கொழும்பு, செப் 23 – கடந்த சனிக்கிழமை நடைபெற்ற இலங்கை வடக்கு மாகாண தேர்தலில், தமிழ் தேசிய கூட்டமைப்பு அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. அதன் படி அக்கூட்டமைப்பின் தலைவரான முன்னாள் நீதிபதி விக்னேஸ்வரன் முதலமைச்சராகிறார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு போட்டியிட்ட 38 இடங்களில் 30 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியான வடக்கு மாகாணத்திலும், முஸ்லிம்கள், சிங்களர்கள் அதிகம் வசிக்கும் மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் கடந்த 25 ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருந்த தேர்தல் நேற்று முன் தினம் நடத்தப்பட்டது.
இத்தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் நேரடிப் போட்டியில் களமிறங்கின. தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவராக விக்னேஸ்வரனும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவராக அதிபர் ராஜபக்சேவும் செயல்பட்டனர்.ராஜபக்சேக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த டக்ளஸ் தேவானந்தாவின் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியும் இத்தேர்தலில் போட்டியிட்டது.
வாக்குப்பதிவு முடிந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கே 478 மையங்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. வடக்கு மாகாணத்தில் தபால் வாக்குகளில் இருந்தே தமிழர் தேசிய கூட்டமைப்பு முன்னணியில் இருந்தது. இறுதியில் மொத்தம் உள்ள 38 இடங்களில் 30 இடங்களை தமிழர் தேசிய கூட்டமைப்பு கைப்பற்றியது.இதில் 2 ஒதுக்கீடு இடங்களும் அடங்கும். அதிபர் ராஜபக்சேக்கு ஆதரவான டக்ளஸ் கட்சிக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை. எனினும், ராஜபக்சே கட்சிக்கு 7 இடங்களும், ஸ்ரீலங்கா முஸ்லிம் கட்சிக்கு ஒரு இடமும் கிடைத்தது.
தேர்தல் வெற்றி குறித்து, தமிழ் தேசிய கட்சியின் மாகாண கவுன்சில் உறுப்பினர் சுவாமிநாதன் கூறுகையில், ‘‘தேர்தலில் 30 இடங்களை கைப்பற்றி உள்ளோம். பிரசாரத்தின் போது, இத்தேர்தல் நமது அரசியல் ரீதியாக பிரச்னைகளுக்கு தீர்வு காணும் எங்கள் நிலைப்பாட்டை உறுதிப்படுத்திக் கொள்ள ஒரு வாய்ப்பாக இருக்கும் என்று மக்களிடம் தெரிவித்துள்ளோம். அதற்கு மக்கள் எங்களுக்கு அமோக ஆதரவு அளித்துள்ளனர்‘‘ என்றார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.பி.யும். செய்தித் தொடர்பாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறுகையில், ‘‘பிரிவினை இல்லாமல் அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்ற எங்கள் கோரிக்கைக்கு மக்கள் பெரும்பான்மை ஆதரவு அளித்துள்ளனர்‘‘ என்றார்.
தேர்தல் பிரசாரத்தின்போது, மீண்டும் விடுதலைப்புலிகள் காலத்தில் இருந்த நிலைக்கு கொண்டு செல்ல தமிழ் தேசிய கூட்டமைப்பு முயல்கிறது என்று ஆளுங்கட்சியினர் பிரசாரம் செய்தனர். அதற்கு தகுந்த பதிலடி தரும் வகையில் இந்த தேர்தல் முடிவு அமைந்துள்ளதாக கூட்டமைப்பு நிர்வாகிகள் தெரிவித்தனர்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் முதல்வராக உள்ள சி.வி.விக்னேஸ்வரன் (74), சட்டம் பயின்றவர். 1979ல் அவர் நீதித்துறை பணியில் சேர்ந்தார். அதன் பின் மாவட்ட நீதிபதியாகவும், உயர் நீதிமன்ற நீதிபதியாகவும் பதவி உயர்வு பெற்றார். 2001ம் ஆண்டு உச்ச நீதிமன்ற நீதிபதியாகவும் உயர்ந்தார். 2004ம் ஆண்டில் ஓய்வு விக்னேஸ்வரன் பெற்றார். இவரது தந்தை கனக சபாபதியும் அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்.