மார்ச் 11 – ஷா ஆலாம் நகரில் தமிழைப் பதாகைகளில் (banners) தமிழைப் பயன்படுத்துவது குறித்து ஷா ஆலாம் நகர சபை விதித்திருக்கும் கட்டுப்பாடு குறித்து இந்திய இயக்கம் ஒன்று சாடியுள்ளது.
இதுகுறித்து மலேசிய தமிழ் இளைஞர் மணிமன்றங்களின் முன்னாள் தேசியத் தலைவர் சு.வை.லிங்கம் (படம் – முழுப் பெயர்: சு.வைத்தியலிங்கம்) கண்டனம் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் மார்ச் 23ஆம் தேதி சு.வை.லிங்கம் சார்ந்துள்ள இந்திய அரசு சார்பற்ற இயக்கம் ஒன்று தனது குடும்ப தின விழாவை ஷா ஆலாம் ஸ்ரீ மூடா இடைநிலைப் பள்ளியில் நடத்த திட்டமிட்டிருந்தது.
இந்த விழாவை விளம்பரப்படுத்த இந்த அரசு சார்பற்ற இந்தியர் இயக்கம் அதற்கான பதாகைகளை ஷா ஆலாம் சுற்று வட்டாரத்தில் சில இடங்களில் வைக்க, மலாய் மற்றும் தமிழ் வார்த்தைகளோடு தயார் செய்திருந்தது.
“இந்த பதாகைகளை ஷா ஆலாம் சுற்றுவட்டாரத்தில் தொங்க விடுவதற்கு நாங்கள் ஷா ஆலாம் நகரசபையிடம் அனுமதி கேட்டு விண்ணப்பம் செய்திருந்தோம். ஆனால் நகரசபையினர் இதற்கான அனுமதியைத் தர மறுத்துவிட்டனர். பதாகைகளில் தமிழைப் பயன்படுத்துவது என்றால் முதலில் டேவான் பகாசா டான் புஸ்தாகா அமைப்பிடம் அனுமதி பெற்று வரவேண்டும் என எங்களிடம் கூறுகின்றனர்” என்று சு.வை.லிங்கம் தெரிவித்துள்ளார்.
டேவான் பகாசா டான் புஸ்தாகா (Dewan Bahasa Dan Pustaka) என்பது மலேசியாவில் மலாய் மொழியின் பயன்பாட்டை ஒருங்கிணைப்பதற்காக உருவாக்கப்பட்ட ஓர் அரசாங்க அமைப்பாகும்.
இந்திய சமுதாயத்திற்கு குறிப்பாக தமிழ் மொழி பயன்படுத்துபவர்களுக்கு எதிராக ஷா ஆலாம் நகர சபையினர் கொண்டு வந்துள்ள இந்த கட்டுப்பாட்டு விதிமுறைகள் குறித்து சு.வை.லிங்கம் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.
தங்களின் அரசு சார்பற்ற இயக்கம் பல்லாண்டு காலமாக தமிழ் பதாகைகளில் தமிழை எந்தவிதப் பிரச்சனைகளுமின்றி பயன்படுத்தி வந்துள்ளதாகவும் இத்தகைய பிரச்சனையைத் தாங்கள் எதிர்நோக்குவது இதுதான் முதல் முறையாகும் என்றும் சு.வை.லிங்கம் கூறியுள்ளார்.
பதாகைகளில் பயன்படுத்தப்படும் தமிழ் மொழி குறித்து விளங்கிக் கொள்வதற்கு சிரமங்கள் இருக்குமானால் அதற்காக தமிழ் நன்கறிந்த அதிகாரி ஒருவரை ஷா ஆலாம் நகரசபை நியமிக்க வேண்டும் என்றும் லிங்கம் கருத்து தெரிவித்துள்ளார்.
“மற்ற வகை விளம்பரப் பலகைகள், சுவரொட்டிகள், பதாகைகளுக்கும் இதே போன்ற கட்டுப்பாட்டு விதிமுறைகளை ஷா ஆலாம் நகர சபை நிர்ணயித்துள்ளது என்பதும் கவலைக்குரிய விவகாரமாகும். இது குறித்து சிலாங்கூர் மாநில அரசாங்கம் உடனடியாக விளக்கம் தர வேண்டும்” என்றும் சு.வை.லிங்கம் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த விவரங்களை ஃபிரி மலேசியா டுடே இணைய செய்தித் தளம் வெளியிட்டுள்ளது.