பெங்களூர் – ஆந்திர சட்டசபைக்குள் நுழையவிடாமல் காவலர்கள் தடுத்து நிறுத்தியதால் திடீரென நடிகை ரோஜா மயக்கம் அடைந்தார். இதைத் தொடர்ந்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஆந்திர மாநிலம் நகரி சட்டசபை தொகுதியில் இருந்து ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் நடிகை ரோஜா. இவர் கடந்த ஆண்டு, சட்டசபை கூட்டத் தொடரின்போது முதல்வர் சந்திரபாபு நாயுடுவை அவதூறாக பேசியதாக கூறி, சபாநாயகர் சிவபிரசாத் ராவால் சபையில் இருந்து ஓராண்டு இடை நீக்கம் செய்யப்பட்டார்.
இதை எதிர்த்து ரோஜா தொடர்ந்த வழக்கில், ஆந்திர சட்டசபை சபாநாயகர் விதித்த ஓராண்டு நீக்கத்துக்கு இடைக்கால தடை விதித்து ஆந்திர உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனைத் தொடர்ந்து சட்டசபை கூட்டத்தொடரில் கலந்து கொள்ள நடிகை ரோஜா நேற்று காலை வந்தார்.
ஆனால் அவரை சபைக்குள் நுழைய விடாமல் சபைக் காவலர்கள் தடுத்து நிறுத்தினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் உறுப்பினர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இன்று சட்டப்பேரவைக்குள் செல்ல முயன்ற ரோஜா மீண்டும் தடுத்து நிறுத்தப்பட்டார். இதனைத் தொடர்ந்து ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் பெண் சட்டமன்ற உறுப்பினர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, ரோஜாவுக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அங்கிருந்த தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர்.