Home அரசியல் “ஆட்சியை மாற்றுங்கள்! ஆறே மாதத்தில் அதிரடி மாற்றங்களைக் கொண்டு வருவோம் – 100 நாட்களில் இந்தியர்களின்...

“ஆட்சியை மாற்றுங்கள்! ஆறே மாதத்தில் அதிரடி மாற்றங்களைக் கொண்டு வருவோம் – 100 நாட்களில் இந்தியர்களின் குடியுரிமை பிரச்சனைக்குத் தீர்வு” – அன்வார் சவால்!

629
0
SHARE
Ad

Anwar-feature---4

பிப்ரவரி 15 – “எங்களுக்கு ஒரு வாய்ப்பு தந்து ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துங்கள். ஆறே மாதத்தில் வியக்கத்தக்க மாற்றங்களை நாட்டில் மக்கள் கூட்டணி ஆட்சியின் கீழ் ஏற்படுத்திக் காட்டுவோம். அதே வேளையில் பதவியேற்ற 100 நாட்களுக்குள் நாடற்ற இந்தியர்களின் பிரச்சனைகளையும், குடியுரிமை கிடைக்காமல் தடுமாறும் இந்தியர்களின் பிரச்சனைகளையும் தீர்த்து வைப்போம்” என மக்கள் கூட்டணியின் தலைவர் அன்வார் இப்ராகிம் சவால் விடுத்துள்ளார்.

நேற்று இரவு நடைபெற்ற “அன்வாருடன் விவாத மேடை” நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போதே அன்வார் இவ்வாறு கூறினார்.

#TamilSchoolmychoice

மக்கள் ஓசை நாளிதழின் ஆசிரியர் எம்.இராஜன் “100 நாட்களுக்குள் இந்தியர்களின் குடியுரிமை பிரச்சனையை தீர்த்து விடுவேன் என்று கூறி வருகிறீர்கள். சுடச்சுட குடியுரிமைகளை அச்சடித்து தரப் போகிறீர்களா என்று உங்களிடம் சில தேசிய முன்னணி தலைவர்கள் கேள்வி கேட்டுள்ளார்கள். இதனை எப்படி தீர்த்து வைப்பீர்கள்?” என்ற கேள்வியை அன்வாரின் முன் வைத்தார்.

அதற்கு பதிலளித்த அன்வார் இப்ராகிம், நாங்கள் பதவியேற்றவுடன் அனைத்து விண்ணப்பங்களையும் மறு பரிசீலனை செய்வோம். விண்ணப்பம் செய்தவர்களுக்கு முறையான ஆவணங்கள் இருப்பின் அந்த விண்ணப்பங்களை உடனடியாக நாங்கள் அங்கீகரிப்போம் என்றும் அன்வார் உறுதியுடன் கூறினார்.

“எங்களுக்கு ஒரு வாய்ப்பு தந்து ஆட்சியில் அமர்த்துங்கள். ஆறே மாதத்தில் வியக்கத்தக்க மாற்றங்களை நாட்டிலும் மலேசியர்களின் வாழ்விலும் கொண்டு மக்கள் கூட்டணி ஆட்சியின் கீழ் கொண்டு வருவோம்” என்ற உறுதி மொழியையும் அன்வார் வழங்கினார்.

இந்தியருக்கு துணைப் பிரதமர் பதவியா?

மக்கள் கூட்டணி ஆட்சியில் இந்தியருக்கு துணைப் பிரதமர் பதவி வழங்குவீர்களா, இந்தியர்களுக்கான அமைச்சரவைப் பிரதிநிதித்துவம் எப்படி இருக்கும் என கேட்கப்பட்ட மற்றொரு கேள்விக்கு பதிலளித்த அன்வார், “ எத்தனை அமைச்சர்கள் இந்தியர்களுக்கு இருக்கிறார்கள் என்பது முக்கியமில்லை. அவர்களால் இந்தியர்களின் பிரச்சனை தீர்க்கப்படுகிறதா என்பதுதான் முக்கியம். எனவே, நான் நேரடியாக தலையிட்டு இந்தியர்களின் பிரச்சனைகளை கவனிப்பேன். எங்களின் திட்டங்களால், இந்தியர்களின் பிரச்சனைகள் கூடிய விரைவில் தீர்க்கப்படும்” என்று கூறினார்.

மக்கள் கூட்டணி தலைமைத்துவத்தில் இந்தியர் தலைவர் ஒருவர் இல்லை என்ற ஆதங்கத்தை ஒரு கேள்வி மூலம் வெளிப்படுத்தியபோது, தற்போது பிகேஆர் கட்சி சார்பில் இந்தியர் நலன்களைத் தான் கவனித்து வருவதாகவும், பல பிகேஆர் மற்றும் ஜசெக தலைவர்கள் இந்தியர்களின் பிரச்சனைகளுக்காக போராடி வருகின்றனர் என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.

அதே வேளையில் இந்தியர்களின் குடியுரிமை, குற்றச் செயல்கள் அதிகரிப்பு, போலீஸ் காவலில் மரணம், கல்வி வாய்ப்புகள் போன்ற பிரச்சனைகளை மக்கள் கூட்டணி இந்தியர்களின் பிரச்சனையாக மட்டும் பார்க்காமல், மலேசியர்களின் பிரச்சனையாக பார்க்கிறது. எனவே, அந்த கண்ணோட்டத்தில் இவற்றை நாங்கள் அணுகி தீர்த்து வைப்போம் என்றும் அன்வார் தெரிவித்தார்.

பத்திரிக்கைகளுக்கு முழு சுதந்திரம்

மக்கள் கூட்டணி ஆட்சி ஏற்பட்டு தான் பிரதமரானால், பத்திரிக்கைகளுக்கும் ஊடகங்களுக்கும் முழு சுதந்திரம் அளிக்கப்படும் என்றும் தன்னைப் பற்றி விமர்சிப்பதற்கும் குறைபாடுகளை சுட்டிக் காட்டுவதற்கும் வாய்ப்பும் சுதந்திரமும் வழங்கப்படும் என்றும் அன்வார் குறிப்பிட்டார்.

தற்போது தன்னைப் பற்றி எதிர்மறையான விமர்சனங்களுக்கு மணிக்கணக்காக நேரத்தை செலவிடும் அரசு சார்பு ஊடகங்கள், அதற்கு தற்காத்து பதிலளிக்க தனக்கு ஒரு நிமிடம் கூட நேரம் ஒதுக்குவதில்லை என்றும் குறிப்பிட்டார்.

இந்த விவாத மேடை நிகழ்வில் பொதுமக்களும் ஆதரவாளர்களுமாக சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

–    இரா.முத்தரசன்