Home உலகம் கிரிமியா ரஷியாவுடன் இணைந்தது! 95% சதவீதத்துக்கும் மேற்பட்டோர் ஆதரவாக வாக்களிப்பு!

கிரிமியா ரஷியாவுடன் இணைந்தது! 95% சதவீதத்துக்கும் மேற்பட்டோர் ஆதரவாக வாக்களிப்பு!

663
0
SHARE
Ad

Crimea voteமார்ச் 17 – நேற்று நடைபெற்ற பொது வாக்கெடுப்பில் பெரும்பான்மையான கிரிமிய நாட்டு மக்கள் ரஷியாவுடன் இணைய வாக்களித்ததைத் தொடர்ந்து இனி அந்தப் பிரதேசம் ரஷியாவின் ஒரு பகுதியாக மாறும்.

#TamilSchoolmychoice

அளிக்கப்பட்ட வாக்குகளில் பாதிக்கும் மேற்பட்டவை எண்ணப்பட்ட நிலையில் 95 சதவீதத்துக்கும் அதிகமானவர்கள் ரஷியாவுடன் இணைவதற்கு ஒப்புதல் தெரிவித்துள்ளனர்.

மக்களுக்கு அளிக்கப்பட்ட வாக்களிப்பில் கிரிமியா தனி சுதந்திர நாடாக மாறுவது அல்லது ரஷியாவின் ஒரு பிரதேசமாக இணைவது என இரு தேர்வுகள் கொடுக்கப்பட்டிருந்தன.

கிரிமியா வாக்கெடுப்புக்கு எதிரான ஐ.நா. தீர்மானம் தோல்வி

இதற்கிடையில் கடந்த சனிக்கிழமை ஐக்கிய நாட்டு சபையின் பாதுகாப்பு மன்றத்தில் கிரிமியா வாக்கெடுப்பு ஜனநாயகமற்றது என்றும் அது நிராகரிக்கப்பட வேண்டும் என்றும் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

15 நாடுகள் கொண்ட பாதுகாப்பு மன்றத்தில் இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக 13 நாடுகள் வாக்களித்தன. சீனா நடுநிலை வகித்தது. ஆனால் ரஷியா தனது விட்டோ (Veto) எனப்படும் ரத்து அதிகாரத்தைப் பயன்படுத்தி அந்த தீர்மானத்தை தோற்கடித்தது.

பாதுகாப்பு மன்றத்தில் ஐந்து நாடுகளுக்கு விட்டோ எனப்படும் ரத்து அதிகாரங்கள் அளிக்கப்பட்டிருக்கின்றன. அமெரிக்கா, ரஷியா, சீனா, பிரிட்டன், பிரான்ஸ் என 5 நாடுகள் எந்த தீர்மானத்தையும் தோற்கடிக்கும் அதிகாரத்தைப் பெற்றுள்ளன.

இதனைத் தொடர்ந்து ரஷியாவுக்கு எதிரான பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் தயாராகி வருகின்றன.

கலவரங்கள் வெடிக்கலாம்

Crimea map 440 x 215கிரிமியா பிரதேசத்தின் பெரும்பாலான மக்கள் ரஷிய மக்களாவர். இங்கு உக்ரேன் நாட்டைச் சேர்ந்தவர்களும் நிறைய அளவில் இருக்கின்றார்கள். இவர்கள் தங்களின் பாதுகாப்பு குறித்த அச்சம் காரணமாக தற்போது உக்ரேனுக்கு திரும்பிக் கொண்டிருக்கின்றார்கள்.

இதனால், உக்ரேன் நாட்டு மக்களுக்கும் ரஷிய மக்களுக்கும் இடையில் கலவரங்கள் வெடிக்கலாம் என்ற அச்சமும் நிலவுகின்றது.

உக்ரேன் நாட்டு இராணுவ முகாம் ஒன்றும் கிரிமியா பிரதேசத்தில் இருக்கின்றது. இந்த இராணுவ முகாமிற்கு வெளியே ரஷிய துருப்புகள் குவிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

கிரிமியா மீதான தீர்மானத்தின் வாக்கெடுப்புக்கு முன்னதாக ரஷியா தனது துருப்புகளை அதிக அளவில் கிரிமியாவுக்கு அனுப்பியது என்பதும் குறிப்பிடத்தக்கது.

கிரிமியா மீதான பொருளாதாரத் தடைகள்

ஜனநாயகமற்ற முறையில் கிரிமியா பிரதேசத்தை ரஷியா இணைத்துக் கொண்டுள்ளது எனக் குற்றம் சாட்டி வரும் அமெரிக்காவும் மேற்கத்திய நாடுகளும் ரஷியாவுக்கு எதிராக பொருளாதாரத் தடைகள் விதிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆனால், இத்தகைய பொருளாதாரத் தடைகள் எவ்வளவு கடுமையாக இருக்கும் இதனால் உண்மையிலேயே ரஷியா பாதிக்கப்படுமா என்பது இனிமேல்தான் தெரிய வரும்.