Home வணிகம்/தொழில் நுட்பம் வணிகப் பார்வை: “மாஸ்” நிறுவனத்தின் மானத்தை வாங்கிய ஒரு தட்டு ‘நாசி லெமாக்’

வணிகப் பார்வை: “மாஸ்” நிறுவனத்தின் மானத்தை வாங்கிய ஒரு தட்டு ‘நாசி லெமாக்’

1340
0
SHARE
Ad

MAS logo 440 x 215பிப்ரவரி 28 – தேங்காய் பால் இட்டு வடிகட்டிய பச்சரிசி சாதம், மொற மொறவென்று பொரிக்கப்பட்ட மெல்லிய நெத்திலி கொஞ்சம், வறுக்கப்பட்ட வேர்க்கடலை ஒரு கைப்பிடி, பிரதமர் நஜிப்பால் பிரபலமாக்கப்பட்ட காங்கோங் என்ற கீரை வகையின் சில கீற்றுகள், நறுக்கப்பட்ட வெள்ளரிக்காய், அவித்தோ, பொரித்தோ வைக்கப்பட்ட முட்டை ஒன்று –  இவை எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தால் போல், இவை எல்லாவற்றையும் ஒன்றாகப் பிசைந்து சாப்பிடுவதற்கு ஏதுவாக நெத்திலி கருவாட்டு மீனைக் கொண்டு காய்ந்த மிளகாய் அரைத்து செய்யப்பட்ட சம்பால் என்ற ஒருவகை சாந்து கூட்டு!

#TamilSchoolmychoice

இதுதான் நாசி லெமாக்’!

மலேசியாவின் தேசிய உணவாக அங்கீகரிக்கப்பட்டு, எல்லா மலேசியர்களாலும் எல்லா வேளைகளிலும் சாப்பிடப்படும் – தெருமுனைகள் தொடங்கி எல்லா நட்சத்திர விடுதிகளிலும் பரிமாறப்படும் நமது நாட்டின் பாரம்பரிய உணவு.

அதுதான் எங்களுக்குத் தெரியுமே, அதற்கு ஏன் இத்தனை முன்னோட்டம் என நீங்கள் கேட்பது புரிகின்றது. ஒரு நாட்டின் மாபெரும் தேசிய விமான சேவை நிறுவனத்திற்கும் ஒரு தட்டு நாசி லெமாக் உணவிற்கும் சம்பந்தம் எப்படி வந்தது என்று நீங்கள் குழம்புவதும் புரிகின்றது.

அந்த ஒரு தட்டு நாசி லெமாக், மாஸ் போன்றதொரு மாபெரும் விமான நிறுவனத்தையே வணிக சந்தையில் மதிப்பிழக்கச் செய்து, அவமானப்படுத்தி விட்டது என்றால் நம்ப முடிகின்றதா? ஆனால் அதுதான் நடந்தது!

மலேசிய விமான சேவைகளில் நாசி லெமாக் உணவு அண்மையக் காலங்களில் பிரசித்தம். அனைவருக்கும் தெரிந்த உணவு என்பதாலும் நாட்டின் அடையாள உணவு என்பதாலும், மாஸ் விமான சேவையிலும் இந்த உணவு வழங்கப்பட்டு வந்தது. இங்கேதான் ஆரம்பித்தது வம்பும்!

நாசி லெமாக் உணவை அடிக்கடி சாப்பிடும் மலேசியர்களுக்கு ஓர் உணர்வு எப்போதும் ஏற்படும். மேற்கூறப்பட்ட அதன் இணைப்பு உணவுகளில் ஏதாவது ஒன்று குறைந்துவிட்டாலோ, சரியாக இல்லாவிட்டாலோ, நாசி லெமாக் சாப்பிட்டதன் முழுத் திருப்தி கிடைக்காது. அதுதான் நடந்தது ரிட்சுவான் இஸ்மாயில் என்ற மலேசிய சமையல்கலை நிபுணருக்கு!

Chef Wan 300 x200செஃப் வான் (Chef Wan) என்ற பெயரில் தொலைக்காட்சிகளில் சமையல் நிகழ்ச்சிகள் நடத்தியும், சமையல் குறிப்புகள் கொண்ட நூல்கள், கட்டுரைகள் எழுதியும் மலேசிய உணவுகளை உலகமெங்கும் பிரபலமாக்கியவர் ரிட்சுவான் இஸ்மாயில்.

