வாடிகன் – மறைந்த அன்னை தெரசாவிற்கு புனிதர் பட்டம் வழங்க போப் பிரான்சிஸ் ஒப்புதல் அளித்துள்ளார். ஏழை, எளிய மக்களுக்கு சேவையாற்றுவதையே தனது வாழ்நாளில் கடமையாக கருதி பணியாற்றி வந்தவர் அன்னை தெரசா.
பல்வேறு நாடுகளின் உயரிய விருது மற்றும் நோபல் பரிசு பெற்ற அன்னை தெரசா கடந்த 1997-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5-ஆம் தேதி தனது 87-ஆவது வயதில் கொல்கத்தாவில் காலமானார்.
அன்னை தெரசா, மறைவுக்கு பின்னர், அவர் அற்புதங்களை நிகழ்த்தியது சாட்சிகளுடன் நிரூபிக்கப்பட்டது. இதனால் அவருக்கு புனிதர் பட்டம் வழங்கப்பட வேண்டும் என்று போப்பாண்டவரிடம் விண்ணப்பிக்கப்பட்டது.
இதை வாடிகன் தலைமையகம் பரிசீலித்து வந்தது. இந்நிலையில், அன்னை தெரசாவிற்கு புனிதர் பட்டம் வழங்க போப் பிரான்சிஸ் ஒப்புதல் அளித்துள்ளார். வரும் செப்டம்பர் மாதம் 4-ஆம் தேதி, நடைபெறும் நிகழ்ச்சியில் அவருக்கு புனிதர் பட்டம் வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
அன்னை தெரசா மறைந்து சுமார் 19 ஆண்டுகள் கழிந்த நிலையில் அவருக்கு புனிதர் பட்டம் வழங்கப்படவுள்ளது. அன்னை தெரசாவுக்கு புனிதர் பட்டம் அறிவிக்கப்பட்டதையடுத்து, கொல்கத்தாவில் உள்ள “மிஷனரி ஆஃப் சாரிட்டி’ அமைப்பின் தலைமையகமான அன்னை இல்லத்தில் செவ்வாய்க்கிழமை, கொண்டாட்டங்கள் களைகட்டின.
தெரசாவுக்கு புனிதர் பட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது எங்கள் அமைப்பைச் சேர்ந்த அனைவரையும் பெருமகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது என தெரிவித்தார்கள்.