புதுடில்லி, பிப் 6 – காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சி அல்லாத கட்சிகள் ஒன்றாக இணைந்து கூட்டணி அமைத்து மூன்றாவது அணியை உருவாக்குவதற்கு அச்சாரம் போடும் விதமாக சில முக்கிய எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் நாடாளுமன்றத்தில் ஒன்று கூடி கலந்தாலோசித்து உள்ளனர்.
இக்கட்சிகள் அனைத்தும் காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதாவுடன் நட்புறவில் இல்லாதவை. அ.தி.மு.க., மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், பார்வர்ட் பிளாக், ஆர்.எஸ்.பி., ஐக்கிய ஜனதா தளம், சமாஜ்வாதி, பிஜு ஜனதா தளம், மதச் சார்பற்ற ஜனதா தளம், அசாம் கனபரிஷத் உள்ளிட்ட கட்சிகளின் சார்பாக தலைவர்கள் ஒன்று கூடினர். அ.தி.மு.க., சார்பில், தம்பிதுரை, இந்த கூட்டத்தில் பங்கேற்றார்.
சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற, இந்த கூட்டத்திற்கு பிறகு, மூத்த தலைவர்கள் சீத்தாராம் யெச்சூரி, தேவகவுடா, சரத் யாதவ் உள்ளிட்டோர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “காங்கிரசும், பா.ஜ.,வும், தங்களது விருப்பத்திற்கு ஏற்றவாறு, பிற கட்சிகள் நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கின்றன. அவர்களின் விருப்பங்களை நிறைவேற்ற வேண்டியது, எங்களது வேலை அல்ல. அந்த இரண்டு கட்சிகளையும், நாடாளுமன்றத்திற்குள் எதிர்ப்பதற்கு, வலுவான அணியாக, நாங்கள் இணைந்துள்ளோம்.இந்த கட்சிகள் அனைத்தும், இனிமேல் ஒரே குடையின் கீழ் செயல்படுவோம். இனி ஒன்றாக செயல்பட்டு காங்கிரஸ், பாஜா வை எதிர்ப்போம்” என்று தெரிவித்துள்ளனர்.