பிப்ரவரி 23 – நேற்று சனிக்கிழமை பல மணி நேரங்களுக்கு பிரபல திறன்பேசி குறுந்தகவல் செயலியான வாட்ஸ்எப் சேவையை பயனீட்டாளர்கள் பயன்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் உலகம் முழுவதிலும் உள்ள 450 மில்லியன் பயனீட்டாளர்கள் பாதிக்கப்பட்டனர்.
வாட்ஸ்எப் செயலியை 19 பில்லியன் அமெரிக்க வெள்ளிக்கு ஃபேஸ் புக் கையகப்படுத்திய மூன்றே நாட்களுக்குள் இத்தகைய பாதிப்பு ஏற்பட்டுள்ளது பயனீட்டாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது என்பதோடு வாட்ஸ்எப் மீதான மதிப்பீட்டையும் ஒரே நாளில் குறைத்துவிட்டது.
“எங்களின் சேவையகங்கள் (server) தற்போது தொழில்நுட்ப சிக்கலை எதிர்நோக்கியிருக்கின்றன. அதற்காக மன்னிப்பு கோருகின்றோம். கூடிய விரைவில் இதைச் சீர்படுத்தி நிலைமையை சரி செய்து விடுவோம்” என வாட்ஸ்எப் நிறுவனம் ட்விட்டர் குறுந்தகவல் வழி தெரிவித்தது.
அந்த குறுந்தகவல் செய்தி வெளியான சில மணி நேரங்களில் அந்த தகவல் சுமார் 25,000 தடவைகள் சுழல் முறையில் ட்விட்டர் வழி மறுபடியும் பயனீட்டாளர்களிடையே அனுப்பப்பட்டது.
மிகப் பெரிய விலை கொடுத்து ஃபேஸ் புக் வாட்ஸ்எப் செயலியை வாங்கிய மூன்றே நாட்களில் இவ்வாறு நிகழ்த்துள்ளதுதான் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
ஒரு சிலர் வாட்ஸ்எப் செயலியுடன் தொடர்பு கிடைக்கவில்லை என்றும் வேறு சிலர் தங்களின் குறுந்தகவல்கள் சென்று சேரவில்லை என்றும் புகார்கள் கூறினர்.
எவ்வளவு நேரம் இந்த சிக்கல் நீடித்தது என்பது சரியாகத் தெரியவில்லை. எனினும், சுமார் 2 ½ மணி நேரம் கழித்து வாட்ஸ்எப் நிறுவனம் மீண்டும் ட்விட்டர் வழி, “தற்போது வாட்ஸ்எப் சேவை பழையபடி சுமுக நிலைமைக்குத் திரும்பிவிட்டது. தடங்கலுக்கு மன்னிப்பு கோருகின்றோம்” என்ற குறுந்தகவலை அனுப்பியது.
கடந்த புதன்கிழமை, வாட்ஸ்எப் வாங்கப்படுகின்றது என விடுக்கப்பட்ட அறிவிப்பின் விளம்பர பரபரப்பு காரணமாக, திடீரென அதிகரித்த புதிய பயனீட்டாளர்களின் நுழைவு, மற்றும் அதிகப்படியான பயனீடு காரணமாக, கூடுதல் உள்ளடக்கத்தைத் தாங்க முடியாமல் அதன் சேவையகங்கள் நிலைகுத்தியிருக்கலாம் என தொழில் நுட்ப வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
5 ஆண்டுகளுக்கு முன்புதான் ஆரம்பிக்கப்பட்ட வாட்ஸ்எப் வெகு சீக்கிரமாக செல்பேசிகளின் மூலமாக குறுந்தகவல்களை இலவசமாக அனுப்புவதற்கு ஒரு மாற்றாக மிகப் பெரிய வளர்ச்சியை எட்டிவிட்டது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்டதன் மூலம், இதுவரை இல்லாத அளவுக்கு 16 பில்லியன் அமெரிக்க வெள்ளியைத் திரட்டிய ஃபேஸ் புக் நிறுவனத்தின் மிகப் பெரிய கொள்முதலாக வாட்ஸ்எப் கருதப்படுகின்றது.
இதுவரை இரண்டு நிறுவனங்களிடமிருந்தும் எந்தவித அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
நேற்றைய சேவைத் தடங்கலைத் தொடர்ந்து ட்விட்டரிலும், முக நூல் பக்கங்களிலும் ஏராளமான கருத்துப் பரிமாற்றங்கள் நிகழ்ந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.