தூத்துக்குடி, பிப் 25 – தூத்துக்குடியின் ஸ்டிராங் மேன் என்று நீண்ட காலமாக அழைக்கப்பட்டு வரும் திமுக மாவட்டச் செயலாளர் என்.பெரியசாமிக்கு எதிராக சொத்துக் குவிப்பு வழக்கில் வாதாடி, பெரியசாமியின் 12 வாகனங்களை முடக்க காரணமாக இருந்த ஒரே காரணத்திற்காக தூததுக்குடி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் என்ற பரிசைப் பெற்றுள்ளார் அதிமுக வழக்கறிஞர் ஜெயசிங் தேவராஜ்.
இவர் தூத்துக்குடி நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றி வருகிறார். அரசு வழக்கறிஞராகவும் இருந்துள்ளார். சாயர்புரம் போப் கல்லூரி செயலாளராகவும் இருக்கிறார்.
பல முக்கிய வழக்குகளில் வாதாடிய பெருமைக்குரியவர்.
கடந்த 2004 ஆம் ஆண்டு சொத்துக் குவிப்பு வழக்கில் திமுக மாவட்ட செயலாளர் என்.பெரியசாமிக்கு எதிராக வாதடியவர். பெரியசாமியின் 12 வாகனங்களையும், சொத்துக்களையும் முடக்கி வைக்க காரணமாக இருந்தவர்.
இதுதான் தற்போது அவருக்கு எம்.பி. சீட்டைப் பெற்றுத்தர முக்கியக் காரணமாக அமைந்துள்ளது. சி.எஸ்.ஐ.டயோசிசன் தேர்தலில் வைகுண்டராஜனின் ஆதரவு பெற்ற எஸ்.டி.கே.ராஜன் அணிக்கு எதிராக டயமன்ட் சீ புட் அணியில் இடம் பெற்று போட்டியிட்டு வெற்றி பெற்றவரும் கூட வழக்கறிஞர் ஜெயசிங் தேவராஜ்.