Home வணிகம்/தொழில் நுட்பம் ஐஓஎஸ் 7 தமிழ் விசை உள்ளீடுகளினால் தகவல் பரிமாற்றத்தில் புரட்சிகரமான மாறுதல்கள் ஏற்படும் – இந்து...

ஐஓஎஸ் 7 தமிழ் விசை உள்ளீடுகளினால் தகவல் பரிமாற்றத்தில் புரட்சிகரமான மாறுதல்கள் ஏற்படும் – இந்து ஆங்கில நாளிதழ் மதிப்பீடு

760
0
SHARE
Ad

Screenshot (2)செப்டம்பர் 21 – ஐஓஎஸ் 7 (iOS 7) எனப்படும் இயங்குதளத்தில் ஆப்பிள் நிறுவனம் தமிழ் விசைகளுடன் கூடிய செயலியை ஐபோன்களுடன் நேரடியாக இணைத்துள்ளதால் இனிவரும் காலங்களில் பயனீட்டாளர்கள், தங்களின் திறன்பேசிகளின் (Smartphone) வாயிலாக, தமிழ் மொழியில் உள்ளடக்கங்களை பகிர்ந்து கொள்வதிலும், தகவல்களைப் பரிமாறிக் கொள்வதிலும் புரட்சிகரமான மாற்றங்கள் ஏற்படும் என தமிழகத்தில் இருந்து வெளிவரும் இந்து ஆங்கில நாளிதழ் மதிப்பிட்டுள்ளது.

#TamilSchoolmychoice

ஐஓஎஸ் 7 இயங்குதளங்களில் தமிழ் உள்ளீடுகள் குறித்து கார்த்திக் சுப்ரமணியன் என்ற தகவல் தொழில் நுட்ப ஆய்வாளர் நேற்று (20 செப்டம்பர் 2013) வெளியிட்டுள்ள கட்டுரையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அந்த கட்டுரையில் மேலும் விவரிக்கப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:-

“தற்போது மக்களிடையே முகநூல், ட்விட்டர் போன்ற சமூக வலைத் தளங்களின் வழி தகவல் பரிமாற்றங்கள் நிகழ்த்தப்படும் போக்கு பெருமளவில் பெருகி வருகின்றது. தமிழ் உள்ளீடுகளினால் தமிழிலேயே இத்தகைய பரிமாற்றங்கள் நிகழ்வது சாத்தியமாகியுள்ளதோடு, இனி புரட்சிகரமான அளவில் தமிழில் தகவல் பெருக்கம் ஏற்படும்.

காரணம், தற்போது செல்பேசிகளின் மூலமாகத்தான் புதிய தலைமுறையினர் தகவல் உள்ளடக்கங்களை அடிக்கடி உருவாக்குகின்றனர் அல்லது பரிமாறிக் கொள்கின்றனர். சிலவகை அண்ட்ரோய் திறன்பேசிகளில் ஏற்கனவே சில செயலிகளின் மூலம் தமிழ் விசைகள் உள்ளீடு செய்யப்பட்டிருந்தாலும், ஆப்பிள் நிறுவனக் கருவிகளில் தமிழ் மொழியின் உள்ளீடு நிகழ்ந்திருப்பது தொழில் நுட்ப மேம்பாட்டாளர்களைப் பொறுத்தவரை முக்கியமான மாற்றமாகும்.

மதன் கார்க்கியின் கருத்து…

madhan karky

இது குறித்து கருத்துரைத்த பிரபல தமிழக பாடலாசிரியரும், தமிழகத்தின் அண்ணா பல்கலைக் கழகத்தின் தகவல் தொழில்நுட்பத் துறை விரிவுரையாளருமான மதன் கார்க்கி, ஆப்பிள் நிறுவனத்தின் கருவிகளில் தமிழ் விசை உள்ளீடுகளினால் தமிழ் உள்ளடக்கங்களுக்கான (content) தேவைகளும் அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே, ஆப்பிள் கருவிகளில் தமிழ் எழுத்துருகள் மற்ற இயங்குதளங்களை விட சிறப்பான முறையில் வெளியிடப்பட்டிருக்கின்றன, ஆனால் தற்போது, நேரடியான உள்ளீடு பொருத்தப்பட்டிருப்பதால், தமிழைப் பயன்படுத்தும் நிலைமை மேலும் விரிவாக மாற்றம் காணும் என்றும் அவர் மேலும் விவரித்துள்ளார்.

மதன் கார்க்கி தமிழ் கணினிப் பயன்பாட்டிற்காக ஒரு அறக்கட்டளையை நிறுவி நடத்தி வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முத்து நெடுமாறனின் கருத்து…

muthu-nedumaran“செல்லினம்” என்ற தமிழ் விசைகளுடன் கூடிய செயலியின் வடிவமைப்பாளரான முத்து நெடுமாறன் கூறுகையில் இந்திய மொழிகளில் தமிழ் மொழிதான் அதிகமான அளவில் உள்ளடக்கப் பயன்பாட்டில் முன்னணி வகித்து வருகின்றது என்று குறிப்பிட்டுள்ளார்.

பல உலகளாவிய பெரும் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களின் தமிழ் உள்ளீடுகளுக்காக தேர்வு செய்து அணுகும் முக்கிய தொழில் நுட்ப மேம்பாட்டாளராக முத்து நெடுமாறன் திகழ்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

“சமூக வலைத்தளங்களைப் பொறுத்தவரை அவற்றின் முக்கியப் பங்கு பன்மொழிகளின் அவற்றைப் பயன்படுத்த முடியும் என்பதாகும். குறுந்தகவல்கள், குறுகிய உள்ளடக்கங்கள் மூலம் பயனீட்டாளர்கள் தங்களுக்கு வசதியான தாய்மொழிகளில் தங்களின் சிந்தனைகளையும், எண்ணங்களையும் பரிமாற்றம் செய்து கொள்ள முடிகின்ற சூழ்நிலை தற்போது உருவாகியுள்ளது. உள்ளடக்கங்களைப் பெறுபவர்களும் எந்தவிதப் பிரச்சனையும் இன்றி, அனுப்பப்படுகின்ற அதே எழுத்து வடிவத்தில் படிக்க முடிகின்ற சாத்தியங்களும் இன்று ஏற்பட்டுள்ளன” என்றும் முத்து நெடுமாறன் மேலும் தெரிவித்துள்ளார்.

ஐஓஎஸ் 7 கருவிகளின் இயங்குதளங்களில் தமிழ் 99 மற்றும் அஞ்சல் என இரண்டு வகை தமிழ் விசை உள்ளீடுகள் (keyboards) இணைக்கப்பட்டுள்ளன. செல்லினம் வடிவமைத்த குழுவினரே இந்த இரண்டு தமிழ் விசை உள்ளீடுகளையும் ஐஓஎஸ் 7 இயங்கு தளங்களில் வடிவமைத்துள்ளனர் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த தமிழ் விசைகளின் மூலம் நேரடியாக தமிழில் திறன்பேசிகளின் திரைகளில் எழுத்துக்களைப் பதிக்க (type) முடியும் என்பதோடு, தமிழிலேயே இனி திறன்பேசிகளில் செய்திகளை இணையத்தில் தேட (search) முடியும்.

-மேற்கண்டவாறு இந்து நாளிதழ் ஐஓஎஸ் 7 இயங்குதளங்களில் தமிழ் மொழி இணைக்கப்பட்டுள்ளது குறித்து மதிப்பீடு செய்துள்ளது.