ஒரு தொழில் துறை கணக்காய்வாளரான (Accountant) ரிட்சுவான் பின்னர் சமையல் கலையில் ஆர்வம் கொண்டு அதில் முழு மூச்சாக ஈடுபட்டு பிரபலமானார். கடந்த ஜனவரி 29ஆம் தேதி மாஸ் விமானம் மூலம், கோலாலம்பூரில் இருந்து பாங்காக் சென்றபோது அவருக்கு பரிமாறப்பட்ட ஒரு தட்டு நாசி லெமாக்தான் மாஸ் விமானத்தின் மானத்தையே வாங்கிவிட்டது,

புகைப்படங்களை செல்பேசி மற்றும் இணையத்தின் வழி உடனுக்குடன்  பகிர்ந்து கொள்ளும் இன்ஸ்டாகிராம் (Instagram) என்ற செயலியின் மூலம் தனக்கு வழங்கப்பட்ட நாசி லெமாக் உணவைப் படம் பிடித்து அனுப்பிய ரிட்சுவான், அதோடு மாஸ் விமானத்தில் வழங்கப்பட்ட நாசி லெமாக் உணவு நிர்வாணமாக இருந்தது என்ற கருத்தோடு கூடிய வாசகங்களையும் போட்டு விட்டார். நாம் முன்பு சொன்னது போல் நாசி லெமாக் என்ற உணவுக்கே உரிய சில இணைப்புகள் மாஸ் நிறுவன சேவையில் பரமாறப்படவில்லை என்பதைச் சுட்டிக் காட்டும் விதமாகத்தான் அவர் அப்படி கூறியிருந்தார்.

Chef Wan nasi lemak 300 x 200(ரிட்சுவான் இன்ஸ்டாகிராம் மூலம் அனுப்பிய நாசி லெமாக் புகைப்படம்)

இந்த கருத்தைச் சொன்னது உலகப் பிரபலமான ஒரு சமையல் நிபுணர் என்பதால் உடனே தகவல் ஊடகங்களும் இதை ஒரு முக்கிய செய்தியாக பிரசுரக்க வணிக வட்டாரங்களில் இந்த விவகாரம் காட்டுத் தீயாக பரவி விட்டது.

இன்றைக்கு ஒவ்வொரு நிறுவனமும் தனது அடையாளமாக தனது பெயரையும் சின்னத்தையும் வணிக முத்திரையாக (brand) பயன்படுத்தி வருகின்றன. ஒரு நிறுவனத்தின் வணிக பலத்தை, மதிப்பை நிர்ணயிப்பது இந்த வணிக முத்திரைகள்தான்.

உதாரணமாக, ஆப்பிள் நிறுவனத்தின் பெயரும் சின்னமும் சேர்ந்த அதன் வணிக முத்திரையின் மதிப்பு மட்டும் இன்றைக்கு 98.3 பில்லியன் அமெரிக்க வெள்ளியாகக் கணக்கிடப்பட்டு, உலகிலேயே அதிக விலையுள்ள வணிக முத்திரையாக அது கருதப்படுகின்றது.

அந்த வகையில் மாஸ் நிறுவனத்தின் வணிக முத்திரையின் மதிப்பும் செல்வாக்கும் ஒரு தட்டு நாசி லெமாக் உணவால் அது குறித்து ரிட்சுவான் வெளியிட்ட கருத்தால் ஒரே நாளில் அதலப் பாதாளத்திற்கு சென்றுவிட்டது.

இதனால்தான் எவ்வளவு பெரிய நிறுவனமாக இருந்தாலும், சின்ன சின்ன விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் இல்லாவிட்டால் அதன் ஒரு சிறிய கோளாறால், மாபெரும் நிறுவனத்தின் மதிப்பும் அதன் வணிக முத்திரையின் மதிப்பும் சந்தையில் சரிந்து விடும் என்றும் வணிக வட்டாரங்களிலும், பல்கலைக் கழகங்களில் வணிகப் படிப்புகளிலும் அடிக்கடி கூறுவார்கள்.

அதுதான் மாஸ் நிறுவனத்திற்கும் நிகழ்ந்தது.

ஏர் ஆசியாவின் சமயோசித பிரவேசம்

இந்த இடத்தில்தான் எதிர்பாராதவண்ணம் மாஸ் நிறுவனத்தின் போட்டி நிறுவனமான ஏர் ஏசியா, தனத் சாமர்த்தியமான விளம்பர யுக்தியோடு இந்த சர்ச்சைக்குள் நுழைந்து தனது சமயோசித வணிக அறிவை மீண்டும் ஒரு முறை காட்டி சந்தையில் தனது மதிப்பை மேலும் கூட்டிக் கொண்டது.

வணிக நிறுவனங்களுக்குள்  கடுமையான போட்டி ஏற்படும் போது, தங்களின் மறைமுக சமயோசித விளம்பரங்களால் தங்களின் போட்டி நிறுவனங்களின் காலை வாருவதும், அவற்றின் குறைபாடுகளைச் சுட்டிக் காட்டி அதன் மூலம் தங்களின் தனிச்சிறப்புக்களை பயனீட்டாளர்களுக்கு விளம்பரம் மூலம் தெரியப்படுத்துவதும் காலம்காலமாக பயன்படுத்தப்பட்டு வரும் விளம்பர யுக்தி.

