Home தொழில் நுட்பம் ஐஓஎஸ் 7.1 – தமிழ் உள்ளீடுகளில் வரவேற்கத்தக்க மேம்பாடுகள்

ஐஓஎஸ் 7.1 – தமிழ் உள்ளீடுகளில் வரவேற்கத்தக்க மேம்பாடுகள்

618
0
SHARE
Ad

iOs Vanakam correction 300 x 200மார்ச் 11 – ஆப்பிள் நிறுவனத்தின் கையடக்கக் கருவிகளுக்காக புதிய மேம்பாடுகளுடன் நேற்று முதல் அறிமுகம் கண்டுள்ள ஐஓஎஸ் 7.1 இயங்குதள மென்பொருளில் தமிழ் உள்ளீடுகள், பயன்பாடுகளும் மேம்படுத்தப் பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

#TamilSchoolmychoice

கடந்த செப்டம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட ஐஓஎஸ் 7 இயங்குதள மென்பொருளில் காணப்பட்ட சில குறைகளை நிவர்த்தி செய்து மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் தற்போது ஐஓஎஸ் 7.1 மென்பொருளை பதிவிறக்கத்திற்காக ஆப்பிள் நிறுவனம்  வெளியிட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஐஓஎஸ் 7 வெளியானபோது அதன்  உள்ளீடுகளாக இரண்டு விதமான தமிழ் எழுத்து விசைகள் (Tamil Key Board)  நேரடியாக இடம் பெற்றிருந்தது உலகத் தமிழர்களை பூரிப்பில் ஆழ்த்தியது எனலாம்.

இதன் மூலம், தமிழ் மொழியை வேறு ஒரு செயலியின் மூலமாக பதிவிறக்கம் செய்து, அதன்பின்னர் தமிழ் மொழியைப் பயன்படுத்தும் நடைமுறைக்குப் பதிலாக நேரடியாகவே பயனர்கள் தமிழ் மொழியை கையடக்கக் கருவிகளில் பயன்படுத்தும் நடைமுறை ஏற்படுத்தப்பட்டிருந்தது.

இதற்கு முன்னால் செல்லினம் போன்ற குறுந்தகவல் அனுப்பும் செயலியை முதலில் நமது கையடக்கக் கருவிகளில் பதிவிறக்கம் செய்து விட்டு அதன் பின்னர்தான் தமிழில் நாம் விசைப் பலகையை பயன்டுத்த முடியும் என்ற நிலைமை இருந்தது.

ஆனால் ஐஓஎஸ் 7 நேரடியாக தமிழ் 99 மற்றும் முரசு அஞ்சல் என்ற இருவித தமிழ் விசைகளை உள்ளீடு செய்திருந்தது.

புதிய மேம்பாடுகள்

இப்போது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஐஓஎஸ் 7.1 மூலம் ஐபோன்கள், ஐபோட் டச் (iPod Touch), ஐபேட் போன்ற அனைத்து வகை கையடக்கக் கருவிகளிலும் தமிழைப் பயன்படுத்துவதில் குறிப்பிடத்தக்க மேம்பாட்டு அம்சங்கள் இடம் பெற்றிருக்கின்றன.

ஐஓஎஸ் 7இல் அஞ்சல் தமிழ் விசைகளில் முன்பு இருந்த சில சிறிய குறைபாடுகள் தற்போது நிவர்த்தி செய்யப்பட்டிருக்கின்றன. குறிப்பாக ‘vanakkam’ என்ற வார்த்தையை தட்டும்போது (type)‘வனக்கம் என்ற வார்த்தை திரையில் தோன்றும். தற்போது ஐஓஎஸ் 7இல் இது சரி செய்யப்பட்டுள்ளது. வணக்கம் என்ற வார்த்தை சரியாகத் திரையில் தெரிகின்றது.

சில சமயங்களில் நீண்ட பெயர்களை நாம் உள்ளிடும் போது அவை தானாகவே சுருக்கப்பட்டு வேறு வார்த்தைகளாக மாறுகின்ற நிலைமை முன்பு இருந்தது. உதாரணமாக முத்து நெடுமாறன் என உள்ளிடும்போது, அந்த பெயர் தானாகவே சுருக்கப்பட்டு முத்து நடுமா..என்று திரையில் தோற்றமளித்தது. சரியாக சுருக்கப்பட வேண்டுமானால்,முத்து நெடுமா…” அல்லது  “முத்து நெடு.” என்றுதான் சுருக்கப்பட்டிருக்க வேண்டும். இந்த குறைபாடும் புதிய ஐஓஎஸ் 7.1இல் சரி செய்யப்பட்டிருக்கின்றது.

இது போன்ற குறைபாடுகள் சரி ஐஓஎஸ் 7.1இல் சரி செய்யப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது என்பதோடு இதன் மூலம் கையடக்கக் கருவிகளில் தமிழின் பயன்பாடு மேலும் சுலபமானதாக்கப்பட்டிருக்கின்றது.

இன்னும் தீர்க்கப்படாத குறைகள்….

இருப்பினும் ஆப்பிள் நிறுவனக் கையடக்கக் கருவிகளில் இன்னும் ஒரு குறைபாடு சரி செய்யப்படாமல் இருப்பதை நாம் சுட்டிக்காட்டத்தான் வேண்டும். iWorks apps எனப்படும் சில செயல்பாட்டு செயலிகளான Keynote, Pages and Numbers போன்ற செயலிகளில் அஞ்சல் விசைப் பலகையைப் பயன்படுத்தி தமிழை உள்ளீடு செய்யும்போது தமிழ் எழுத்துகள் திரையில் தோன்றுவதில்லை.

ஆனால் இந்தப் பிரச்சனை தமிழ் 99 தமிழ் விசைப் பலகையைப் பயன்படுத்தும்போது எழுவதில்லை என்றாலும், பயனர்கள் இரண்டு விசைப் பலகைகளையும் மாறி மாறி பயன்படுத்துவது என்பது நடைமுறையில் சாத்தியமல்ல.

தனது அடுத்த பதிப்புகளில் ஆப்பிள் நிறுவனம் இந்த குறைபாட்டை சரி செய்யும் என பயனர்கள்  எதிர்பார்க்கின்றார்கள்.

இவ்வாறு ஆப்பிள் கையடக்கக் கருவிகளைப் பயன்படுத்துபவர்கள் தமிழை உள்ளீடு செய்வதிலும் பயன்படுத்துவதிலும் குறைபாடுகளைக் கண்டால், ஆப்பிள் நிறுவனத்தின் பயனீட்டாளர் சேவை தொலைபேசிக்கு அழைத்து தங்களின் பிரச்சனைகளையும் குறைகளையும் தெரிவிக்கலாம்.