கோலாலம்பூர், ஏப்ரல் 2 – ஏர் ஏசியா நிறுவனம் வரும் மே 9 ஆம் தேதிக்குள் குறைந்த கட்டண விமான நிலையத்தை (Low Cost Carrier Terminal – LCCT) விட்டு கேஎல்ஐஏ 2 புதிய விமான நிலையத்திற்கு இடம் பெயர்ந்து தான் ஆக வேண்டும் என துணை போக்குவரத்து அமைச்சர் டத்தோ அஸீஸ் கப்ராவி கூறியுள்ளார்.
மே 9 ஆம் தேதியோடு, எல்சிசிடி விமான நிலையம் காலி செய்யப்படுவதால், அங்கு சம்பந்தப்பட்ட குடிநுழைவுத்துறை அதிகாரிகள் மற்றும் சுங்கத்துறையினர் கேஎல்ஐஏ 2 – விற்கு மாற்றம் செய்யப்படுவார்கள் என்றும் அஸீஸ் தெரிவித்துள்ளார்.
நேற்று 2014 ஆம் ஆண்டிற்கான அனைத்துலக விமான நிலைய நகரங்களின் மாநாட்டில் (Airport Cities World Conference and Exhibition) கலந்து கொண்ட அஸீஸ், “எல்சிசிடி – ல் இனி எதுவும் இருக்காது” என்று கூறினார்.
ஏர் ஏசியாவிடம் இது குறித்து தெரிவித்தாகிவிட்டதா? என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, “ஆமாம், நாங்கள் தெரிவித்துவிட்டோம்” என்று அஸீஸ் பதிலளித்தார்.
முன்னதாக, ஏர்ஏசியா நிறுவனம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், கேஎல்ஐஏ 2 விமான நிலையத்தில் உள்ள சில குறைகள் சரி செய்யப்படும் வரை, ஏர் ஏசியா எல்சிசிடி – ல் தொடர்ந்து செயல்படப்போவதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
கேஎல்ஐஏ 2 திறப்பு விழா
கேஎல்ஐஏ 2 விமான நிலையத்தின் திறப்பு விழாவில், மலேசியர்கள் அனைவரும் அதனை சுற்றிப்பார்க்க அனுமதிக்கப்படுவார்கள் என்றும், விமானத்தின் ஓடுபாதை மற்றும் அடித்தளம் உட்பட பார்ப்பதற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அஸீஸ் தெரிவித்தார்.
திறப்பு விழா அன்று செபு பசிபிக், மலிண்டோ ஏர், டைகர் ஏர்வேஸ் மற்றும் மண்டாலா ஏர்லைன்ஸ் ஆகிய நான்கு விமானங்கள் கேஎல்ஐஏ 2 விமான நிலையத்தில் இருந்து புறப்படும் என்றும் அஸீஸ் தெரிவித்தார்.
கேஎல்ஐஏ 2 விமான நிலையம் கட்டி முடிப்பதற்கு, நிர்ணயித்த நிதியை விட கூடுதல் நிதி செலவழிக்கப்பட்டதாக கூறப்படுவதை அஸீஸ் மறுத்தார்.
“இறுதி நிதியறிக்கை தயாராகி விட்டது. மலேசியா ஏர்போர்ட்ஸ் நிறுவனத்தின் தகவலின் படி 4 பில்லியன் ரிங்கிட் நிதி செலவழிக்கப்பட்டுள்ளது” என்று அஸீஸ் தெரிவித்தார்.
கடந்த 2009 ஆம் ஆண்டு இந்த திட்டம் தொடங்கப்பட்டபோது 1.9 பில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கப்பட்டது. எனினும், பல காரணங்களுக்காக இந்த திட்டம் தள்ளிப் போடப்பட்டு, இறுதியாக 4.5 பில்லியனாக நிதி ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.