வாஷிங்டன்: கடந்த 24 மணி நேரத்தில் அமெரிக்காவில் கொவிட்-19 தொற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 2,000 பேர் இறந்துள்ளனர் என்று ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. 1,939 பேர் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு வரையிலும் இறந்துள்ளதாக அது தெரிவித்துள்ளது.
இதன் மூலமாக அமெரிக்காவில் மொத்த இறப்புகளின் எண்ணிக்கையை 12,722 -ஆக கொண்டு வந்துள்ளது.
இதுவரை மோசமாக பாதிப்புக்குள்ளான நாடுகளின் இறப்பு எண்ணிக்கையை அமெரிக்கா நெருங்கி வருகிறது. இத்தாலியில் இதுவரையிலும் 17,127 பேர் இறந்துள்ளனர். அதற்கு அடுத்த நிலையில் ஸ்பெயினில் 13,798 பேர் இறந்துள்ளனர்.
உலக சுகாதார நிறுவனம், சீனாவில் உருவாகிய இந்த நோயை ஆரம்பக்கட்டத்திலேயே தடுக்காததால்தான் இந்நிலை ஏற்பட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.