சென்னை, பிப்ரவரி 20 – கூட்டணி அமைப்பதற்கு விஜய்காந்த் சென்னைக்கும், டில்லிக்கும் அலைந்து கொண்டிருக்க, அவரது கட்சியில் முன்பு தூணாக விளங்கியவரும், தேமுதிக சார்பில் சட்டமன்ற உறுப்பினராகப் போட்டியிட்டு வென்றவருமான, பண்ருட்டி ராமச்சந்திரன் இன்று முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் ஐக்கியமானார்.
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக அதிமுகவுடன் கூட்டணி அமைப்பதிலும், தேமுதிகவின் வளர்ச்சியிலும் கணிசமான பங்காற்றியவர் என்ற முறையிலும், விஜய்காந்துக்கு ஒரு காலத்தில் நெருக்கமாக இருந்தவர் என்ற முறையிலும் பண்ருட்டியார் விஜய்காந்தை விட்டு விலகி அவருக்கு நேர் எதிர் அணியான ஜெயலலிதா கட்சியில் இணைந்திருப்பது விஜய்காந்துக்கு ஒரு பின்னடைவாகவே கருதப்படுகின்றது.
எம்.ஜி.ஆர் காலத்து அமைச்சர்…
மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர். ஆட்சியில் அமைச்சராக இருந்தவர் பண்ருட்டி ராமச்சந்திரன். இவர் விஜயகாந்த் தலைமையில் இயங்கும் தே.மு.தி.க.வில் இணைந்து கடந்த சட்டமன்ற தேர்தலில் ஆலந்தூர் தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினர் ஆனார். சட்ட மன்றத்தில் எதிர்கட்சி துணைத் தலைவராகவும் பதவி வகித்தார்.
கடந்த டிசம்பர் மாதம் விஜயகாந்துடன் ஏற்பட்ட திடீர் கருத்து வேறுபாடு காரணமாக அக்கட்சியில் இருந்து விலகினார். எம்.எல்.ஏ. பதவியையும் ராஜினாமா செய்தார்.
இந்த நிலையில் இன்று முதல் அமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்து அ.தி.மு.க.வில் இணைந்தார்.
இது குறித்து அ.தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், பண்ருட்டி ராமச்சந்திரன் அவருடைய மனைவி சாந்தி, மகன் சம்பத்குமார் ஆகியோர் முதல்–அமைச்சர் ஜெயலலிதாவை இன்று நேரில் சந்தித்து தங்களைக் கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.