புதுவை, பிப் 24 – ராஜீவ் கொலையில் குற்றம் சாட்டப்பட்ட முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளன் ஆகிய மூவருக்கும் தூக்கு தண்டனை வழக்கப்படவேண்டும் என்பதே காங்கிரஸ் கட்சியின் கருத்து என தெரிவித்துள்ளார் பிரதமர் அலுவலக விவகாரத் துறை இணையமைச்சர் நாராயணசாமி.
முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலையில் குற்றம் சாட்டப்பட்டு வேலூர் சிறையில் இருக்கும் முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளன் ஆகியோரது தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து உத்தரவிட்டது உச்சநீதிமன்றம்.
மேலும், குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுதலை செய்வது குறித்து மாநில அரசு முடிவெடுக்கலாம் என அந்த தீர்ப்பில் தெரிவிக்கப் பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து ராஜீவ் கொலை தொடர்பாக சிறையில் உள்ள ஏழு பேரையும் விடுதலை செய்வதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.
ஆனால், தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்திய ஜெயலலிதாவின் உத்தரவுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட சில கட்சிகள் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தன.
இதனை எதிர்த்து மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக விடுதலை உத்தரவுக்கு இடைக்காலத் தடை பெறப்பட்டது.
இந்நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக புதுவையில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் தலைவர் நாராயணசாமி தமிழக அரசு கொலைக்கைதிகளை விடுதலை செய்வது தொடர்பான முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
தேர்தலை கருத்தில் கொண்டு ஜெயலலிதா இரட்டை வேடம் போடுகிறார். மூன்று பேருக்கும் தூக்கு தண்டனை வழங்கப்படவேண்டும் என்பதே காங்கிரஸ் கட்சியின் கருத்து’ என நாராயணசாமி தெரிவித்துள்ளார்.