மார்ச் 11 – கடந்த நான்கு நாட்களாக காணாமல் போன மாஸ் MH370 விமானம் குறித்து பல கோணங்களில் விசாரணைகள் நடைபெற்று வரும் வேளையில், ‘நைன் நெட்வொர்க்’ என்ற ஆஸ்திரேலிய ஊடகம் ஒன்றின் ‘Current Affair’ நிகழ்ச்சிக்கு பெண் ஒருவர் கொடுத்திருக்கும் நேர்காணல் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, பயணிகள் யாரும் நுழைய முடியாத கடும் பாதுகாப்புகளுடன் கூடிய விமானிகள் அறையில் (காக்பிட்), அப்பெண்ணும், அவளது தோழியும் அனுமதிக்கப்பட்டு விமானிகளுடன் பயணம் முடியும் வரை அரட்டையடித்துள்ளனர்.
இந்த அனுமதியை வழங்கியது வேறு யாரும் அல்ல. காணாமல் போன மாஸ் MH370 விமானத்தின் துணை விமானியான பாரிக் அப்துல் ஹமீதும், அவரது மற்றொரு சக விமானியும் தான் என்ற திடுக்கிடும் தகவல் தெரியவந்துள்ளது.
புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ள நேர்காணல்
நைன் நெட்வொர்க் என்ற அந்த தொலைக்காட்சி நிலையத்திற்கு தானாக முன்வந்து நேர்காணல் அளித்துள்ள அப்பெண்ணின் பெயர் ஜோண்டி ரூஸ்.
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு புக்கெட்டில் இருந்து கோலாலம்பூருக்கு அவர்கள் பயணம் மேற்கொண்ட போது, மாஸ் நிறுவனத்தின் விமானக் கட்டுப்பாட்டு விதிகளை மீறி, விமானிகள் அப்பெண்கள் இருவரையும் தங்களது அறைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அங்கு புகைபிடித்ததோடு மட்டுமல்லாது பெண்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டு, அரட்டை அடித்துக் கொண்டு வந்துள்ளனர்.
“அந்த பயணம் முழுவதும் எங்களுடன் அரட்டை அடித்துக் கொண்டு வந்தனர். புகை பிடித்தனர். ஒரு கட்டத்தில் விமானத்தை இயக்குவதை விட்டு விட்டு முழுவதுமாக தங்கள் இருக்கைகளிலிருந்து திரும்பி உட்கார்ந்து பேசிக் கொண்டு வந்தனர்” என்று ஜோண்டி ரூஸ் கூறியுள்ளார்.
அதுமட்டுமின்றி, தனது தோழி மேரீ கைகளைப் பற்றி, ‘நீங்கள் மிகவும் படைப்பாற்றல் மிக்கவர்’ என்றும், அவரது நகப்பூச்சை விமர்சித்ததாகவும் ரூஸ் தெரிவித்துள்ளார்.
கடந்த 2011 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்த சம்பவம் நடந்துள்ளது. விமானத்தில் இருந்த இந்த பெண்கள் இருவரையும் விமானியின் அறைக்கு அழைத்துச் சென்றது ஒரு விமானப் பணியாளர் என்றும் தெரியவந்துள்ளது.
மேலும், விமானிகள் இருவரும் இந்த பெண்கள் இருவரையும், அவர்களது பயண காலத்தை மாற்றியமைக்குமாறும், தங்களுடன் சேர்ந்து இரவில் நகரத்தை சுற்றிப்பார்க்க வருமாறும் அழைத்துள்ளனர்.
தகவலை முன்வந்து கூறுவதன் காரணம்
மாஸ் MH370 விமானம் காணாமல் போனது குறித்து தான் செய்திகளில் படித்ததாகவும், அதில் பாரிக் தான் துணை விமானி என்பதை அறிந்து மிகவும் அதிர்ச்சி அடைந்ததாகவும் ரூஸ் தெரிவித்துள்ளார்.
“பாரிக்கின் குடும்பத்தினரும், நண்பர்களும் அவரது பேஸ்புக் பக்கத்தில் வந்து பதிவு செய்யும் வரிகள் என்னை மிகவும் கவலையடையச் செய்தது. விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் குடும்பத்தினரின் சோகம் என்னை வதைத்தது” என்று ரூஸ் கூறியுள்ளார்.
தற்போது தான் இந்த தகவலையும், புகைப்படங்களையும் வெளியிடக் காரணம், காணாமல் போன விமானத்தை தேடுவதற்கு இந்த தகவல் உதவலாம் என்றும் அப்பெண் கூறியுள்ளார்.