அதன்படி வடக்கு, வடமேற்கு மற்றும் மத்திய மாகாணங்களில் கடந்த மாதம் 21ம் தேதி தேர்தல் நடந்தது. தமிழ் மக்கள் சார்பில் தமிழ் தேசிய கூட்டணி மொத்தம் உள்ள 38 இடங்களில் போட்டியிட் டது. முதல்வர் வேட்பாளராக உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி விக்னேஸ்வரன்(73) அறிவிக்கப்பட்டார். இலங்கை மாகாண தேர்தலை சர்வதேச குழு கண்காணித்தது. இந்த தேர்தலில் தமிழ் மக்கள் மிகவும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு வாக்களித்தனர். தேர்தல் முடிவுகள் உடனடியாக அறிவிக்கப்பட்டன. 30 இடங்களில் தமிழ் தேசிய கூட்டணி வெற்றி பெற்றது. இதையடுத்து வடக்கு மாகாண முதல்வராக விக்னேஸ்வரன் நேற்று பதவி ஏற்றார்.
கொழும்புவில் உள்ள அதிபர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் விக்னேஸ்வரனுக்கு, அதிபர் ராஜபக்சே பதவிப் பிரமானம் செய்து வைத்தார். இதன் மூலம் வடக்கு மாகாணத்தில் முதன் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ் முதல்வர் என்ற பெருமை விக்னேஸ்வரனுக்கு கிடைத்துள்ளது. இலங்கை பிரதமர் ஜெயரத்னே, அமைச்சர்கள், ஆளுநர் சந்திராசிரி, தமிழ் தேசிய கூட்டணி கட்சியின் தலைவர் சம்பந்தன் உட்பட பலர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இலங்கை சென்றுள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரனை இன்று சந்தித்து பேசுகிறார்.