Home India Elections 2014 கவனிக்கப்படும் வேட்பாளர்கள் 13 : நடிகை ரோஜா நகரி தொகுதியில் பூப்பாரா?

கவனிக்கப்படும் வேட்பாளர்கள் 13 : நடிகை ரோஜா நகரி தொகுதியில் பூப்பாரா?

1188
0
SHARE
Ad

மே 4 – வெளி மாநிலங்களிலிருந்து தமிழ் நாட்டுக்கு வந்து, தமிழ்ப் படங்களில் வெற்றிக் கொடி நாட்டிவிட்டு, பின்னர் அரசியலிலும் ஒரு கலக்கு கலக்கும் குஷ்பு போன்ற நடிகைகளுக்கு மத்தியில் நடிகை ரோஜா வித்தியாசமானவர்.

#TamilSchoolmychoice

ஆந்திராவில் இருந்து “செம்பருத்தி படத்தின் வழி முதன் முதலாக தமிழில் இறக்குமதியாகி, பின்னர் பல தமிழ்ப் படங்களில் கதாநாயகியாக முன்னணி கதாநாயகர்களுடன் வலம் வந்தார்.

தன்னை தமிழில் அறிமுகப்படுத்திய இயக்குநர் செல்வமணியையே திருமணம் புரிந்தவர், அரசியல் என்று வந்தபோது மீண்டும் தனது தாய் மாநிலமான ஆந்திராவுக்கே திரும்பி விட்டார்.

நகரி தொகுதியில் ரோஜா…

இந்த பொதுத் தேர்தலில் ஆந்திர மாநிலம் நகரி சட்டமன்றத் தொகுதியில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் வேட்பாளராக நடிகை ரோஜா போட்டியிடுகிறார்.

தமிழ் நாட்டு எல்லையை அடுத்துள்ள சிற்றூர் மாவட்டத்தில் உள்ள தொகுதி நகரியாகும். தெலுங்கானா மாநிலம் தனியாகப் பிரிந்து விட, சீமந்திரா மாநிலத்தின் கீழ் வருகின்றது நகரி தொகுதி.

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியை ஜெகன் மோகன் ரெட்டி தொடங்கிய போதே நகரி சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக ரோஜா அறிவிக்கப்பட்டார். கட்சியின் முதல் கட்ட வேட்பாளர் என்ற பெருமையுடன் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக ரோஜா அந்தத் தொகுதியில் முகாமிட்டு பல்வேறு பணிகளை செய்து வருகிறார்.

படிக்க வசதியில்லாத ஏழை குழந்தைகளை தத்தெடுத்து அவர்களுக்கு தனது சொந்த செலவில் மாதம் 300 ரூபாய் கல்வி உதவியாக வழங்கி வருகிறார். சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலிலும் வீதி வீதியாக சென்று பிரச்சாரம் செய்தார்.

நடிகை ரோஜாவை எதிர்த்து தெலுங்கு தேசம் கட்சி சார்பில் முன்னாள் அமைச்சர் முத்து கிருஷ்ணநாயுடு போட்டியிடுகிறார். இவர் இந்த தொகுதியில் 6 முறை வெற்றி பெற்றவர். நீண்ட அரசியல் அனுபவம் கொண்டவர்.

காங்கிரசும் இந்த தொகுதியில் போட்டியிட்டாலும் இங்கே ரோஜாவுக்கும், முத்து கிருஷ்ணநாயுடுவுக்கும் இடையேதான் போட்டி கடுமையாக உள்ளது.

நடிகை என்பதால் ரோஜாவுக்கு தொகுதி மக்களிடம் செல்வாக்கு உள்ளது. அவர் எளிமையான முறையில் ஒவ்வொரு வீடாக சென்று ஆதரவு திரட்டுகிறார். குடிசை வீடுகளில், அவர்கள் சாப்பிடும் உணவை கேட்டு வாங்கி சாப்பிடுகிறார்.

