இஸ்லாமாபாத், பிப் 24 – பாகிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகள் பதுங்கி இருக்கும் பகுதிகளில் போர் விமானங்கள் குண்டு வீசி தாக்குதல் நடத்தியதில் 20 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
பாகிஸ்தானில் உள்ள கைபர் பழங்குடியின பகுதிகளில் தலிபான் தீவிரவாதிகளின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. இந்த பகுதிகளில் உள்ள திராஹ் வால்லி மற்றும் மலைப்பகுதிகளில் மறைவான இடங்களில்
முகாம்கள் அமைத்து தலிபான்கள் ஆயுத பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 2010ம் ஆண்டு பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 23 பேரை, தலிபான்கள் கடத்தி சென்று அவர்களது தலையை வெட்டி கொடூரமாக கொலை செய்தனர்.
இதையடுத்து கடந்த வாரம் பாகிஸ்தான் ராணுவம், போர் விமானங்கள் மூலம் அப்பகுதிகளில் அதிரடி தாக்குதல் நடத்தியதில், வடக்கு வாஜிரிஸ்தான் பகுதியில் பதுங்கியிருந்த 40 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் பிரதமர் ஒப்புதல் வழங்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில், பாகிஸ்தான் ராணுவம் நேற்றும் தொடர்ந்து நடத்திய அதிரடி தாக்குதலில், போர் விமானங்கள் கைபர் பழங்குடியின பகுதிகளில் குண்டு வீசி தாக்குதல் நடத்தின.
இதில் 20 தலிபான்கள் கொல்லப்பட்டனர். மேலும் பலர் படுகாயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து நேற்று காலை தாக்குதல் நடத்திய பகுதிகளை ராணுவ அதிகாரிகள் பார்வையிட்டனர். போர் விமானங்கள் தாக்குதலில் அப்பகுதியில் இருந்த வெடிகுண்டு தொழிற்சாலை தரைமட்டமாக்கப்பட்டு உள்ளது.