கொழும்பு, செப் 21 – இலங்கையில் தமிழர்கள் வசிக்கும் பகுதியான வடக்கு மாகாணத்தில் கடந்த 25 ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருந்த தேர்தல் இன்று சர்வதேச கண்காணிப்புடன் நடத்தப்படுகிறது.
தமிழீழம் வேண்டி அப்பகுதிகளில் போராட்டம் நடத்திக்கொண்டிருந்த விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை ராணுவத்திற்கும் இடையேயான போர் கடந்த 2009 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்ததையடுத்து அம்மாகாணத்தில் தேர்தலை நடத்த இலங்கை அரசு முடிவுசெய்தது.
அதன்படி இன்று இலங்கையின் வடக்கு, வடமேற்கு மற்றும் மத்திய மாகாணங்களில் காலை 7 மணி முதல் மாலை 4 மணிவரை தேர்தல் நடக்கிறது.
வடக்கு மாகாணத்தில் உள்ள 36 இடங்களில் 906 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். மாகான சபைகளுக்கு 142 உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க 43 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்கின்றனர். யாழ்பாணத்தில் 7 லட்சத்து 14 ஆயிரம் வாக்காளர்கள் வாக்களிக்கின்றனர். தேர்தல் பணியில் அரசு ஊழியர்களும், 24 ஆயிரம் காவல்துறையினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இலங்கை மாகாண தேர்தலை கண்காணிக்க இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம், பூட்டான், மாலத்தீவு, நேபாளம் ஆகிய நாடுகளில் இருந்து தேர்தல் பார்வையாளர்கள் சென்றுள்ளனர். இந்தியா சார்பில் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் கோபால்சாமி சென்றுள்ளார்.
தமிழ் மக்களின் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் சார்பில் முதல்வர் வேட்பாளராக சி.வி.விக்னேஸ்வரன் போட்டியிடுகிறார். தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்சிக்கு வீடு சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழர்களின் அமோக ஆதரவுடன் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வெற்றி பெறும் என எதிர்பார்க்ப்படுகிறது.
இந்நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வெற்றியை முறியடிக்கும் முயற்சியில் அதிபர் ராஜபக்சேவின் கட்சியினரும், ராணுவத்தினரும் ஈடுபட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.