இந்த தொகுதியில் தமிழர்கள் அதிகம் உள்ளனர் என்பதால் தமிழ்  நடிகை என்ற முறையில் அவர்களிடத்தில் நன்கு அறிமுகமான ரோஜாவுக்கு சாதகமான சூழ்நிலை தமிழ் வாக்காளர்களிடத்தில் நிலவுகின்றது.

போதாக் குறைக்கு, ரோஜாவின் கணவர் இயக்குனர் செல்வமணியும் (படம்)  மனைவி ரோஜாவின் வெற்றிக்காக தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளார். தமிழர்கள், நெசவாளர்கள் வீடுகளுக்கு சென்று ஆதரவு திரட்டி வருகிறார்.

பிரச்சாரத்தில் மயங்கி விழுந்த ரோஜா

இதற்கிடையில் நேற்று வெள்ளிக்கிழமை தேர்தல் பிரச்சாரத்தின் போது கோடை வெயிலின் கொடுமை தாங்காமல் மயங்கி விழுந்த ரோஜாவுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது என தகவல் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஆந்திர மாநிலத்தின் சீமாந்திராவில் எதிர்வரும் மே 7-ம் தேதி, 175 சட்டமன்றம், 25 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.

25-jaganmohan-reddy-600

ஜெகன் மோகன் ரெட்டி….

பலரும் எதிர்பார்த்தது போல் இல்லாமல், காலமான முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன் மோகன் ரெட்டியின் தலைமையிலான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் இந்த பொதுத் தேர்தலில் ஏனோ பின்னடைவுகளைச் சந்தித்து வருகின்றது.

அதற்கு முக்கிய காரணம் சந்திரபாபு நாயுடு – பாஜக கூட்டணியால், ஆந்திர மாநிலத்தில் ஏற்பட்டுள்ள புதிய எழுச்சி அலைதான்.

இரண்டு தலைவர்களுமே, மேம்பாட்டைக் குறி வைத்து பிரச்சாரம் செய்பவர்கள் என்பதால் – அதிலும் சந்திரபாபு நாயுடு (படம் – கீழே) ஏற்கனவே முதல்வராக ஆந்திராவில் வளர்ச்சியைக் கொண்டு வந்து நிரூபித்துக் காட்டியவர் என்பதால் –

மாநிலத்தில் நாயுடு – மத்தியில் மோடி – என்ற வெற்றி முழக்கம் ஆந்திர மாநிலம் முழுவதும் எதிரொலித்து வருகின்றது.

புதிதாகத் தோற்றுவிக்கப்பட்ட தெலுங்கானா மாநிலத்தில் மட்டும் – புதிய மாநில உருவாக்கத்திற்காகப் பாடுபட்டவர் என்ற முறையில் கே.சந்திரசேகர் ராவ் தலைமையிலான கட்சி வெற்றி வாகை சூடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

தெலுங்கானாவில் கடந்த மே 30ஆம் தேதி வாக்கெடுப்பு முடிந்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Chandrababu-Naidu-196இந்நிலையில், நாயுடு-மோடி அலையையும் மீறி நகரி நாடாளுமன்றத் தொகுதியில் ரோஜா வென்று காட்டி – தனது நடிகை என்ற செல்வாக்கை நிலைநாட்டி ஆந்திராவில் சரித்திரம் படைப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளதால் –

ஆந்திரா முழுவதிலும் கவனிக்கப்படும் வேட்பாளர்களில் ஒருவராக ரோஜா மாறியுள்ளார்.

அப்படியே பெரும்பான்மையான சட்டமன்றத் தொகுதிகளில் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று சீமந்திராவில் மாநில அரசாங்கத்தை அமைக்கும் வாய்ப்பைப் பெற்றால் –

மாநில அரசாங்கத்தில் அமைச்சராகவோ, அல்லது மற்ற முக்கிய பதவியையோ ஏற்பார் என்ற எதிர்பார்ப்பும் கூடியிருப்பதால்,

ரோஜா, ஆந்திர மாநிலத்தின் கவனிக்கப்படும் வேட்பாளர்களில் ஒருவராக உருமாறியுள்ளார்

-இரா.முத்தரசன்