கோலாலம்பூர்: 2009-ஆம் ஆண்டு வாக்கில் முற்றிலுமாக அழிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்பில் இருப்பதாகக் கூறி 12 மலேசியர்களை, குற்றங்கள் பாதுகாப்பு (சிறப்பு நடவடிக்கைகள்) சட்டத்தின் கீழ் காவல்துறையினர் தற்போது தடுத்து வைத்திருப்பதன் நோக்கத்தினை பெக்கோ சட்டமன்ற உறுப்பினர் சு.இராமகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.
1980-களின் முற்பகுதியில் தோன்றிய தமிழீழ விடுதலைப் புலிகளின் இயக்கமானது ஒரு நீண்ட உள்நாட்டுப் போருக்குப் பிறகு தோற்கடிக்கப்பட்டு 2009-ஆம் ஆண்டு வாக்கில் செயலிழந்தது குறிப்பிடத்தக்கது.
“இந்த இயக்கத்துடன் தொடர்பில் இருந்த சில மலேசியர்களைக் கடந்த காலங்களிலேயே மலேசிய காவல்துறையினர் கண்டறிந்திருந்தால், அவர்கள் ஏன் அப்போதே தடுத்து வைக்கப்படவில்லை அல்லது கைது செய்யப்படவில்லை? தமிழீழ விடுதலைப் புலிகளின் இயக்கம் செயலிழந்து 10 வருடங்களுக்கும் மேலான பின், இன்று ஏன் 12 பேரை தடுத்து வைக்க வேண்டும்?” என்று அவர் வெளியிட்டிருந்த அறிக்கையில் குறிப்பிட்டார்.
தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இந்த 12 பேருக்கும் விடுதலை புலிகளின் இயக்கத்துடன் தொடர்பு இருப்பதாகக் கூறுவதும் அதனை புத்துயிர் பெற முயற்சித்து வருவதாகக் கூறுவதும் அர்த்தமற்ற குற்றச்சாட்டாகும் என்று இராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
“இத்தகைய மோசமான குற்றச்சாட்டைக் கூறுவதன் மூலம், காவல்துறையினர் தங்களின் பெயரைத் தானே களங்கப்படுத்திக் கொள்கிறார்கள். பயங்கரவாதம் மற்றும் இனக் கலவரத்தைத் தூண்டும் ஊக்குவிப்பாளராக அறியப்படும் ஜாகிர் நாயக் என்பவருக்கு மலேசிய காவல்துறை வெளியிடப் பாதுகாப்பை வழங்கி வருகிறது. ஆனால், தற்போது செயல்படாத விடுதலைப் புலிகளின் இயக்கத்தை புதுப்பிக்க 12 மலேசியர்கள் முயற்சிப்பதாகக் கூறி இதே காவல்துறை அவர்களைத் தடுத்தும் வைத்துள்ளது.” என்றும் அவர் தனது அறிக்கையின் மூலமாகத் தெரிவித்தார்.
“நீண்ட கால விசாரணையின் வாயிலாக குற்றம் சுமத்தப்பட்டிருக்கும் 12 பேர் மீதுள்ள குற்றங்களுக்கான தகுந்த ஆதாரங்களைத் திறந்த நீதிமன்றத்தில் சமர்பித்து இருக்க வேண்டும். இந்த விவகாரத்தில் ஏன் இருமுகம் காட்டப்படுகிறது. வேறு எந்த நாடும் வரவேற்க விரும்பாத ஜாகிர் நாயக்கிற்கு நிரந்தர குடியுரிமை வழங்குவதிலும் அவருக்கு விருந்தளிப்பதிலும் மலேசிய போலீசாருக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை.” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மலேசிய காவல்துறையின் பயங்கரவாத எதிர்ப்பு பிரிவு, பயங்கரவாத தொடர்பு என்ற சந்தேகத்தின் பேரில் இவர்களைத் தடுத்து வைத்துள்ளதை விடுத்து போதுமான ஆதாரங்களைப் பெற்ற பிறகே செயல்பட்டிருக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
“இப்போது புலிகள் புத்துயிர் பெறுவது சாத்தியமில்லை. ஆகவே, புலிகள் புத்துயிர் பெற பயங்கரவாத நிதியுதவி கோருகிறது என்பது அடிப்படையற்ற குற்றச்சாட்டாகும்.” என்று அவர் கூறினார்.
பயங்கரவாத தடுப்பு பிரிவு தகுந்த ஆதாரங்களை வழங்காவிடில் சந்தேக நபர்களை உடனடியாக காவல் துறை விடுவிக்க வேண்டும் என்று இராமகிருஷ்ணன் கூறினார்.
“தற்போது செயல்படாத விடுதலைப் புலிகளின் இயக்கத்தின் ’தின நிகழ்வில்’ மக்கள் அனுதாபம் காட்டுவதாலும் மற்றும் கலந்துகொள்வதாலும் இப்பயங்கரவாத அமைப்பைப் புதுப்பித்து விட முடியாது. இலங்கை உள்நாட்டுப் போரில் கொல்லப்பட்ட நூறாயிரக்கணக்கான அப்பாவி மக்களுக்காக உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் துக்கம் அனுசரித்து அவர்களுக்கு நினைவு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். ஆனால், மக்களின் இத்தகைய செயலின் மூலம் அவர்கள் புலிகள் இயக்கத்தை மீண்டும் ஒழுங்கமைக்கிறார்கள் என்று அர்த்தமாகாது.” என்று அவர் தெளிவுப்படுத்தினார்.
இவ்விவகாரத்தில் காவல் துறையினர் நியாயமாக நடந்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.