஜி.பி டான்ஸ்ரீ அப்துல் ஹமிட் படோர் பண்டிகைகளின் கொண்டாட்டத்தில் சம்பந்தப்பட்டப் பள்ளியின் முன்முயற்சியைப் பாராட்டியுள்ளார். ஏனெனில், இதுபோன்ற செயல்கள் அல்லது நடவடிக்கைகள் பல இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்திற்கு வழிவகுப்பதோடு வேற்று இனங்களுக்கிடையே அதிக உறவையும் மேம்படுத்தும். குறிப்பிட்டப் பள்ளியின் மீது புகார் கொடுத்த இனவெறியாளர்களின் நடவடிக்கைகளையும் அவர் கண்டித்தார். மேலும், இவர்களின் இதுபோன்ற நடவடிக்கைகளில் அச்சுறுத்தல்களின் கூறுகள் இருப்பதைச் சுட்டிக்காட்டிய அவர் இவ்வியக்கத்தின் தலைவர்கள் மீதும் விசாரணையைத் தொடங்க உத்தரவிட்டுள்ளார்” என்றும் இராமகிருஷ்ணன் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்.

“இதற்கிடையில், செர்டாங் காவல்துறைத் தலைவர் ஏ.சி.பி இஸ்மாடி போர்ஹான்  தற்போது தங்களின் அதிகாரிகள் யாராவது இப்பள்ளியில் தற்காலிகமாக அலங்காரங்களை அகற்றுவதில் ஈடுபட்டிருக்கிறார்களா என்பதை விசாரித்து வருகிறார். மேலும், இவ்விசாரணையில் அவர்கள் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டால் அவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளார். இப்பிரச்சனைக் குறித்து இவ்விரு அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கைகள் மக்களின் மனதைக் கவர்ந்துள்ளது. இனவெறியை வளர்த்து வந்த முந்தைய அரசாங்கம் இதுபோன்ற பிரச்சனைகளுக்கு எவ்வாறான தீர்வு வழங்கி இருக்கும் என்பது நாம் அறிந்ததே. அவர்களின் தீர்வு ஒருபோதும் இன்று நமக்கு கிடைத்த தீர்வு போல் அமைந்திருக்காது. இன மற்றும் மத பிரச்சினைகளை உருவாக்கி அதன் மூலம் நாட்டு மக்களின் ஒற்றுமையைச் சீர்குலைக்கத் திட்டமிடும் இனவெறியாளர்கள் தங்களின் இத்தகையச் செயல்களைக் கைவிட வேண்டிய நேரம் வந்துவிட்டது. இதுபோன்ற முட்டாள்தனங்களை நாங்கள் இப்போது பொறுத்துக்கொள்வதில்லை. மாறாக, இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை அவர்கள் அறிந்திருக்க வேண்டும். இது வெறுமனே பேச்சுடன் நின்றுவிடப் போவதில்லை. வாக்குறுதியளிக்கப்பட்டபடி செயல்படுத்தப்படும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்” என்றும் இராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

“நாட்டில் இன மற்றும் மத பிரச்சனைகளைத் தடுக்கும் புதியச் சட்டங்களுக்காகத் தற்போது நாங்கள் காத்திருக்கிறோம். இதற்கென மூன்று மசோதாக்கள் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அவை பாகுபாடு ஒழிப்பு சட்டம், தேசிய நல்லிணக்கம் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு சட்டம், மற்றும் மத இன வெறுப்பு சட்டமாகும். ஆனால், இச்சட்டத்தைச் செயல்படுத்தப்படுவதன் முக்கியத்துவத்தையும் அதன் விரைவு அல்லது அவசரம் குறித்தும் இன்னமும் ஆலோசனை செய்யபட்டே வருகின்றது. பல ஆண்டுகளுக்கு முன்பு, மலேசியா பொருளாதார வளர்ச்சியடைந்த நாடாகப் பிரகாசித்துக்கொண்டிருந்தது. ஆனால், நாட்டின் அதீத இன மற்றும் மத கொள்கைகளினால் பலர் பாதிக்கப்பட்டு நாட்டின் பொருளாதாரமும் வலு இழந்து போனது. தங்களின் சொந்த நாட்டிலேயே மூன்றாம் வகுப்பு குடிமக்களாக நடத்தப்படும் அவலத்தை பொறுத்துக் கொள்ள முடியாத சில தூரநோக்கு சிந்தனையாளர்கள் நாட்டை விட்டு வெளியேறும் முடிவிற்கு வந்தனர். இந்நிலை தொடர்ந்தால் ஒரு நாட்டையே நாம் இழக்கும் அபாயம் உள்ளது. நம் நாடு வளர்ச்சியடைய ஒற்றுமையை நிலைநிறுத்துவதைத் தவிர வேறு வழியில்லை” என்றும் இராமகிருஷ்ணன் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார். ராமகிருஷ்ணன்

Comments