சென்னை,பிப்19-கச்சத்தீவு விவகாரத்தில் மத்திய அரசின் வாதம் தவறானது. அதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. வழக்கம் போல், இன்று காலை 10 மணிக்கு சட்டசபை கூடியது.
திமுக தலைவர் கருணாநிதி, காலை 10.20 மணிக்கு சட்டசபைக்கு வந்தார். அவரை திமுக சட்டசபை உறுப்பினர்கள் வரவேற்றனர். பின்னர், சட்டமன்ற வளாகத்தில் உள்ள உறுப்பினர்கள் வருகை பதிவேட்டில் கருணாநிதி கையெழுத்து போட்டார்.
இதன்பின், சபையில் இருந்து வெளியே வந்த கருணாநிதியை நிருபர்கள் சூழ்ந்து கொண்டு பேட்டி கண்டனர்.நிருபர்களின் கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள் வருமாறு:ஸீ கச்சத்தீவை இலங்கையிடம் இருந்து மீட்கும் விஷயத்தில் இந்தியா தலையிட முடியாது என்று மத்திய அரசு கூறியுள்ளதே?மத்திய அரசின் வாதம் தவறானது. அதை ஏற்றுக்கொள்ள முடியாது.
* சட்டசபையில் இருந்து துரைமுருகன், ஐந்து நாள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளாரே?ஜனநாயகத்தின் தாறுமாறான நடவடிக்கைகளில் இதுவும் ஒன்று. இது குறித்து கருத்து சொல்ல விரும்பவில்லை.
* சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு பேச வாய்ப்பு வழங்கப்படுகிறதா?
கேட்பது யார்? கேள்வி நேரம் இங்கு இல்லை.
இவ்வாறு கருணாநிதி பதிலளித்தார்.
இன்றைய சட்டசபை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின், துரைமுருகன் பங்கேற்கவில்லை. திமுகவின் மற்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.