அதையேதான் ஏர் ஏசியாவும் செய்தது.

Nasi Lemak Air Asia 400 x 300(ஏர் ஏசியா பிரசுரித்த நாசி லெமாக் விளம்பரம்)

ஒரு விளம்பரத்தின் மூலம் தங்களின் விமான சேவையில் வழங்கப்படும் நாசி லெமாக் உணவை படம் பிடித்துக் காட்டி, “எங்களின் நாசி லெமாக் முழுமையானது” என ஏர் ஏசியா செய்த விளம்பரம் உடனடியாக மக்களின் மனங்களில் ஆழப் பதிந்துவிட்டதோடு, பயனீட்டாளர்களின் குறிப்பறிந்து நடவடிக்கையில் இறங்கிய அதன் மற்றொரு சமயோசித யுக்தியாக வணிக வட்டாரங்களில் பாராட்டப்படுகின்றது.

தனது சொந்த விளம்பரத்தின் மூலம் மாஸ் விமான சேவையில் ஏற்பட்ட ஒரு குளறுபடியையும், அதனால் மாஸ் நிறுவனத்திற்குக் கிடைத்த அவப் பெயரையும், தெரியாதவர்கள் கூட தெரிந்து கொள்ளும் வண்ணம் உலகத்திற்கே படம் போட்டுக் காட்டி விட்டது ஏர் ஏசியா.

இவ்வளவுக்கும் பிறகு மாஸ் நிறுவனமும் அதன் உணவு விநியோக நிறுவனமும் விளக்கம் கொடுத்து மன்னிப்பு கேட்டுக் கொண்டார்கள் என்பது தனிக்கதை.  மாஸ் நிறுவனத்திற்கு உணவு விநியோகிக்கும் குத்தகை பெற்ற நிறுவனம் முன்னாள் பிரதமர் அப்துல்லா படாவியின் தம்பியின் நிறுவனம் என எதிர்க்கட்சி சார்பு இணையத்தளங்கள் குத்திக் காட்டி அரசியல் நடத்தியது மற்றொரு கிளைக் கதை.

நவீன நட்பு ஊடகங்களின் பெரும்பலம்

உலகையே மாற்றி வரும் தகவல் ஊடகத் தொழில் நுட்பப் புரட்சியின் மற்றொரு சான்றாக இந்த மாஸ்-ஏர் ஏசியா நாசி லெமாக் சர்ச்சை திகழ்கின்றது.

தனக்கு விமானத்தில் வழங்கப்பட்ட நாசி லெமாக் உணவைப் பற்றி சமையல் நிபுணர் ரிட்சுவான், பக்கம் பக்கமாக கட்டுரை எழுதவில்லை. பத்திரிக்கையாளர் மாநாடு கூட்டி அறிவிக்கவில்லை. பேட்டிகள் எதுவும் வழங்கவில்லை.

Instagram 300 x200புகைப்படங்களை பகிர்ந்து கொள்ளும் இன்ஸ்டாகிராம் என்ற செயலியின் மூலமாக அவர் தனக்கு வழங்கப்பட்ட நாசி லெமாக் உணவுத் தட்டைப் படம் எடுத்து தனது கைத்தொலைபேசியின் மூலமாக மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள அதுவே உலகம் முழுவதற்குமான அறிவிப்பாக உருமாறியது.

அவர் ஒரு சில நிமிடங்களிலேயே செய்து முடித்த எளிமையான ஒரு செயல் இரண்டு விமான நிறுவனங்களுக்கும் ஏகப்பட்ட செலவுகளையும், விளம்பரங்களையும் தேடிக் கொடுத்துவிட்டது.

பத்திரிக்கைககளும் குறிப்பாக இணைய செய்தித் தளங்களும் இந்த தகவலை மோப்பம் பிடித்து, ரிட்சுவான் எடுத்த அந்த புகைப்படத்தோடு “நாசி லெமாக் சர்ச்சையை பக்கம் பக்கமாக மக்களுக்குப் பரிமாறின.

ஆம்! வணிக நிறுவனங்களின் போட்டிகளுக்காகவும்,  அவை தங்களின் வணிக வளர்ச்சிகளுக்காகவும், விளம்பரங்களுக்காகவும், சந்தையில் தங்களின் மதிப்பைக்கூட்டிக்கொள்வதற்காகவும் இனிவரும் காலங்களில் நட்பு ஊடகங்களும், செயலிகளும், கைத்தொலைபேசிகளும் எப்படியெல்லாம் பயன்படுத்தப்படப் போகின்றன என்பதை நமக்கு எடுத்துக் காட்டும் ஒரு முன்னோட்டக் காட்சியாக மாஸ்-ஏர் ஏசியா நாசி லெமாக் சர்ச்சை அரங்கேறி முடிந்திருக்கின்றது.

-இரா.முத்தரசன்