நியூயார்க், ஏப்ரல் 26 – கூகுளின் சமூக வலைத்தளமான ‘கூகுள் பிளஸ்’ (Google+) – ன் தலைவரான இந்தியாவை சேர்ந்த விவேக் ‘விக்’ குண்டோத்ரா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
கூகுள் நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவராகவும், 3 ஆண்டுகளுக்கு முன்னர் துவங்கப்பட்ட கூகுள் பிளசின் தலைவராகவும் பொறுப்பு வகித்த குண்டோத்ரா தான் கூகுளிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். கூகுளில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வந்த அவர், தனது விலகலுக்கான காரணம் குறித்தோ, தனது அடுத்த கட்டத் திட்டம் பற்றியோ தகவல் எதுவும் தெரிவிக்கவில்லை.
ராஜினாமா செய்துள்ள குண்டோத்ரா பற்றி அந்நிறுவனத்தின் தலைமை அதிகாரியான லேரி பேஜ் எழுதியுள்ள கடிதத்தில் கூறியதாவது:- “கூகுளில் உங்களது எட்டு வருட உழைப்பிற்கு மிக்க நன்றி. ஒன்றுமேயில்லாமல் இருந்த கூகுள் பிளஸை நீங்கள் பெருமளவு உயர்த்தியிருக்கிறீர்கள். இது போன்ற கடினமான முயற்சியை ஒரு சிலரால் மட்டுமே செய்யமுடியும். அந்த வகையில் உங்களுடைய கடின உழைப்பும், விடா முயற்சியும் பாராட்டத்தக்கது” என்று கூறியுள்ளார்.
கூகுளின் போட்டியாளரான பேஸ்புக்கில் 1.3 பில்லியன் உறுப்பினர்கள் இணைந்துள்ள நிலையில், கூகுள் பிளசில் 500 மில்லியன் உறுப்பினர்கள் மட்டுமே இதுவரை இணைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.