புதுடெல்லி – நடிகை ரோஜா ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு நகரி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஆந்திர சட்டசபை விவாதத்தின் போது, முதல்வர் சந்திரபாபு நாயுடுவை தரக்குறைவாக பேசியதாக கூறி, சபையில் இருந்து ரோஜாவை ஒரு ஆண்டு காலம் இடைநீக்கம் செய்து சபாநாயகர் கோடல சிவபிரசாத்ராவ் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உத்தரவிட்டார்.
சபாநாயகரின் உத்தரவை எதிர்த்து ஐதராபாத் உயர்நீதிமன்றத்தில் ரோஜா மனு தாக்கல் செய்தார். அவருடைய மனுவில் சில குறைபாடுகள் உள்ளதாக திருப்பி அனுப்பப்பட்டது.
இதனால் உச்சநீதிமன்றத்தில் ரோஜா மேல்முறையீடு செய்தார். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தங்கள் உத்தரவில், சபாநாயகரின் உத்தரவு சட்டத்துக்கு புறம்பானது.
மனுதாரரின் மனுவை ஆந்திரா உயர்நீதிமன்ற துணைப்பதிவாளர் தலைமை நீதிபதியின் விசாரணைக்கு ஏன் முன்வைக்கவில்லை? எனவே மனுதாரர் மனுவை உடனடியாக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியின் பரிசீலனைக்கு வைக்க வேண்டும். விசாரணை நடைபெற வேண்டும் என்று கூறினார்.