சென்னை, ஏப்ரல் 24 – தமிழ்நாடு முழுவதும் இன்று நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்குச் சாவடிகள் அனைத்திலும் கடும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பதட்டமான வாக்குச்சாவடிகளில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 28,224 மையங்களில் 60,818 வாக்குச் சாவடிகள் உள்ளன. இவற்றில் 34,209 காவல்துறையினர் மற்றும் ஊர்காவல் படை, ஓய்வு பெற்ற காவலர்கள், முன்னாள் ராணுவத்தினர் என 26,609 பேர் வாக்குச் சாவடி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சில முக்கிய வாக்குச் சாவடிகளில் 5,000 போலீசார் கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதே வேளையில், வாக்குப்பதிவு முடிந்து வாக்கு மின்னணு வாக்கு இயந்திரங்களை பாதுகாப்பாக எடுத்துச் செல்வதற்கு ஆயுதப் படையைச் சேர்ந்த சுமார் 14,000 காவல்துறையினர் அமர்த்தப்பட்டுள்ளனர்.
இவை தவிர வாக்குச் சாவடிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு கொடுப்பதற்காக தமிழ்நாடு சிறப்பு காவல் படையினரும், மாவட்ட ஆயுதப்படை போலீசாரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ் நாட்டில் மொத்தம் 1,170 காவல் கண்காணிப்பு குழுக்களும், 2,340 காவலர்களும், 3510 தமிழ்நாடு காவல் இளைஞர் படையைச் சேர்ந்தவர்களும் பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மின்னணு வாக்கு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள இருப்பறைகளுக்கு 468 காவலர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். இது தவிர 6,000 அதிரடிப்படையினர் எவ்வித அசம்பாவிதங்களும் நடைபெறாமல் தடுப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ளனர்.
பாதுகாப்புக்காக 1,16,000 காவலர்களும், 27,000 சீருடை அணிந்த காவல் துறை அல்லாத காவலர்கள் என மொத்தம் 1 லட்சத்து 43,000 பேர் தமிழகம் முழுவதும் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் வாக்கு சாவடிகள் மற்றும் அதன் வெளிப்புறங்களில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.