இனிமேல் உங்களின் வாட்ஸ்எப் செயலியில் நீங்கள் பெறும் தகவல் ஏற்கனவே 5 தடவைகள் பகிரப்பட்டிருந்தால், அதற்குப் பிறகு நீங்கள் ஒரே ஒரு தடவை மட்டுமே – ஒரே ஒருவருக்கு மட்டுமே – அந்தச் செய்தியைப் பகிர முடியும்.
பேஸ்புக் நிறுவனத்தை உரிமையாளராகக் கொண்ட வாட்ஸ்எப் செயலியில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் கட்டுப்பாடுகளின் இதுவே மிகக் கடுமையானதாகக் கருதப்படுகிறது.
சுமார் 2 ஆண்டுகளுக்கு முன்னால் நீங்கள் ஒரு செய்தியை ஒரு வாட்ஸ்எப் குழுவுக்கு ஒரே நேரத்தில் 250 பேர்கள் வரை பகிர்ந்து கொள்ளக் கூடிய வசதிகள் இருந்தன.
கடந்த ஆண்டுகளில், வாட்ஸ்எப் நிர்வாகம் கொண்டு வந்த கட்டுப்பாடுகளின் மூலம் இத்தகைய தகவல்களை 5 வாட்ஸ்எப் குழுக்களுக்கு மட்டுமே பகிர முடியும் என்ற நிலைமை இருந்தது. தற்போது அதுவும் குறைக்கப்பட்டு ஒரே ஒரு பகிர்தல் மட்டுமே என்ற அளவுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருக்கிறது.
“வாட்ஸ்எப் என்பது தனிநபர் உரையாடல்களுக்கான தளமாகத் தொடர்ந்து செயல்படுவதையே நாங்கள் விரும்புகிறோம். மாறாக, தவறான தகவல்கள் அதிகமாகப் பரவுவதைக் கட்டுப்படுத்த விரும்புகிறோம். கொவிட்-19 காலகட்டத்தில் மிக அதிக அளவில் தகவல்கள் பகிரப்படுவதை நாங்கள் கண்டு வருகிறோம். இதைக் குறைப்பதன் மூலம் தவறான தகவல்களும் பரப்பப்படுவதைக் குறைக்க முடியும் என நம்புகிறோம்” என வாட்ஸ்எப் நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.
வாட்ஸ்எப் மூலம் பரிமாறப்படும் தகவல்கள் பாதுகாப்புக் கவசத்தைக் கொண்டவை என்பதால், எந்த மாதிரியானத் தகவல்கள் பரிமாறப்படுகின்றன என்பதை அறிந்து கொள்ளும் ஆற்றலையோ, தொழில்நுட்பத்தையோ வாட்ஸ்எப் நிர்வாகம் கொண்டிருக்கவில்லை.
மாறாக, முகநூல் எனப்படும் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற தளங்களில் பகிரப்படும் தகவல்கள் தவறானவையாக இருக்கக் கூடும் என்ற முன்னெச்சரிக்கையை வழங்கக் கூடிய வசதியை அந்தத் தளங்கள் கொண்டிருக்கின்றன.