கோலாலம்பூர் – இன்று வியாழக்கிழமை நள்ளிரவு முதல், மலேசிய ஏர்போர்ட்ஸ் பெர்ஹாட் விதித்திருக்கும் சேவைக் கட்டணத்தை தனது பயணிகளிடம் இருந்து வசூலிப்போம் என ஏர் ஆசியா அறிவித்துள்ளது.
இதன் தொடர்பில் ஏர் ஆசியா, மலேசிய ஏர்போர்ட்ஸ் பெர்ஹாட் நிறுவனத்தின் மீது தொடுத்துள்ள வழக்கில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து ஏர் ஆசியா இந்த முடிவை எடுத்துள்ளது.
இருப்பினும் “ஆட்சேபத்துடன்தான் நாங்கள் இந்தத் தொகையை வசூலிப்போம்” என்றும் ஏர் ஆசியா தெரிவித்துள்ளது.
ஏர்ஆசியா ஒவ்வொரு பயணியிடமிருந்தும் கூடுதலாக 23 ரிங்கிட் தொகையை வசூலிக்கும். இந்தத் தொகையை ஆட்சேபத்தோடுதான் வசூலிக்கிறோம் என்றும் தனது இரசீது சீட்டில் ஏர் ஆசியா குறிப்பிடும்.
கேல்ஐஏ 2 விமான நிலையத்தில் வசதிக் குறைவுகள் இருப்பதாலும், மலிவு விலை விமானப் பயணக் கொள்கைக்கு எதிரானதாக இருப்பதாலும் இந்த பயணிகள் சேவைக் கட்டணத்தை வசூலிக்கக்கூடாது என நீண்ட காலமாக ஏர் ஆசியா எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளது.